HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  ஓசூர் உணவகங்களில், புற்றுநோய் ஏற்படுத்தும், சில்வர் நிற கவர்
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் உணவகங்களில், புற்றுநோய் ஏற்படுத்தும், சில்வர் நிற கவர்

ஓசூர் உணவகங்களில், புற்றுநோய் ஏற்படுத்தும், சில்வர் நிற கவர்களில் உணவு பொதிந்து தரப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை. மாடுகளை சாலையில் அலையவிட்டால், உரிமையாளர்களிடமிருந்து மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடுமையான தண்டத்தொகை விதிக்கப்படும். ஓசூர் பகுதியில் இயங்கும் குருதி வங்கிகளில், குருதி வகைகளுக்கு, ஒரே மாதிரியான விலை முடிவு செய்யப்படும், என, ஓசூர் மாநகராட்சியின் பொது நல வாழ்வு குழு தலைவர், N S மாதேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். 

ஓசூர் மாநகராட்சி பொது நலவாழ்வு குழு கூட்டம், தலைவர் N S மாதேஸ்வரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் Shrikanth, மாநகர நலவாழ்வு அலுவலர், அஜிதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைவர் மாதேஸ்வரன் பேசியதாவது: 

தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் விற்பவர்களை, மற்றும் கிடங்குகளில் வைத்திருப்பவர்களை கண்டறிந்து, தண்டத்தொகை விதிக்க வேண்டும். கிடங்குகளை கண்காணித்து, நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தாலே, பெருமளவு நெகிழி பயன்பாட்டை தடுக்கலாம். உணவகங்களில் சூடாக உணவு பொருட்களை, நெகிழி கவர்களில் அடைத்து, குறிப்பாக சில்வர் நிற கவர்களில் மக்களுக்கு விற்பனை செய்வதால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகிறது. அதனால் நெகிழி பயன்பாட்டை மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக தடுக்க வேண்டும். 

தெருநாய்கள் தொல்லை பெருமளவு இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருவதால், அவற்றை பிடித்து, கருத்தடை அறுவை மருத்துவம் செய்து, வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும். மாநகராட்சி பகுதியில், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவதற்கு இடையூறாக, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் தண்டத்தொகை விதிக்கும் பணியை முழு வீச்சில் அமல்படுத்த வேண்டும். அவ்வாறு சுற்றித் திரியும் மாடுகளை, பறிமுதல் செய்து, மாடுகளை கட்டி வைக்க கொட்டகை அமைத்து, அதற்கான தீவன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 

திருவிழா நேரங்களில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக, இரு மொபைல் கழிவறை வாங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஓசூர் மலைக்கோவில் அருகே உள்ள கழிப்பிட வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆடு அடிக்கும் தொட்டிகளை புனரமைப்பு செய்து, ஆண்டு குத்தகைக்கு விட வேண்டும். 

பள்ளி மாணவ, மாணவியருக்கு போதைப் பொருட்கள் தொடர்பாகவும், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டும்.  போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து, சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஓசூர் மாநகராட்சியில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் விற்பனை, குப்பை கழிவுகளை கொட்டுதல், வீட்டு கழிவுகளை கொட்டுதல், கொசுப்புழு உற்பத்தி, போதைப்பொருட்கள் விற்பனை, மாடுகளை சாலையில் திரிய விட்டவர்களுக்கு அபராதம் என, கடந்த ஓராண்டில் மட்டும், 73.50 லட்சம் ரூபாய் தண்டத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. 

ஓசூர் தொழிற்சாலைகள் நிறைந்த ஊர் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில், அரசு துவக்க நிலை நலவாழ்வு நிலையங்களில், மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாதத்தில் ஒருமுறை சிறப்பு முகாம் நடத்தி, மக்களுக்கு மருத்துவ ஆய்வுகளை செய்ய வேண்டும். இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு, மாவட்ட மேலாண்மை மூலம் கொண்டு செல்ல வேண்டும். 

ஓசூரில், தனியார் ரத்த வங்கிகள், உரிய அனுமதி மற்றும் உரிமம் பெற்று செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சில குருதி வங்கிகள் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்கின்றன. குருதி வங்கிகளின் தொடர்பு எண்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

கூட்டத்தில் மொத்தம், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு துவக்க நிலை நலவாழ்வு நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் இருந்து பங்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கேட்டு கோரிக்கை விடுத்தனர். 

அவற்றை செய்து கொடுப்பதாக, மாநகராட்சி ஆணையாளர் Shrikanth உறுதியளித்தார். மாமன்ற உறுப்பினர்கள் லட்சுமி, மோசின் தாஜ், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்