ஓசூரில், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இளைஞர்கள். ஓசூர் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர்கள், ஏராளமான அரசு ஊழியர்கள், என நாள்தோறும் மக்கள் பயன்படுத்தும், சமத்துவபுரம் முதல், ஓசூர் பேருந்து நிலையம் வரை உள்ள பாகலூர் சாலை, செப்பனிடப்படாமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. நெடுஞ்சாலை துறையிடம், இந்த பகுதி சாலை ஒப்படைக்கப்பட்டு, 6 ஆண்டுகள் கடக்கும் நிலையில், 16 கோடி ரூபாய் திட்டத்தில், சாலை சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடக்க இருக்கின்ற சூழலில், ஓசூர் மக்கள், மனம் நொந்து, சாலையை கடக்கும் பொதுமக்கள் பல்வேறு விபத்துகளில் சிக்கி அல்லலுற்று வருகின்றனர். ஓசூர் ஏழாவது வார்டுக்கு உட்பட்ட இளைஞர்கள், தங்கள் சொந்த செலவில், சாலையை சரி செய்யும் முயற்சியில், கடந்த நாள் இரவு 11 மணி முதல் விடிய விடிய ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்த முன்னாள் தமிழ்நாடு அமைச்சரும், ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, பாலகிருஷ்ணா அவர்கள், இளைஞர்களை தனது அலுவலகத்திற்கு கடந்த நாள் மாலை வரவழைத்து, சால்வை அணிவித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதுகுறித்து தன்னார்வலர் முத்து செல்வம், ஓசூர் ஆன்லைனிடம் தனது கருத்தை பதிவு செய்த போது, இளைஞர்களின் முயற்சி பாராட்டிற்குரியது. பாராட்டிற்குரிய செயலை செய்த இளைஞர்களை பாராட்டிய முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா அவர்களின் செயல் மிகுந்த பாராட்டிற்குரியது. அதே வேளையில், அரசுக்கு மக்கள் பல்வேறு இனங்களில், ஏராளமான வரி செலுத்துகின்றனர். இவ்வளவு வரிகள் செலுத்திய பின்பும், சாலை கட்டமைப்பு என்கிற அடிப்படை வசதியை பொதுமக்களுக்கு செய்து தருவதற்கு ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தயக்கம் காட்டுவது வேதனை அளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலை துறை, உடனடியாக பாகலூர் சாலை தொடர்பில் கவனம் செலுத்தி, மூன்று கிலோமீட்டர் பாதிப்படைந்துள்ள சாலையை, உடனே சரி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.








