ஓசூரின் வெள்ளப்பெருக்கும், அதன் பின்னணியும் குறித்த ஒரு பார்வை. "இங்கு அடிச்சா அங்க வலிக்கும்" என்று தமிழ் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவையாக கூறப்படும் வசனத்திற்கு ஏற்ப, இந்த ஏரியினால் அந்த ஏரியில் பாதிப்பு ஏற்பட்டு, ஓசூரில் சில குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்று அழுத்தம் திருத்தமாக நீர் மேலாண்மை குறித்து நன்கறிந்த ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முழுசா தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஓசூர் தொடர்வண்டி நிலையத்திற்கு பின்புறம், பறந்து விரிந்த ஏரி ஒன்று இருந்துள்ளது. அந்த ஏரிக்கான கால்வாய், சுமார் 10 அடி அகலத்தில், ஏழடி ஆழமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இப்போது அந்த ஏரி இருக்கிறது. தண்ணீர் இல்லை. கால்வாய்க்கு பதிலாக கட்டிடங்கள் இருக்கிறது. பகுதி மக்களிடம் கேட்டால், வீட்டை கட்டி விட்டால் கார் பார்க்கிங் வேண்டுமே? ஓடையை மூடி கார் பார்க்கிங் அமைத்து விட்டார்கள் என்கிறார்கள், சற்று கோபத்துடன்!.
இவ்வளவு பெரிய ஏரியில், இவ்வளவு மழை பொழிந்தும் தண்ணீர் இல்லையே? என்ற கேள்விக்கு, ஏரியில் தண்ணீர் நிரம்பினால் கார் பார்க்கிங் தண்ணீருக்குள் மூழ்கி விடுகிறது என்பதால் தண்ணீர் நிரம்பாமல் கவனித்துக் கொள்கிறார்கள், என்கிறார்கள் பகுதி மக்கள்! பகுதியின் பெரும்பாலான மக்கள், நிலத்தடி நீர் வற்றிப் போய்விட்டது என்று இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள்.
இந்த ஏரியின் மீது சில தன்னலம் மிக்கவர்கள் மேற்கொள்ளும் முறைகேட்டு போரினால், இப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றி போவதுடன், அதற்கு கீழாக உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி, பிற குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கும், பொருட்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது.
இந்த குறிப்பிட்ட ஏரியிலிருந்து தண்ணீர், கோகுல் நகர் பகுதியில் உள்ள பெரிய ஏரி என்று அரசு ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ள, ஆனால் கூகுள் வரைபடத்தில் N B அக்ரகாரம் ஏரி என்று குறிக்கப்பட்டுள்ள ஏரிக்கு வருகிறது. இந்த பெரிய ஏரி, இப்பகுதியின் தண்ணீரை மட்டுமின்றி, மத்திகிரி கூட்ரோடு சாலை முதல், ஓசூர் உழவர் சந்தை வரையிலான அனைத்து பகுதி தண்ணீரையும் உள்வாங்கி சேமிக்கும் வகையில் இயற்கை அமைத்துள்ளது. இந்த ஏரியை முறையாக தூர்வாரி மேம்படுத்தாததால், அது விரைவாக நிரம்பி, தண்ணீர் காரப்பள்ளி ஏரியைச் சென்றடைகிறது. அங்கிருந்து சென்னத்தூர் மற்றும் திப்பாலம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
இதனால் தான் ஒவ்வொரு மழைக்கும், திப்பாலம் ஏரி விரைவாக நிரம்பி அப்பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது என்று வேதனையுடன் தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்..
ஆகவே, ஓசூர் தொடர்வண்டி நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஏரியை முறையாக மேம்படுத்தி, அதன் வடிகால் ஓடைகளை மீட்டெடுத்து பேணுவதுடன், பெரிய ஏரியையும் தூர்வாரி முறையாக வைத்துக் கொண்டால், ஓசூர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பகுதிகளை ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுப்பதுடன், கோகுல் நகர் நிலத்தடி நீரையும் மேம்படுத்தலாம். இதனால் குளிரான ஓசூரின் வெப்பநிலை, தொடர்ந்து குளிராக நீடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு முறையான நடவடிக்கைகள் எடுப்பார் என கோகுல் நகர் பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.








