HosurOnline
HosurOnline  ›  Hosur News  ›  Hosur s Impact on Tamil Nadu s Economy - தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓசூரின் பங்களிப்பு!
Hosur News · ஓசூர் செய்திகள்

Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur s Impact on Tamil Nadu s Economy - தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓசூரின் பங்களிப்பு!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓசூரின் பங்களிப்பு!. ஓசூரின் தொழிற்சாலைகள், அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி, ஓசூரில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், என்பன குறித்த ஒரு பார்வை!

ஓசூர். ஒரு நகரம் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் முதன்மையாக விளங்கும் “தொழில்மிகு நகரம்”. கடந்த நாற்பது ஆண்டுகளில், மெல்ல மெல்ல உயர்ந்து, ஓசூர், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முதன்மையான தொழிற்சாலை நகரமாக பங்காற்றி வருகிறது. 

கல் ஊழி மனிதர்கள் தோன்றி, பாண்டியர்கள், சோழர்கள், கங்கர்கள், ஒய்சாளர்கள், விஜய நகர பேரரசு, முகமதியர்கள், ஆங்கிலேயர்கள் என ஏராளமான அரசாட்சியாளர்களை கண்டுள்ளது ஓசூர்.

5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் இப்பகுதிகளில், தங்களது இரும்பு தொழிற்சாலையை அமைத்திருந்தனர் என்பதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையில், கர்நாடகாவின் பெங்களூர் நகரை எல்லையாகக் கொண்டது ஓசூர். 

"Owner s pride, neighbour s envy" என்ற ஒனிடா TV விளம்பரம், முற்றிலுமாக ஓசூருக்கு பொருந்தும்.  ஓசூரின் வேகமான திட்டமிட்ட வளர்ச்சி.

1980களில், லட்சுமி ஆட்டோமேட்டிக் லூம்ஸ், அசோக் லேலண்ட், டைட்டான் வாட்ச், எக்சைடு பேட்டரி, டி வி எஸ் மோட்டார்ஸ் போன்ற தொழிற்சாலைகள் ஓசூரில் துவங்கப்பட்டன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள்  ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் தொழிற்பேட்டை அமைப்பதில் முயற்சியாக சிப்காட் முதல் கட்டம் ஓசூரில் துவங்கப்பட்டது.  

இன்று ஓசூரில் சுமார் ஐன்னூருக்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், அவற்றுக்கு துணையாக, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. 

கனரக தொழிற்சாலைகள், விமான பாகங்கள், கனரக வண்டிகள், போர் தளவாடங்கள், மின்னணு வண்டிகள், பெயிண்ட் உற்பத்தி, மின்கலன்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சமையலுக்கு பயன்படும் பாத்திர பண்டங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், கைக்கடிகாரங்கள், தங்க நகைகள், செராமிக் மூலப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கிரானைட் கற்கள், கல் குவாரிகள், ஏற்றுமதி பூக்கள், காய்கறிகள் என ஓசூரின் தொழிற்சாலைகளையும், உற்பத்தியாகும் பொருட்களையும் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தொழில் மற்றும் தொழிற்சாலைகள் மட்டும் அல்ல, ஓசூரின் சாலைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.  ஓசூர் தேன்கனிகோட்டை மாநில நெடுஞ்சாலை, ஓசூர் தளி மாநில நெடுஞ்சாலை, ஓசூர் உள்வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 44,  அத்திப்பள்ளி கெலமங்கலம் வழி ராயக்கோட்டை சாலை,  தேசிய நெடுஞ்சாலை 844, ஏராளமான திட்ட சாலைகள், என ஓசூரில் சாலை வசதிகள் ஏராளம். 

ஓசூர் ரயில் நிலையம்,  இந்தியாவின் பிற தொழில் நகரங்களை இணைக்கிறது.  பெங்களூரு வழி ஓசூரை இணைத்து, ஓமலூர் வரையிலான இருப்புப் பாதை இரட்டை வழித்தடம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்ற வருகிறது.  இதனால் பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாது, சரக்கு போக்குவரத்தும் மேம்படும்.

விரைவில் ஓசூருக்கு விமான நிலையம் வர இருப்பதால், விரைவான விமான போக்குவரத்திற்கும், பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், ஏதுவாக இருக்கும்.

ஓசூரின் தொழில் மட்டும் தொழிற்சாலை வளர்ச்சி, ஏராளமான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது.  மக்களை வேலைக்குச் செல்பவர்களாக மட்டும் ஏற்படுத்தாமல், இளைஞர்கள் பலரை தாமாக தொழில் துவங்கி, முதலாளிகளாக வலம் வர வைத்துள்ளது.  ஓசூரில் கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி கற்ற இளைய தலைமுறையினர் முதல் கல்வி அறிவற்ற வட இந்தியர்கள் என அனைவருக்கும் வருவாய் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

வீட்டு வசதி வாரியத்தின் மூலம் குடியிருப்பு பகுதிகள், DTCP வழிமுறைகளை பின்பற்றிய தரமான தனியார் குடியிருப்பு பகுதிகள், பாதாள சாக்கடை திட்டம், காவேரி கூட்டு குடிநீர் திட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையைதலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது, மாநகராட்சி சார்பில் ஏராளமான துவக்க நிலை மருத்துவமனைகள் என மக்கள் நலனுக்கான திட்டங்கள் ஓசூரில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  

இருப்பினும், அரசியல் உட்கட்சி போட்டிகள், அரசு ஊழியர்கள் இடையே நிலவும் லஞ்ச லாவண்யம், ஓசூர் மாநகராட்சியின் செயல்பாட்டில் நிலவும் மந்த நிலை, ஆகியவை, ஓசூரின் வேகமான வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது.

ஓசூர், ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.  மேலும், தமிழ்நாடு அரசு, பல்வேறு தொழிற்சாலை மற்றும் தொழில் முனைவு திட்டங்களை, ஓசூருக்கு நடைமுறைப்படுத்தி வருகிறது.  இதனால், ஓசூர் தமிழ்நாட்டின் "தொழில்நுட்ப நெடுஞ்சாலைகள்" நகரமாக மாறும்.

ஓசூர் வளர்கிறது… தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தூக்குகிறது. இது போன்ற வளர்ச்சி நகரங்கள் தான் தமிழகத்தின் எதிர்காலத்தை உருவாக்கும்.

Share this Post: Facebook X / Twitter

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்