Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் பட்டயக் கணக்காளர் பேட்டராயசாமி வீட்டில் தீ விபத்து, வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம்!

ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில்,  பட்டயக் கணக்காளர் பேட்டராயசாமி என்பவரது வீடு உள்ளது. வீட்டின் கீழ்தளத்தில், அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில், அவர் அலுவலகம் நடத்தி வருகிறார். இன்று குடும்பத்தோடு கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று பிற்பகல் திடீரென  வீட்டின் கீழ்தளத்தில் தீப்பிடித்து, புகைமூட்டம் ஏற்பட்டு, முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்திற்கும் பரவியது. இதனால் வீட்டிலிருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அந்த பகுதி மக்கள், உடனடியாக ஓசூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டுக்குள் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களை தீயணைப்புத்துறையினர் வெளியே எடுத்து அப்புறப்படுத்தினர். நீண்ட நேரம் போராடி கீழ்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பரவிய தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமானது. முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓசூர் நகர் காவல் துறையினர் வினவி வருகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: