HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  Hosur Overbridge - Economic Impact and Growth - ஓசூர் புதிய பேருந்து நிலையம் & 1.25 கி.மீ. மேம்பாலம்
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Overbridge - Economic Impact and Growth - ஓசூர் புதிய பேருந்து நிலையம் & 1.25 கி.மீ. மேம்பாலம்

ஓசூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானம் மற்றும் அதன் எதிரே வர இருக்கும் ஒன்றே கால் கிலோ மீட்டர் நீளத்திற்கான மேம்பாலம். இவை, ஓசூர் பொருளாதார வளர்ச்சியில் எத்தகைய பங்களிப்பை வழங்க போகிறது என்பது குறித்த ஒரு சிறப்பு பார்வை! 

கடந்த 30 ஆண்டுகளில், தமிழகத்தின் எந்த நகரமும் அடையாத வளர்ச்சியை, ஓசூர் கண்டுள்ளது. 

1980 வரையிலும், ஓசூர் பேருந்து நிலையம், இப்போதைய ஓசூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள, காந்தி சிலை அருகே, பேருந்து நிறுத்தமாக அமைந்திருந்துள்ளது. 

பேருந்துகள், எம் ஜி சாலை, பழைய பெங்களூர் சாலை வழியாக சென்று வந்துள்ளன. 

தொழிற்சாலை நகரமாக ஓசூர் வளர துவங்கிய நிலையில், நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 1980 ஆண்டுகளின் துவக்கத்தில், பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. 

பின்னர், 2010 ஆம் ஆண்டு வாக்கில், ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்களை அகற்றி விட்டு, சுமார் 11 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டுமானங்களுடனான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. 

ஓசூர் பேருந்து நிலையத்தை, நாளொன்றுக்கு சுமார் 50,000 பயணிகள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.   நீண்ட விடுமுறை நாட்களில், ஓசூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்து சென்று விடுகிறது.  

ஓசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் வண்டிகள் பயணிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. விடுமுறை நாட்களில், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக திகழ்கிறது. 

ஓசூர் பேருந்து நிலையத்தின் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, பத்து ஏக்கர் பரப்பளவில், முப்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டி, புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள், விரைவாக நடைபெற்று வருகிறது.

ஓசூரில், கட்டுமானம் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலை 44, ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது.  

தமிழ்நாட்டின் முதன்மையான காய்கறி சந்தைகளில் ஒன்றான பத்தலபள்ளி காய்கறி சந்தை, ஓசூரின் இரண்டாவது சிப்காட், உள் வட்டச் சாலை, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ள பகுதியில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 

10 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 81 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையிலும், அடிப்படை கட்டமைப்புகள் உள்ளடக்கிய வகையிலும், ஓசூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 

பேருந்துகள் உள்ளே நுழைந்து, வெளியே செல்வதற்கு என இரண்டு வழிகளை கொண்டதாகவும், ஒவ்வொன்றும் 40 அடி அகலம் கொண்டதாகவும் அமைகிறது. 

பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, பேருந்து நிலையம் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும், நெடுஞ்சாலையில் பட்டர்ஃபிளை மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்தனர்.  

அதைத்தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், பட்டர்பிளை மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்தது. 

தேவைகளை ஆய்வு மேற்கொண்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், ஒன்னேகால் கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம், பேருந்து நிலையம் எதிரே, நெடுஞ்சாலையில் கட்ட முடிவு செய்துள்ளது. 

பேருந்துகள் உள்ளே சென்று வெளியே வரும் பகுதியில், பாலத்திற்கு கீழே இரண்டு வழிகள் 40 அடி அகலத்திற்கு விடுவது எனவும், மேற்கொண்டு ஒரு வழி, இரண்டாவது சிப்காட் தொழிற்பேட்டை அருகே அமைப்பது எனவும் முடிவெடுத்து, அதற்கான வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.

ஓசூர் புதிய பேருந்து நிலையமும், அதற்காக கட்டப்பட இருக்கும் இந்த புதிய மேம்பாலமும், விரைவாக கட்டி முடிக்கப்பட்டால், ஓசூரின் சாலைப்போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும்.  

மேலும், இந்த புதிய கட்டுமானங்கள், ஓசூரின் பொருளாதாரம் வளர்ச்சியை மேலும் விரைவுப்படுத்தும்,  என தன்னார்வலர்கள் கருத்து கூறுகின்றனர். 

வெளியூர்களில் இருந்து வேலைக்காக ஓசூரை தேடி வருபவர்களுக்கு, இந்த புதிய பேருந்து நிலையமும், கட்டப்பட இருக்கும் மேம்பாலமும் பெருமளவு பயனளிக்கும். 

தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள, உலகளாவிய திறன் வழிச்சாலை, புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா, விமான நிலையம், மெட்ரோ ரயில் திட்டம், வட்ட ரயில்வே தடம், போன்ற திட்டங்களுக்கு, கட்டப்பட இருக்கும் இந்த புதிய மேம்பாலம், போக்குவரத்து நெரிசலை குறைத்து, பெருமளவு உதவும்.

ஓசூர் நகர் வளர்ச்சி, இந்த புதிய பேருந்து நிலையம் மற்றும் மேம்பாலத்தால், குறுகிய வட்டாரத்தில் என்றில்லாமல், பறந்து விரிந்த நகரமாக வளர்ச்சி அடைய வழிவகை செய்யும். 

இதனால், துப்புரவு சார்ந்த கட்டுமானம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து நெரிசல் போன்ற பொதுவாக பெருநகரங்களில் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகள், ஓசூர் நகரை பொறுத்தவரை தவிர்க்கப்படும். 

விரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த புதிய பேருந்து நிலையமும் மேம்பாலமும் கிடைக்கும்.

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்