ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், நாளொரு பொழுதும், இருசக்கர வண்டிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது.
இரு சக்கர வண்டிகளை சாலைகளில் இயக்கும் பெரும்பாலானவர்கள், சாலை சட்டதிட்டங்களை மதித்து செயல்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக உள்ளது. பெரும்பாலானவர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வண்டிகளை இயக்குவது இல்லை. மேலும் பலர், கைபேசிகளில் பேசிக்கொண்டே வண்டிகளை ஓட்டுவதும் அதனால் விபத்துக்கள் ஏற்படுவதும், ஓசூரை பொறுத்தவரை நாள்தோறும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது.
இப்போதைய சாலை சட்ட திட்டங்களின் படி, கலைக்கவசம் அணியாமல் சென்றால் ரூபாய் ஆயிரம், கைப்பேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டி சென்றால், ரூபாய் ஐந்தாயிரம் என தண்டத்தொகை விதிப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.
ஓசூர் போக்குவரத்துக் காவல்துறை சார் ஆய்வாளர் சக்திவேல் அவர்கள், ஓசூர் மூகண்டபள்ளி அருகே, கடந்த நாள், தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மதிக்காமல் வண்டிகளை ஒட்டி சென்றவர்களை நிறுத்தி, போக்குவரத்து சட்டங்களை இனி மதித்து செயல்படுவோம் என, கைகளை நீட்டி உறுதிமொழி ஏற்க செய்து, புதிய முயற்சி மேற்கொண்டார்.
அவரது புதிய முயற்சியை, அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.








