ஓசூருக்கு பாதாள சாக்கடை குறித்த அறிவிப்புகள் ஒருபுறம் இருக்கட்டும். முறையான, குண்டு குழிகள் அற்ற சாலை வசதி எப்போது கிடைக்கும்? என ஓசூர் மக்கள், ஓசூர் மாநகராட்சியிடம் ஏங்கி பரிதவிக்கும் நிலையில் உள்ளதாக, தன்னார்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாயிரத்து பதினேளாம் ஆண்டு, ஒன்றிய அரசின், நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஓசூருக்கு, சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை அமைக்கப்படும் என்று, தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்த, திரு பாலகிருஷ்ணா அவர்கள் ஆட்சி காலத்தில், தகவல்கள் வெளிவந்தன. அப்போது, மாநகராட்சி பூங்காக்கள் பல மேம்படுத்தப்பட்டு, காவேரி குடிநீர் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஓசூருக்கான வளர்ச்சி பணிகள் விரைவாக நடந்ததாக, ஓசூர் பொதுமக்கள் பலர் நினைவு கூறுகின்றனர்.
அன்று முதல், இன்று வரை, ஓசூருக்கு பாதாள சாக்கடை விரைவில் வருகிறது, என்கிற தகவலின் அடிப்படையில், சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறாமல், ஓசூர் முழுவதும் குண்டும் குழியுமான, விபத்தை ஏற்படுத்தி, ஓசூர் மக்களின் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலைகள் மட்டுமே மிஞ்சியுள்ளன.
கடந்த நாள், அமைச்சர்களின் வருகையை முன்னிட்டு, வேகம் வேகமாக, ஓசூரின் முதன்மைச் சாலைகள், patch work செய்யப்பட்டு, இடைக்கால தீர்வு மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. patch work எதுவும், ஓசூர் பொதுமக்களுக்கு பயன் தரத்தக்க வகையில் அமையவில்லை, என தன்னார்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஓசூர் மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 582 கோடி 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், செயல்படுத்தப்பட உள்ள, புதிய பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர சக்கரபாணி, ஆகியோர் பங்கேற்று, பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான, பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி கே எம் சரயு, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், கே கோபிநாத், ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, ஓசூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஒய் பிரகாஷ், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தே மதியழகன், தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டி இராமச்சந்திரன், உள்ளிட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
தன்னார்வலர்கள், ஓசூர் ஆன்லைனிடம், ஓசூருக்கான பாதாள சாக்கடை திட்டம் குறித்து கூறும் பொழுது, ஓசூருக்கான பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி தருகிறது. அதை முழு மனதுடன் வரவேற்கிறோம். ஆனால், பல ஆண்டுகளாக, பாதாள சாக்கடை திட்டம் என்கிற பெயரில், ஓசூர் முழுவதும், சாலைகள் குண்டும் குழியுமாக, பல உயிர்களை ஏற்கனவே பலி வாங்கி, மேலும் பல உயிர் பலி வாங்க, ஏங்கி துடிக்கும் நிலையில், பலருக்கு கை கால்களை முறித்து முடமாக்கிய நிலையில், மாநகராட்சி பொறுப்பில் உள்ள சாலைகளின் நிலை உள்ளன.
புதிய பேருந்து நிலையம், புதிய மார்க்கெட், சாலை வசதிகள் மேம்படுத்துதல், அறிவு சார்ந்த மையம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் அரசு பார்வையில் ஒரு புறம் இருந்தாலும், இவற்றில் முதன்மையாக, உள்ளாட்சித் துறை சார்பில், ஓசூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, சாலைகளும், மழை நீர் வடிகால் ஓடைகளும், முறையாக அமைக்கப்பட்டு, குண்டும் குழியும் அற்ற சாலைகள் கொண்ட, சாலை விபத்துக்களை மாநகராட்சியின் சாலைகள் ஏற்ப்படுத்தி, உயிர் பலி வாங்காத நகரமாக ஓசூரை மாற்ற, அமைச்சரும், ஓசூர் மேயரும், ஓசூர் மாநகராட்சி ஆணையாளரும், உரிய நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, ஓசூர் தன்னார்வலர்களும், ஓசூர் பொது மக்களும், கோரிக்கை வைக்கின்றனர்.








