ஓசூரில் ஒருபுறம் ஒற்றை யானை, மறுபுறம் ஒற்றைச் சிறுத்தை நடமாட்டம். ஒற்றை யானையை விரட்ட தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது மீண்டும் மீண்டும், தனது பாதைக்கு உரிமை கோரி, குடியிருப்புகள் அருகே நடமாடி வருகிறது. சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தும், பிடி கொடுக்காத நிலையில் உள்ளது. வனத்துறையினர், தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேன்கனிகோட்டை அருகே கடந்த சில நாட்களாக, முகாமிட்டுள்ள நூற்றுக்கணக்கான யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை, அவ்வப்பொழுது இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதி மற்றும் விளை நிலங்களில் உணவு தேடி அலைகிறது.
இந்த யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர், அதனை அவ்வப்பொழுது அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர்.
இருந்தபோதிலும் அந்த ஒற்றை யானை சுற்று வட்டார ஊர் பகுதிகளிலேயே தொடர்ந்து உலா வருகிறது. இந்த நிலையில் கடந்த நாள் காலை கெலமங்கலம் அருகே, ஜக்கேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னுகுறுக்கி ஆலமர தோப்பில் இருந்து, சாலையை கடந்து ஊருக்குள் நுழைந்து புகுந்த யானை, சாலையில் நடந்து சென்றது.
இது தொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர், அந்த யானையை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, காட்டுப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஒற்றை யானை மட்டும், தொடர்ந்து இந்த பகுதியிலேயே முகாமிட்டு சுற்றித் திரிவதால், ஊர்மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே, தனது 70 ஆடுகளில், 15 ஆடுகளை சிறுத்தை தாக்கி கொன்றுவிட்டதாகவும், அதற்கு முறையான இழப்பீடு தமக்கு வழங்க வேண்டும், என்ற கோரிக்கையுடன், இருவத்தி ஆறு வயதுடைய நவீன் குமார் என்பவர், சிறுத்தை தாக்கியதாக கூறி, ஒரு ஆட்டை ரத்தம் சொட்ட சொட்ட தனது தோளில் போட்டுக் கொண்டு, தேன்கனிக்கோட்டை வன அலுவலகத்தில், ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஓசூர் அடுத்த, தேன்கனிக்கோட்டை செல்லும் சாலை அருகே உள்ளது இஸ்லாம்பூர். அடவி சாமிபுரம், இஸ்லாம்பூர் ஆகிய பகுதிகளில், பாறை குன்றில் முகாமிட்டு சுற்றித்திரியும் சிறுத்தை ஒன்று, ஆடுகள் மற்றும் தெரு நாய்களை கொன்று சாப்பிட்டு வருகிறது. தனக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட ஆடுகளை, சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடிக்க, அப்பகுதியில் கூண்டு வைத்துள்ளனர் ஆனால் இதுவரை சிறுத்தையை பிடிக்கவில்லை. தொடர்ந்து எந்த மாற்று முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வனத்துறையினரை உதவிக்கு அழைத்தாலும், அங்கு விரைந்து வருவதில்லை என குற்றம் சாட்டினார்.
அப்பகுதியில், ஊர் மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை, உடனடியாக பிடிக்க வேண்டும். நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என காயமடைந்த ஆட்டுடன், வனத்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரத்திற்கு பின், வனத்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என அவரை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.








