Hosur News, ஓசூர் செய்திகள் - கோபச்சந்திரம் அத்துக்கட்டு விழா குறித்த ஒரு சிறப்பு பார்வை

கோபச்சந்திரம் அத்துக்கட்டு விழா குறித்த ஒரு சிறப்பு பார்வை. விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள், இந்த விழாவை காளைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதலாக அல்லது போட்டியாக கருதுவது இல்லை.  அவர்களை பொறுத்த வரை இது ஒரு குடும்பங்கள் ஒன்று கூடும் விழா. அத்துக்கட்டு விழாவில் பங்கெடுக்கலாம் வாங்க! 

ஓசூர் வனச்சரகத்தின் பாதுகாக்கப்பட்ட சாணமாவு காட்டுப்பகுதியின் அருகே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஊர் கோபச்சந்திரம்.  ஊர் சிறியதாக இருப்பினும், பெங்களூரு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், புகழ்பெற்ற ஊராகத் திகழ்ந்து வருகிறது.  தென் திருப்பதி என்று தமிழிலும், தட்சண திருப்பதி என்று வடமொழி பெயரிலும், கோபச்சந்திரத்தில் அமைந்துள்ள, மலைக்கோவில் அழைக்கப்படுகிறது.  வீற்றிருக்கும் பெருமாளை நாடி, நாள்தோறும் ஏராளமான அடியவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். வழக்கமான நாட்களில், காடுகள் சூழ்ந்த பகுதியில், தென்பெண்ணை ஆற்று நீர் ஓடும் சலங்கை ஒலியுடன், இறையருள் நிறைந்த சூழலில் இப்பகுதி விளங்குகிறது.  பகுதி மக்களும், நட்புடன், வெளியாட்களை விருந்தோம்பல் செய்கிறார்கள்.

கோபச்சந்திரத்தின் சிறப்பாக பெருமாள் மலைக்கோவிலில் வீற்றிருக்க, மற்றொரு சிறப்பு இங்கு நடத்தப்படும் அத்துக்கட்டு எனப்படும் எருது விடு விழா.  அத்து என்றால் எல்லை என்று பொருள்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட எல்கை வரை காளைகளை அழைத்து வந்து கட்டவிழ்த்து விடுவதால், அத்துக்கட்டு என்று அழைக்கப்படுகிறது. அந்த எல்கையை தாண்டி மட்டுமே, காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் பதாகைகளை கட்டவிழ்த்துக் கொள்ளலாம் என்பது இந்த விழாவின் ஒரு சட்ட குறிப்பாக விளங்குகிறது. 

இன்று, வியாழக்கிழமை ஜனவரி பதினாறு, இரண்டாயிரத்து இருபத்தைந்து,  இவ்விழாவினை, விழா குழுவினர் சிறப்புடன் நடத்துகிறார்கள். 

சுமார் நானூறுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கெடுக்கும் விழாவை காண்பதற்காக, சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர்.

இன்று நடைபெறும் கோபச்சந்திரம் அத்துக்கட்டு விழாவிற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட மேலாண்மை பல்வேறு வகையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் முதலுதவிக்கு, நான்கு அரசு மருத்துவர்கள், எட்டு செவிலியர்கள், பத்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், என பல்வேறு மருத்துவ உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.  ஏராளமான காவல் துறையினர், பணியாற்றி வருகிறார்கள்.  காளைகள் பாதிக்கப்பட்டால், அவற்றுக்கு உடனடி மருத்துவம் வழங்கும் விதமாக, இரண்டு கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்கள், அத்துக்கட்டு நடைபெறும் இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. 

விழாவை காண வரும் அனைத்து மக்களுக்கும், உணவு, குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும், விழா குழுவின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பிற்கு, கம்புகளைக் கொண்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  விழா குழுவினர், தங்களுக்குத் தெரிந்த வகையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.  இருப்பினும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த குடும்ப விழாவை, மேலும் பாதுகாப்பானதாக அமைக்கும் விதமாக, மாவட்ட மேலாண்மை சார்பில் காளைகளை அழைத்து வரும் பாதைக்கு என்று தனியான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். காளைகள், கூடியிருக்கும் மக்கள் மீது திரும்பி வராதபடி தடுப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என, தன்னார்வலர்கள் பலர் கருத்து கூறினர். 

விழாவை காண வந்த பொதுமக்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால், இந்த விழாவை காண்பதற்கு, ஒய்யாரமான பார்வையாளர் மாடம், மாவட்ட மேலாண்மை சார்பில் வரும் ஆண்டுகளில் அமைத்துக் கொடுத்தால், பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும், பாதுகாப்புடன் அமர்ந்து, காளைகள் ஓடுவதை காண இயலும்.  இப்போதுள்ள சூழலில், பின்புறம் இருந்து மட்டுமே விழாவை காணும் வகையில், அமைப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: