Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் விமான நிலையத்திற்கு ஓசூரில் கடுமையான எதிர்ப்பு

ஓசூர் விமான நிலையத்திற்கு ஓசூரில் கடுமையான எதிர்ப்பு.  வழக்கமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கிளம்பும் எதிர்ப்பு. ஆனால் இம்முறை ஓசூரில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது, ஓசூர் தொழில் முனைவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் 2033 ஆம் ஆண்டு வரை, ஓசூருக்கு என்று தனியாக விமான நிலையம் அமைக்க இயலாது என்று தெள்ளத் தெளிவாக ஒன்றிய அரசின் அமைச்சர் அறிவித்த பின்பும் விமான நிலையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் தமிழ்நாடு அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு அரசு சார்பில் ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு 10 இடங்கள் ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து துறைக்கு அடையாளம் காட்டப்பட்டதாகவும், அதில் இரண்டை இறுதி செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 

அந்த இரண்டு இடங்களும் TAAL விமானங்கள் ஒக்கிடும் பணிமனைக்கு இரு மறுங்கிலும், இரண்டு முதல் பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் 2000 ஏக்கர் விளைநிலங்கள் வையகப்படுத்தப்பட இருப்பதாக அஞ்சிய முதுகானபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வட்ரபாளையம் மற்றும் கோபனபள்ளி ஊராட்சி சார்ந்த, பொம்மசந்திரா மற்றும் கொல்லிசந்திரம் ஊர் மக்கள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, விளைநிலங்கள் கையகப்படுத்தும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலங்கள் ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தின் இரண்டாவதாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தங்களது விலை நிலம் கையகப்படுத்தப்படும் என அஞ்சும் நில உரிமையாளர் ஒருவர் ஓசூர் ஆன்லைன் இடம் தனது கருத்தை பதிவு செய்த பொழுது, இப்போது வெளி நிறுவனம் ஒன்று Google Earth எனும் செயலி மூலம், எங்களது நிலங்களை அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.  அதற்கு எங்களது எதிர்ப்பை பதிவு செய்தால், அவர்கள், மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் தான் தங்களது பணியை மேற்கொள்வதாக கூறுகின்றனர்.  இதனால் நாங்கள் மன அமைதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  இத்தகைய சூழல் நிலவுமேயானால், உயிர்பலி ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  ஆகவே, ஓசூர் விமான  நிலையத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாய்ப்புள்ள எங்களது நிலத்தை அளவிடும் பணியை உடனே நிறுத்த வேண்டும். விளைநிலங்களில் வளர்ச்சி பணி என்கிற போர்வையில், நாங்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் எங்களது குடியிருப்பு பகுதிகளை அகற்றும் முயற்சியை அரசு ஒருபோதும் மேற்கொள்ளக்கூடாது என்று கூறினார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: