HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  Hosur Hill Temple Road Project - Impact on Tourism ஓசூர் மலைக்கோவிலுக்கு புதிய சாலை and Obeservatory
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Hill Temple Road Project - Impact on Tourism ஓசூர் மலைக்கோவிலுக்கு புதிய சாலை and Obeservatory

ஓசூர் மலைக்கோவிலுக்கு புதிய சாலை, வானாய்வு நிலையம் Obeservatory: ஓசூர் சுற்றுலாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஓசூர் மலைக்கோவிலுக்கு புதிய சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.  பிரம்ம தேவர் மலையின் முகட்டில், புதிதாக, வானாய்வு நிலையம் Observatory அமைக்கப்பட இருக்கிறது. புதிய சாலையும், வானாய்வு நிலையமும் கட்டி முடிக்கப்பட்டால், ஓசூரின் சுற்றுலா தேவைகள் மற்றும் சிறு குறு விற்பனையாளர்களுக்கான தற்சார்பு பொருளாதாரத்திற்கான வழிவகைகளையும், எவ்வாறு ஏற்படுத்தும் என்பது குறித்த ஒரு பார்வை!

ஓசூரில் சிவபெருமானுக்கு சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில், பெருமாளுக்கு வெங்கட்ரமண சுவாமி மலைக்கோவில், பிரம்மனுக்கு பிரம்மா மலை கோவில், என மூன்று மலைகளில், மூன்று கோவில்கள் அமைந்துள்ளன. 

இந்த மூன்று மலைக்கோவில்களில், மூன்றாவதாக அமைந்துள்ளது, பிரம்மா மலை கோவில், சுமார் 15 ஆண்டுகளாக, பல தன்னார்வலர்களால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த மலையின் சிறப்பு என்னவென்றால், இந்த மலையில், அருள்மிகு பிரம்ம தேவர், திருமூலர் திரு சக்கரம், குகை சிவாலயம் என கடந்த சில ஆண்டுகளுக்குள் புதிதாக கட்டப்பட்ட வழிபாட்டு இடங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில், மலையின் பகுதிகளை பல்வேறு அமைப்பினர் ஆக்கிரமிப்பதாக கருதிய தமிழ்நாடு அரசு, மலையை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

மலைமுகட்டில் அமைந்துள்ள பிரம்ம தேவர் கோவிலைச் சென்றடைய, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, தன்னார்வலர்களின் உதவியால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலை வசதி அமைத்துத் தர, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  

ஓசூர் மாநகராட்சி சார்பில், மாநகராட்சி ஆணையராக திரு H. S. Srikanth  IAS பணியாற்றிய போது, மலையின் மேல், வானாய்வு நிலையம், Observatory அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, முதல் கட்டமாக, சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.  

சாலை அமைக்கும் பணி நிறைவடைந்து, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, பிரம்ம மலை அறக்கட்டளையின், தன்னார்வலர் சக்திவேல் ஓசூர் ஆன்லைனிடம் தெரிவித்தார்.

சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் வானாய்வு நிலையமும் கட்டப்பட்டால், மாணாக்கர்களுக்கு, சிறந்த பயனைத் தரும், என தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஏற்கனவே, ஓசூர் சந்திர சுடேஸ்வரர் மலை கோவில் அருகே, பூங்காவும், வானாய்வு நிலையமும் செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில், அவை இரண்டும், அரசு அலுவலர்களால் மராமத்து பணி செய்யாமல் கைவிடப்பட்ட நிலையில், வீணடிக்கப்பட்ட கிடக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சாலை வசதியும் வானாய்வு நிலையமும், பிரம்ம மலை மீது கட்டி முடிக்கப்படும் பொழுது, ஓசூர் மக்களின் சுற்றுலா மைய தேடல்களுக்கு, ஒரு தீர்வாக இது அமையும். 

இந்த மலையின் அருகே, நம் தொன்மை மரபு சார்ந்த உணவுப் பொருட்கள் விற்பதற்கான கடைகளும் அமையுமேயானால், ஓசூர் வாழ் மக்களின் உடல் நலனிற்கும், இறைவழிபாட்டுடன் கூடிய பொழுதுபோக்கிற்கும், சிறந்த வழிவகையை ஏற்படுத்தும். 

ஓசூர் ராயக்கோட்டை சாலையில், அமைந்துள்ள இந்த பிரம்ம மலைக்கு, நாள்தோறும் மக்கள் வந்து செல்லாத நிலையில், புதிய சாலை வசதியும், வானாய்வு நிலையமும் கட்டப்படுவதால், நாள்தோறும் இப்பகுதி மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியாக விரைவில் மாறும். 

இதனால், இப்பகுதி சிறிய அளவிலான தொழில் முதலீடுகளைக் கொண்ட, சிறு விற்பனையாளர்களுக்கு தற்சார்பு பொருளாதார வாய்ப்பு ஏற்படும்.

இதை அரசு கவனத்தில் கொண்டு, பிரம்மமலையை மேம்படுத்தும் முயற்சியோடு சேர்த்து, கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு வாழ்வாதாரம் அமைவதற்கான வழிவகைகளை, திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மூன்று மலைக் கோவில்களையும் இணைக்கும் விதமாக, சிறிய பேருந்துகளை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில், வெள்ளி, காரி (சனி) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கினால், ஓசூர் மக்களுக்கு பெருமளவு பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய சூழலில், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வண்டிகளால், பிரம்ம தேவர் கோயிலின் மலை முகடு வரை சென்று வர இயலும்.  படிக்கட்டுகளில் ஏறி, மலையின் முகட்டை அடைய விரும்புவோர்களுக்கு, அகலமான, பாதுகாப்பான படிக்கட்டுகளும் உள்ளன. 

இப்போது இந்த மலை, இயற்கைச் சூழல் மாறாது, காட்சியளித்து வருகிறது.  குடும்பத்துடன், அரை நாள் பொழுதை, எளிதாக இங்கே கழிக்கலாம். 

ஒரு முறை பிரம்ம மலைக்கு வந்து சுற்றிப் பார்த்து, உங்களது கருத்துக்களை, இந்த காணொளியின் கமெண்ட் செக்ஷனில் பதிவிட வேண்டுகிறோம்.

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்