ஓசூர் வந்த ஆறு காட்டு யானைகள், இன்று எங்கு உள்ளது? ஓசூர் மற்றும் மத்திகிரி சுற்றுவட்டார பகுதி மக்கள், இனி, காட்டு யானைகள் தொடர்பான அச்சமின்றி இருக்கலாமா? கடந்த நாள், ஆறு காட்டு யானைகள், கர்நாடக மாநிலம், பன்னர்கட்டா வனப்பகுதியில் இருந்து, தளி வழியாக, ஓசூர் மத்திகிரியில் அமைந்துள்ள கால்நடை பண்ணை வளாகத்திற்கு இடம்பெயர்ந்து, மாலை வேளையில் அங்கு தங்கின.
யானைகளின் வருகை குறித்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி முழுவதும் மின்தடை அமல்படுத்தப்பட்டது. பின்னர் யானைகளை வனத்துறையினர், அவை பதுங்கி இருந்த இடம் குறித்து ஆராய்ந்தனர்.
யானைகளின் இருப்பிடம் தெரிந்ததை தொடர்ந்து, அவற்றை ஓசூர் பகுதியில் இருந்து, அதன் வழித்தடமான, கெலமங்கலம் நோக்கி, வனத்துறையினர் இடம் பெயர தூண்டினர். அதைத் தொடர்ந்து யானைகள், இன்று காலை வேளையில், கெலமங்கலம் அடுத்த, புதூர் ஏரிக்கரை அருகே, முகாமிட்டிருந்தன.
தொடர்ந்து அவற்றை கண்காணித்து வரும் வனத்துறையினர், இன்று இரவு, இந்த யானை கூட்டத்தை, சவளகிரி பகுதியில், ஏற்கனவே முகாமிட்டுள்ள யானை கூட்டங்களுடன் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மத்திகிரி மற்றும் ஓசூர் வாழ் பொதுமக்கள், நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், யானைகள் திடீரென ஓசூர் பகுதிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால், ஓசூர் பொதுமக்கள் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








