ஓசூருக்கு இருபத்து மூன்றாயிரம் கோடி ரூபாயில் மேலும் ஒரு வளர்ச்சி திட்டம். உள் வட்டச் சாலை, ஓசூர் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம், S T R R வட்டச் சாலை, ஓசூர் விமான நிலையம், எட்டு வழி நெடுஞ்சாலை, ஓசூர், தருமபுரி புதிய நெடுஞ்சாலை என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து, புதிதாக இருபத்து மூன்றாயிரம் கோடி ரூபாயில், ஒன்றிய அரசு, பெங்களூரு ஓசூரை இணைக்கும் விதமாக, வட்ட தொடர்வண்டி பாதை அமைப்பதற்கான திட்டத்தின் முன் வரைவை, முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த, இருபத்து மூன்றாயிரம் கோடி ரூபாய், வட்ட தொடர்வண்டி பாதை, பெங்களூருவில் துவங்கி ஓசூர் வழியாக, ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நல்லூர், சேவுகானப்பள்ளி, ஈச்சங்கூர், பெலத்தூர், பாகலூர் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்கும் விதமாக அமையும் என கூறப்படுகிறது.
மொத்தமாக இருநூற்று எண்பத்து ஏழு கிலோமீட்டர் தொலைவு செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில், தமிழகத்தில், அதாவது ஓசூர் பகுதியில், நாற்பத்தியோரு கிலோமீட்டர் தொலைவு செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஒரு பகுதியாக, ட்ரோன் கேமராக்கள் கொண்டு, நில அளவைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக, முறையான எந்த அறிவிப்பையும், ஒன்றிய அரசு வெளியிடாத நிலையில், இந்தத் திட்டத்திற்காக, சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அப்பகுதிகளில் நிலம் வைத்திருப்போர், அச்சமடைந்த சூழலில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளனர்.
இதையடுத்து, இது பற்றி தெளிவு படுத்துவதற்காக, பகுதியில் நிலம் வைத்திருப்போர் மற்றும் உழவர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை, ஓசூர் அருகே உள்ள பாகலூரில் நடைபெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், இது போன்ற புதிய திட்டம், ஒன்றிய அரசு செயல்படுத்த உள்ளதாக எந்தவித தகவல்களும், மாநில அரசு, மாவட்ட மேலாண்மை, மக்கள் பிரதிநிதியாக உள்ள எங்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த திட்டம் குறித்த தகவல் என்பது, ஒரு வதந்தியாகவே கருதப்படுகிறது. எனவே, பகுதி மக்கள், இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த இடர்பாடு தொடர்பாக, வரும் ஆறாம் நாள் கூட உள்ள, சட்டமன்ற கூட்டத்தொடரில், எடுத்துரைத்து, தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என கூறினார்.








