முன்பகையால் எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டதில், தலைமறைவாக இருந்த, அவரது நண்பனை கைது செய்த காவல்துறையினர். ஓசூரில் எலக்ட்ரீசியனை மது குடிக்க அழைத்து சென்று, கட்டையால் அடித்து கொலை செய்த அவரது நண்பரை காவலர்கள் கைது செய்தனர்.
ஓசூர், சானசந்திரம், வ உ சி நகரை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் 29 வயதுடைய மனோகரன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நாள் மாலை, ஓசூர் கசவகட்டா பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு உரிய குப்பை கொட்டும் இடத்தில், தலையில் கடுமையான காயங்களுடன் மனோகரன் கிடந்துள்ளார். அவரை காப்பாற்ற அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள், மனோகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு சென்ற ஓசூர் அட்கோ காவல் நிலைய காவலர்கள், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை நிகழ்வு குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் இருந்த எலக்ட்ரீசியன் மனோகரனை, அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய அரிஷ் மற்றும் அவரோடு சென்ற இரண்டு நபர்கள், மது குடிக்க, ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் பகுதிக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது. அங்கு மனோகரன் அரிஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேர் மது அருந்தி உள்ளனர். அதன் பின், மற்ற இருவரும், அவரவர் வீடுகளுக்கு சென்று நிலையில், மனோகரனும் அரிசும், ஓசூர் கசவகட்டா பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி குடித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோகரனுக்கும் அரிஷுக்கும் தகராறு ஏற்பட்டு முன் பகை இருந்துள்ளது. மது போதையில் இருந்த அரிஷ், மனோகரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அரிஷ் கீழே கிடந்த கட்டையை எடுத்து மனோகரனை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அரிஷை கடந்த நாள் காவல்துறையினர் கைது செய்தனர்.








