Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் குளிருக்கு, பூட்டிக்கொண்டு, போர்த்திக் கொண்டு, தூங்குபவரா நீங்கள்?

ஓசூர் குளிருக்கு, பூட்டிக்கொண்டு, போர்த்திக் கொண்டு, தூங்குபவரா நீங்கள்? அறிவியலை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்! நம் உடல் மற்றும் மனதை புத்துணர்வுடன் வைத்திருக்க தூக்கம் முதன்மையானது. ஆனால், தூங்கும் முறைகளில் ஏற்படும் சில தவறுகள், நமது உடல் நலத்திற்கு தீமையை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, படுக்கையறையின் சாளரங்கள் மற்றும் கதவை முழுமையாக அடைத்து தூங்குவது, பல நேரங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

மூடப்பட்ட அறையில் தூங்கும்போது, காற்றோட்டம் குறைகிறது. இது ஆக்ஸிஜன் அளவை குறைத்து, அறையின் உள் பகுதிகளில் கார்பன் டயாக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு அளவுகளை உயர செய்கிறது. காற்றோட்டமில்லாத சூழலில் நீண்ட நேரம் இருப்பது, மூச்சுப்பிடிப்புக்கு வழிவகுக்கும். மேலும், தலைவலி, முறையான ஆழ்ந்த தூக்கமின்மை மற்றும் மந்தநிலை போன்ற இடர்பாடுகளை உண்டாக்கும். 

மேலும், மூடிய அறைகளில், வெப்பநிலை அதிகரிக்கும். இதனால், உடலில் உள்ள நீரின் அளவு குறையலாம்.  மேலும், தூசுகள், குறிப்பாக 2.5 PM அளவுள்ள தூசுகள், மூடப்பட்ட அறையில் சிக்கி, மூச்சுக் கோளாறு மட்டுமல்லாது, பிற உடல் கோளாறுகளையும் ஏற்படுத்தலாம். 

பூட்டிய அறைகளில் விடப்படும், உணவு மீதங்கள் மூலமாக, ஃபார்மால்டிகைடு போன்ற, நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் காற்றில் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. 

மேலும், தூக்கத்தின் போது கம்பளியால் முகத்தை மூடுவது சிலருக்கு பழக்கமாக இருக்கும். ஆனால், இது சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். முகத்தை மூடிய கம்பளி காற்றின் சுழற்சியை தடுக்கும். இதனால், ஆக்ஸிஜன் அளவு குறைந்து, கார்பன் டைஆக்சைடு அளவு அதிகரிக்கக்கூடும். இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். இத்தகைய சூழலில் தூங்குபவர்களுக்கு, மன அழுத்தம் ஏற்படும். 

கம்பளியில் தூசு மற்றும் நுண்ம அணுக்களைக் இருக்கு வாய்ப்பு உள்ளது. முகத்தை மூடி தூங்கும் போது, இதனை மூச்சில் இழுக்க வேண்டிய நிலை ஏற்படும். இது உடலில் ஒவ்வாமை, மூச்சுக்குழல் நோய் தொற்று மற்றும் பிற நோய்களை உண்டாக்கும். 

கம்பளி, குறிப்பாக தூய்மையாக வைத்திருக்காவிட்டால், நுண்ணுயிரிகள் மற்றும் வைரஸ் எனப்படும் தீ நுண்மிகள் தொகுப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது. அத்தகைய கம்பளிகளை, மூடிய அறையில் அல்லது முகம் அளவிற்கு மூடி பயன்படுத்துவது, கடுமையான நோய் தொற்றுக்கு வழிவகை செய்யும். 

பாதுகாப்பான மற்றும் நலமான தூக்கத்தை உறுதிசெய்ய, படுக்கையறை முறைகளைச் சரிசெய்வது அடிப்படைத் தேவை. மூடப்பட்ட அறைகளில் தூங்கும் போது ஏற்படும் தீமைகள் உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும். எனவே, சிறிதளவு காற்றோட்டத்தை அனுமதித்து தூங்குவது நல்லது. இது உடல் நலம் பேணுவதற்கு உதவியாக இருக்கும். மேலும், முகத்தை, கம்பளி அல்லது போர்வையால் மூடி தூங்குவதையும் உடல் நலம் காக்க, தவிர்க்க வேண்டும்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: