Daily Hosur News · Video
Is Sishya School a Roadblock for the Thali Road Railway Bridge? Unanswered Questions for the Highways Department
விளக்கம்
An in-depth look at the stalled railway overbridge project connecting Thali Road and the Inner Ring Road. Featuring exclusive responses from the school management, claims from Southwest Railway, and a public list of questions directed at the Divisional Engineer of the Tamil Nadu Highways Department.ஓசூர் தளி சாலை - உள்வட்ட சாலை பகுதி ரயில்வே மேம்பாலம் கட்டப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு அருகிலுள்ள "சிஷ்யா பள்ளி" காரணமா? பாலம் கட்டப்படாமல் இருப்பதற்கு அந்த தனியார் பள்ளி முட்டுக்கட்டையாக இருப்பதாக கூக்குறலிட்டு கூறுகிறார்கள் தென்மேற்கு ரயில்வே துறையினர்!
ஓசூர் ஆன்லைன் சார்பில் நாமும் அப்பள்ளி தாளாளர் உள்ளிட்ட அறங்காவலருக்கு இது தொடர்பில் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தோம். அதற்கு தொலைபேசி மூலம் பதில் அளித்த பள்ளியின் தாளாளர், "இந்த பாலம் அமையுமேயானால், பள்ளி வளாகத்திற்கான பாதைகள் முடங்கும். மேலும் நாங்கள் ஏற்கனவே உள்வட்டச் சாலைக்காக ஏராளமான எமது நிலத்தை இழந்துள்ளோம். கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடை தர, அறங்காவலர் குழு கூட்டம் நடத்தி முடிவெடுத்த பின்பே தெரிவிக்க முடியும்" எனக் கூறினார்.
இந்த பாலம் குறித்து தகவல் தெரிந்து கொள்ள, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளருக்கு விளக்கங்கள் கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில், பதில் அளிக்காததால், அனுப்பிய கேள்விகளை பொதுவெளியில் முன் வைக்கிறோம்:
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து மண் ஆய்வு, முன்மொழிந்த திட்டத்தை மீண்டும் மீண்டும் மாற்றி அமைத்தல், இந்தப் பாலத்திற்காக அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த பல கோடி ரூபாய், ரயில்வே துறையிடமிருந்து பலமுறை பெறப்பட்ட திட்ட அனுமதி, இவையெல்லாம் தங்களது அலுவலகத்தால் கிடப்பில் போடப்பட்டிருப்பது ஏன்?
பலமுறை ரயில்வே நிர்வாகம், நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்க கோரிக்கை விடுத்தும், இதுவரை அது தொடர்பில் தங்களது அலுவலகம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் மௌனம் காப்பததன் பின்னணி என்ன?
பாலம் கட்டச் சொன்னால், ரயில்வே கிராசிங் அருகே தளி சாலையை மூடியதன் உள்நோக்கம் என்ன?
ஒரு தனியார் பள்ளி, அழுத்தங்கள் கொடுப்பதாக ரயில்வே துறை அலுவலர்கள் கூறுவதில் உண்மைதன்மை இருக்கிறதா?
பொதுமக்கள் மீது அக்கறை இருந்தால் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின் ஓசூர் கோட்ட பொறியாளர் பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தம்மிடம் இருக்கும் கோப்புகளை, யாருடைய அழுத்தங்களுக்கும் பணியாமல் தூசி தட்டி எடுப்பார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் பொதுமக்கள்!