ஓசூர் அருகே சும்மா போன யானையை, சூ சொல்லி வம்பு இழுத்ததால், மிதிக்க வந்த யானை. இங்கே இரண்டு காணொளிகளை பகிர்கிறோம். இரண்டும் வெவ்வேறு சூழலில், வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டவை. முதலாவது காணொளியில் மனிதர்கள், யானையை வம்பு இழுக்கிறார்கள். அது விரட்டி மிதிக்க வருகிறது. இரண்டாவது காணொளியில், யானையை யாரும் துன்புறுத்தவில்லை. எட்டிப் பார்த்துவிட்டு, அமைதியாக திரும்பி சென்று விடுகிறது. யார் மீது குற்றம்?
ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே, இன்று, செவ்வாய்க்கிழமை விடிகாலை பொம்மதாத்தனூர் எனும் ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை, ஒய்யாரமாக, சாலைகளில் உலா வந்தது. அதை விரட்ட சிலர், கூச்சலிட்டு, முயன்றனர். ஆத்திரம் அடைந்த யானை, கூச்சலிட்டவர்களுக்கு எதிர் வாடையில், மிரட்சியுடன் சென்றது. அங்கேயும் சிலர் நின்று கூச்சலிடுவதை கண்ட யானை, அவர்களை விரட்டியது. அப்போது சிறுவன் ஒருவர், நிலை தடுமாறி குப்புற விழுவதும், உயிருக்கு அஞ்சும் நிலையில், எழுந்து ஓடுவதுமான காணொளி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்த பொழுது, யானைகளை, அதன் போக்கில் விட்டாலே, அமைதியாகச் சென்று விடும். அதை விடுத்து, கூச்சலிட்டு அவற்றை துன்புறுத்தினால், எரிச்சல் அடைந்து, மனிதர்களை தாக்க வருகிறது. ஆகவே, யானைகளின் வழித்தடத்தில் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்பை அமைத்து இருப்பவர்கள், யானைகளை கூச்சலிட்டு துன்புறுத்தாமல், அமைதியுடன் இருந்தால், மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதலை, முற்றிலுமாக தவிர்த்து விடலாம் என்று கூறினார்.








