ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஜல்லிக்கட்டு எனும் காளை அடக்கும் விளையாட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா, அத்துக்கட்டு என பல்வேறு பெயர்களை கொண்டு நடத்தப்படுகிறது. கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லையில் ஓசூர் பகுதி அமைந்து இருப்பதால் அம்மாநிலங்களின், கம்பளா மற்றும் பிற ஊரக விளையாட்டுகளின் தாக்கம், எருது விழாவில் ஏற்பட்டுள்ளது. புக்கசாகரம், டி கொத்தபள்ளி, தளி அருகே உள்ள மல்லிகார்ஜுனா துர்கம், காமன் தொட்டியில் இருந்து அத்திமுகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தாசனபுரம், ஓசூர் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கோபச்சந்திரம் ஆகிய பகுதிகளில் எருது பிடி விழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. அத்துக்கட்டு, கோமாரி என்னும் பெயர்களில், தடுகை எனப்படும், மாடுகளின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பதாகையை கழற்றி எடுப்பதே விளையாட்டு.
தமிழகத்தின் பிற பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு என்று சிறப்பான முறையில் வளர்க்கப்பட்ட காளைகள் போட்டிகளில் பங்கெடுக்கும். ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை, தமக்காக, தம்முடன் விளைநிலங்களில் உழைத்த காளைகளை அலங்கரித்து சிறப்பிப்பதே, அடிப்படை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் விழாவாக அமைகிறது.
காளைகளை அலங்கரித்து, அவற்றுடன் தமக்குள்ளான அன்பினை பரிமாறிக் கொள்ளும் சிறப்பை, ஓசூர் அருகே நடத்தப்படும் அத்துக்கட்டு எனும் எருது விடும் விழாக்கள் கொண்டுள்ளன. இதை விளையாட்டுப்போட்டி என்று சொல்வதைக் காட்டிலும், குடும்பங்களின் ஒன்று கூடும் விழா என்று சொல்வது பொருத்தமாக அமையும்.
நாளை மறுநாள், வியாழக்கிழமை, ஜனவரி பதினாறாம் நாள், கோபச்சந்திரம் ஊரில், அத்துக்கட்டு விழா, காலை 8 மணி அளவில் சிறப்பு பூஜைகளுடன் துவங்க உள்ளது.








