ஓசூர் அருகே, கோட்டை அமைத்து, எந்திரங்கள் மற்றும் மந்திரங்களை கற்களில் பதித்து பாதுகாக்கப்பட்ட ஒரு ஊர். 500 ஆண்டுகளுக்கு முன், விஜய நகர பேரரசர்கள் ஆட்சி புரிந்த ஊர். பிரிட்டிஷாரும் இந்த ஊரில் விரும்பி தங்கி சென்றுள்ளனர். ஊருக்குள் வருவதற்கும், வெளியில் செல்வதற்கும், அனுமதியும் சுங்க கட்டணமும் பெறப்பட்ட ஊர். இவ்வளவு சிறப்புகள் பொருந்திய ஊர் குறித்த ஒரு சிறப்பு பார்வை!.
இந்த காணொளியை வடிவமைக்க உதவிய, பீர்ஜேபள்ளி ஊரைச் சேர்ந்த சிவப்பா அவர்களுக்கு நன்றி.
பீர்ஜேபள்ளி, ஓசூர்-ராயக்கோட்டை சாலையில், சாணமாவு வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ள ஊர். பழமை மாறாது, அமைதியான சூழலில், சுமார் நூறு வீடுகள். பெரும்பாலானவை வரலாற்றை ஏந்தி நிற்பவை. மக்களில் பெரும்பாலானவர்கள் நில புலன்கள் கொண்டவர்கள். வேளாண்மை தொழிலை முதன்மையாக செய்பவர்கள்.
ஊரின் நடுவே நுழைவாயிலில், பழமை மாறாத கோட்டை வாயில் ஒன்று உள்ளது. கோட்டை வாயிலின் இரு மருங்கிலும், பிஜ அட்சர எழுத்துக்களும், மந்திரங்களும் பொறிக்கப்பட்ட இரண்டு கல் ஏடுகள் வைக்கப்பட்டுள்ளது. பீஜ அட்சர எழுத்துக்களை மந்திர எந்திரங்களாக பொரித்து, ஊருக்கு காவலாக அரசர்கள் ஆட்சி புரிந்த நாட்களில் அமைத்துள்ளனர். "பீஜ" என்றால் ஓம், க்ரீம், ஸ்ரீம், ஹ்ரீம் போன்ற மந்திர-தந்திரங்கள் உள்ளடக்கிய திறன் வாய்ந்த ஓசைகளை குறிக்கும். பொதுவாக ஊரின் எல்லையில், பாதுகாவல் தெய்வங்கள் வீற்றிருக்கும். அதற்கு முற்றிலும் மாறாக, பீர்ஜேபள்ளியில், பீஜ அட்சர மற்றும் மந்திர எந்திரங்கள் பொருந்திய கற்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பழக்கம், விஜயநகர பேரரசு ஆட்சியின் போது சில ஊர்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
வாயிலின் உள்ளே பணம் கொடுக்கல் வாங்கலுக்கான துளை ஒன்று இன்றளவும் சிதிலமடையாமல் உள்ளது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது, அந்த வட்ட வடிவிலான துளை மண்ணால் ஆனது. பிரிட்டிஷார் அமைத்தது என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகிறார்கள். நுழைவுச்சீட்டும் சுங்கமும் செலுத்தி தான் ஊருக்குள் உள்ளே வர இயலுமாம். அப்படியானால் கடந்த 300 ஆண்டுகளாக இந்த மண் துவாரம் சிதிலமடையாது, கட்டிட கட்டமைப்பின் வலுவை எடுத்துரைத்து நிற்கிறது.
நுழைவாயில் வழியாக சற்று முன்னோக்கிச் சென்றால், இடது புறத்தில், குன்று வடிவிலான கோட்டை அமைப்பு ஒன்று உள்ளது. கோட்டைக்குச் செல்வதற்கு முறையான படிகள் உள்ளன. முன்பு ஒரு காலத்தில், கோட்டைக்கு நடுவே பீரங்கிகள் இருந்ததாக பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள். பீரங்கிகளைக் கொண்ட ஊர் என்பதால், பீரங்கி பள்ளி என்பது பீர்ஜேபள்ளி என்று மருவிய அழைக்கப்பட்டதாக ஊரார் கூறுகிறார்கள். அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் அதைவிட சிறப்பானதான, பீஜ அட்சர எழுத்துக்களால் ஊரு பாதுகாக்கப்பட்டதால், ஊரின் பெயர் பீஜபள்ளி என்றிருந்தது பின்னாளில் பீர்ஜேபள்ளி என்று அழைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
கோட்டையின் நடுப்புறத்தில் அகழாய்வு மேற்கொண்டால், “பீஜ அட்சர, மந்திர தந்திரங்கள் கொண்டு இந்த கோட்டை ஏன் பாதுகாக்கப்பட்டது?” என்பதற்கான உண்மையான வரலாறு தெரியவரும்.








