ஓசூர் நகரில் இந்த பொருளுமா விற்கிறார்கள்? ஓசூரில் இந்த பொருளை விற்க முயன்ற ஏழு பேர் பிடிபட்டது எப்படி? இரண்டு பேர் தலைமறைவாக இருப்பதாக தகவல். ஓசூர் காட்டுப்பகுதிகளில், காட்டு யானைகளை வேட்டையாடி, யானை தந்தம் திருடும் கும்பலா இது, என வனத்துறையினர் தீவிர விசாரணை.
ஓசூர் காட்டு யானைகள், ஆண்டுதோறும் இடம்பெயர்வு மேற்கொள்ளும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவை பயன்படுத்தி வந்த பாதையை, மனிதர்கள் ஆக்கிரமித்து விட்டதால், அவை விளைநிலங்களுக்குள்ளும் மனிதர்களின் குடியிருப்புகளுக்குள்ளும் புகுவது ஆண்டுதோறும் வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, யானையின் எலும்புக்கூடு ஒன்று ஓசூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வினவிய வனத்துறையினர், மடிந்து கிடந்தது ஆண் யானை என்றும், இனச்சேர்க்கைக்காக போட்டி ஏற்பட்டு, மற்றொரு காட்டு யானையால், உயரமான இடத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் அந்த யானை இறந்திருக்க கூடும் என, தெரிவித்தனர்.
இந்நிலையில், யானையின் இரண்டு தந்தத்தை, கும்பல் ஒன்று, ஓசூர் உள் வட்டச் சாலை, முனிஸ்வரன் நகர் பகுதி அடுத்த, மத்தம் பகுதியில் விற்க முயல்வதாக, வனத்துறையினருக்கு கமுக்கமான தகவல் ஒன்று கிடைத்தது. இதைத்தொடர்ந்து ,விரைவான நடவடிக்கை மேற்கொண்ட ஓசூர் வனச்சரக அலுவலர் திரு ஆர்
பார்த்தசாரதி தலைமையிலான வனப் பணியாளர்கள், தணிக்கை மேற்கொண்டு, கும்பலிடம் இருந்து, யானையின் இரண்டு தந்தங்களை கைப்பற்றினர்.
தேன்கனிக்கோட்டை பகுதி, இருதுக்கோட்டை அருகே உள்ள திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த, 27 வயதுடைய வெங்கடேஷ் என்பவரை, பிடித்த வனத்துறையினர், அவருடன் இருந்த மேலும் நான்கு நபர்களை, பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்கள், தங்களுடன் மேலும் 4 கூட்டாளிகள் இருப்பது குறித்த தகவல் கொடுத்ததை அடுத்து, மேற்கொண்டு இரண்டு நபர்களை, கைது செய்தனர். ஒன்பது நபர்கள் கொண்ட கும்பலில், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு நபர்கள் தலைமறைவாக உள்ளனர்.








