Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் நெடுஞ்சாலையை மறித்து, வட இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஓசூர் நெடுஞ்சாலையை மறித்து, வட இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்! இன்று காலை, திடீரென சுமார் 500க்கும் மேற்பட்ட, வட இந்தியர்கள், ஓசூர் தேன்கனிக்கோட்டை, மாநில நெடுஞ்சாலை எண் 17 Aவை மறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மேலும், அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, பி செட்டிப்பள்ளி என்ற ஊரில், ஸ்பார்க் மிண்டா என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிகின்றனர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள், வட இந்தியாவை சார்ந்தவர்கள்.  குறிப்பாக, மிண்டா குழும நிறுவனங்கள், தென்னிந்தியர்களை, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை, பணியமர்த்த விரும்புவது இல்லை என, பகுதி மக்கள் பலர் தெரிவிக்கின்றனர்.  இந்நிறுவனங்களில், பெரும்பாலும் சத்தீஸ்கர், பீகார், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள், பணி புரிவதாக கூறப்படுகிறது. 

கடந்த நாள், இந்நிறுவனத்தில் பணிபுரியும், மூன்று இளம் பெண்களை, பெங்களூரை சேர்ந்த கார் ஒன்று, பின்புறமாக வேகமாக மோதிவிட்டு, நிற்காமல் சென்றதில், இரு பெண்கள், பலியானார்கள்.  இது குறித்து, கெலமங்கலம் காவல் நிலைய காவலர்கள், வழக்கு பதிவு செய்து, குடிபோதையில் காரை இயக்கியதாக, ஒருவரை பிடித்து வினவி வருவதாகவும், கார் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. 

இதற்கிடையே இன்று காலை, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மாநில நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழிற்சாலை சார்பில், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, கெலமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர், விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம், அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். துறையினர் வழங்கிய உறுதி மொழியை ஏற்ற போராட்டக்காரர்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: