Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர், இ எஸ் ஐ மருத்துவமனை அருகே அறுபது அடி அகலமுள்ள நீர் ஓடையை காணவில்லை!

நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது குற்றம், ஆக்கிரமிப்பை தடுக்க தவறியது குற்றம், நீர் நிலைகளை மாற்றி அமைப்பது குற்றம், என பல்வேறு அறிவுரைகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், ஓசூர் பொருத்தவரை, அரசு துறைகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான நிலையில் செயல்படுகிறது, என குற்றம் சாட்டுகின்றனர் தன்னார்வலர்கள். 

ஓசூர் உள் வட்டச் சாலை, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பின் அருகே இருப்பது இ எஸ் ஐ மருத்துவமனை.  இந்த மருத்துவமனைக்கு அருகே இருக்கும் ஏரிக்கு பெயர், இ எஸ் ஐ  ஏரி. 

இந்த ஏரியின் முகத்துவாரத்தை, அருகில் உள்ள தொழிற்சாலை ஒன்று, தனது தண்ணீர் தேவைக்காக, மதில் எழுப்பி மூடி வைத்திருக்கிறது என்பது குற்றச்சாட்டு.  முகத்துவாரம் மூடப்பட்டதை வாய்ப்பாக பயன்படுத்தி, அறுபது அடி அகலம் கொண்ட ஓடையை, ஐந்து அடிக்கும் குறைவாக சுருக்கி விட்டனர் ஆக்கிரமிப்பாளர்கள்! 

ஓடை சுருங்கியதன் விளைவாக, ஓடையின் வழிப் பாதையில் அமைந்துள்ள, வசந்தம் கார்டன் குடியிருப்பு பகுதியின் வீடுகளுக்குள், லேசான மழை பொழிந்தாலே, நீர் புகுந்து மக்கள் அல்லல் படுகின்றன.  மேலும், ஏரியின் முகத்துவாரம் மூடப்பட்டுள்ளதால், மழை தண்ணீர் எதிர்ப்பாய்ச்சல் மேற்கொள்கிறது. 

முட்புதர்கள் சூழ்ந்து, அந்த ஓடை, கொசுக்களின் கூடாரமாகவும், பாம்புகளின் வாழ்விடமாகவும் திகழ்கிறது.  இதனால் வசந்தம் கார்டன் குடியிருப்பு பகுதி மக்கள் நோய் நொடியென அல்லல் பட்டு வருகின்றனர். 

உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி, உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம், பல்வேறு வழக்குகளில் நீர் நிலைகளை காக்க வேண்டும் என்று வழங்கிய ஆணைகளுக்கு இணங்க, இ எஸ் ஐ  ஏரி ஓடையை மீட்டு, மழை நாட்களில், வீடுகளுக்குள் தண்ணீர் புகாதபடியும், புதர்மண்டி கிடைக்கும் ஓடையை மீட்டு, நீர் நிலைகளை பாதுகாக்கும் படியும் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: