HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  3500 year old history of Hosur - 3500 ஆண்டுகளுக்கு முன், ஓசூர் பகுதிகளில் வாழ்ந்த மக்கள்
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - 3500 year old history of Hosur - 3500 ஆண்டுகளுக்கு முன், ஓசூர் பகுதிகளில் வாழ்ந்த மக்கள்

3500 ஆண்டுகளுக்கு முன், ஓசூர் பகுதிகளில் வாழ்ந்த, மக்கள் எப்படி இருந்தனர்?  அவர்களின் பண்பாடு என்ன? 3500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்டதா ஓசூர்?  ஓசூருக்கும், மேகாலயாவிற்கும், ஸ்காட்லாந்திற்கும் இருந்த ஒற்றுமை என்ன?  3500 ஆண்டுகளுக்கு முன், ஒரே மாதிரியான சிந்தனை ஓட்டத்தில், கல் ஊழி மனிதர்களால் எவ்வாறு சிந்தித்து செயல்பட இயன்றது?  இது குறித்த ஒரு பார்வை!

தமிழர்களின் பண்பாட்டில் அடிப்படையான ஒன்று, மூதாதையர் வழிபாடு.  தங்களது மூதாதையரை வழிபடும் வழக்கம், கல் தோன்றி மண் தோன்றா ஊழி தொட்டு, தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றாக விளங்கி வந்துள்ளது. 

குறிப்பிடத்தக்க மற்றொரு பண்பாடு, இறந்தோருக்கான கல்லறைகளை, குத்துக்கல், கற்திட்டை, கற்பதுக்கைகள், பரல் உயர் பதுக்கைகள், வட்ட புதிர் கல் என பல்வேறு வடிவங்களில் அமைக்கும் வழக்கம். 

ஓசூரில் இருந்து தென்கிழக்காக 30 கிலோமீட்டர் பயணித்தால், சூளகிரி வட்டத்தில், மேலுமலை பகுதி வரும்.  அங்கிருந்து கிழக்கு நோக்கி, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், மல்லசந்திரம் ஊர் அமைந்துள்ளது.

மல்லச்சந்திரம் ஊரின் அருகே, மொரல் பாறைகளைக் கொண்ட குன்றுகள் அமைந்துள்ளன.  இவற்றில் இரண்டு குன்றுகளின் மீது, சுமார் 250 க்கும் மேற்பட்ட பெருங்கற்திட்டை வகையைச் சார்ந்த சுவடுகள், அமைந்துள்ளன.  இதை அமைத்தவர்களுக்கு, இரும்பு கருவிகளை வடிவமைக்கும் மற்றும் கையாளும் திறன் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

உலகம் முழுவதிலும், வெவ்வேறு இனங்கள், இதே ஊழியில் இத்தகைய இடுகாட்டு அமைப்பை, ஏற்படுத்தும் பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக இத்தகைய கற்திட்டைகளை, உயர்ந்த, பரந்து விரிந்த பாறைகளின் மீது அமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.  இவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள், கல்லறைகளாகவே கருதுகின்றனர். 

இங்குள்ள இத்தகைய கல்லறைகள், நான்கு பக்கங்களைக் கொண்டதாகவும், செவ்வகம், நீண்ட செவ்வகம் ஆகிய வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  அத்தகைய அமைப்புகளின் மீது, மூடுவதற்கு பெரிய கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

உயர் பதவி அல்லது மதிப்புமிக்க ஒருவருக்கு, பெரிய அளவிலான கற்திட்டையும், அரசியர்களுக்கு, அதைவிட சற்று குறைவானதாகவும், அமைச்சர், தளபதிகள் போன்றவர்களுக்கு, அதை விட சிறியதாகவும் அமைத்திருப்பதாக, தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இந்த கற்திட்டைகளில், கிழக்குப் பகுதியில், வட்ட வடிவிலான வழி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

ஓசூர் ஆன்லைன் சார்பில், கடந்த 2002 ஆம் ஆண்டு வாக்கில், இப்பகுதிகளில், காணொளி பதிவு செய்த போது, பெரும்பாலும் சிதிலமடையாமல் இருந்த நிலையில், இப்போது, மனிதர்களின் தொடர் அடாவடியால், பெருமளவு சிதிலமடைந்து காணப்படுகிறது. 

இது தொடர்பாக உள்ளூர் மக்களை வினவிய போது,  புதையலுக்காக இத்தகைய செயல்களை பகுதி மக்கள் செய்திருப்பதாக தெரிவிக்கின்றன. 

எகிப்திய பிரமிடுகளுக்கு ஒப்பான, ஊழிச் சுவடுகள் ஓசூர் அருகே, மல்லச்சந்திரத்தில் அமைந்திருந்தாலும், 3500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினை, பாதுகாக்க உள்ளூர் மக்களும், அரசும், தவறுகிறது என்றே இங்கே வருந்தி குறிப்பிடலாம். 

கர்நாடகாவின் ஹிரெ பெனக்கல், மேகாலயாவில் நார்த்தியாங், பிரான்ஸ், அயர்லாந்து ஆகிய இடங்களில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இத்தகைய கற்திட்டைகளை, மக்கள் தங்களின் தொன்மையான அடையாளங்களில் ஒன்றாக கருதி, அவற்றை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 

இங்கே சில கற்திட்டைகளில், வெள்ளை நிற பாறை ஓவியங்களும் தென்படுகின்றன.

கர்நாடகாவின் ஹிரெ பெனக்கல் மற்றும் மேகாலயாவின் நார்த்தியாங் ஆகிய இரண்டு கற்திட்டை அடையாளங்களும், இந்திய ஒன்றிய அரசின், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  ஆனால் தமிழர்களின் அடையாளம், கேட்பார் இன்றி, சிதைந்து வருகிறது. ஓசூர் ஆன்லைன் (https://www.youtube.com/watch?v=-Z8ETpKJdsA), இந்த அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் இயங்கும் இணையதளத்தில் கூட மல்லச்சந்திரம் சிறப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.  அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கு, தமிழர்களின் தொன்மை அடையாளத்தை அழித்து வருகிறது என்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழர்களின் அடையாளமும், ஓசூரின் தொன்மைச் சின்னங்களில் ஒன்றான, மல்லச்சந்திரம் அருகே, மொரல் பாறைகள் மீது அமைந்துள்ள இந்த கற்திட்டைகளை, தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் எனவும், குறிப்பாக, UNESCO World Heritage சின்னமாக இதை அறிவிக்க வேண்டும் என, தொல்லியல் வல்லுனர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.  

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்