ஓசூர் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவல்துறையினரை கத்தியால் தாக்க முயன்றதாக கூறி, காவல் துறையினரால், ஓசூர் அருகே, காலில் சுடப்பட்ட ரவுடி ஒருவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அந்த பரபரப்பான செய்தி, அடங்குவதற்குள், மற்றொரு ரவுடி துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள செய்தி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நாள், ஓசூர் அடுத்த, மடிவாளம் ஊரைச் சேர்ந்த, ரவுடி சுனில் என்பவரை, அத்திப்பள்ளி காவல் நிலைய காவல்துறையினர், துப்பாக்கியால் சுட்டு பிடித்து, கைது செய்துள்ளனர்.
ரவுடி சுனில் மீது, ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மற்றொரு ரவுடி மனோஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, தாக்குதல் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ரவுடி சுனிலை பிடிப்பதற்காக, இரண்டு தனிப்படைகளை கர்நாடக காவல்துறையினர் அமைத்து, தேடி வந்தனர். இந்நிலையில், ரவுடி சுனில், அத்திப்பள்ளி பகுதிக்கு வருவதாக, கமுக்கமான தகவல், காவல்துறையினருக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அத்திப்பள்ளி காவல் நிலைய காவல் ஆய்வாளர், ராகவ் தலைமையில், காவல்துறையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதிக்கு இரு சக்கர வண்டியில் வந்த ரவுடி சுனில், காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ராகவ், தனது கை துப்பாக்கியால், ரவுடி சுனிலை சுட்டு, மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, ரௌடி லோகேஷ், துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரவுடி சுனிலும் துப்பாக்கியா சுடப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதால், ஓசூர் மற்றும் ஓசூர் எல்லையான, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் செயல்படும் ரவுடிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.








