Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்!

ஒருபுறம் நாய்கள் எல்லாம் தானாக செத்து செத்து விழுகுது... மறுபுறம்,  சாக்கடையை மூன்று வெவ்வேறு அரசுத் துறைகள் ஒன்றிணைந்து, மக்கள் மீது Sprey செய்து விளையாடும் அவல நிலை! இது ஓசூருக்கு வந்த சோதனை?

ஓசூர் மாநகராட்சியின் நாற்பத்தி ஓராவது வார்டு பூங்காவில், நாய்கள் எல்லாம் செத்து செத்து விழுகுது! ஏழு நாட்களில் 10 நாய்களின் சடலம் மீட்பு! உடனடி நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்களும், தன்னார்வலர்களும் கோரிக்கை! 

ஓசூர் ராயக்கோட்டை அக்கோ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பூங்காவை, அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள், காலை மற்றும் மாலை வேலைகளில் நடை பயிற்சிக்காகவும், குழந்தைகள் விளையாடுவதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த பூங்காவில், அடிப்படை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், செடிகள் புதர் மண்டி, பாம்பு, தேள் போன்ற உயிரினங்களுக்கு புகலிடமாகவும், பகுதி மக்கள், பயன்படுத்துவதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் காட்சியளிக்கிறது.  நாய்கள், பூங்காவினுள் குட்டிகள் ஈன்றுவதாகவும், நாய்கள் அடிக்கடி செத்து மடிவதாகவும், அவற்றின் உடலை அப்புறப்படுத்த ஆளில்லாததால், அங்கேயே அழுகி, நாற்றம் எடுத்து, பகுதி மக்களுக்கு உடல்நல கேடு ஏற்படுத்தும் நிலை உள்ளதாகவும் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனானாம், அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம், என்று பழமொழி ஒன்று உண்டு!  மூன்று அரசு துறைகள், ஒன்றுக்கொன்று சளைக்காமல் சாக்கடையை மக்கள் மீது வாரி இறைக்கும் மனசாட்சியற்ற செயலுக்கு முற்றிலுமாக பொருந்தும்.

ஓசூர் சீதாராம்மேடு பகுதியிலிருந்து, அனுகுச்சாலை மூலமாக குமுதேபள்ளி ஊர் நோக்கி பயணித்தால், Star Briyani என்கிற கடை முன் பகுதியிலிருந்து, வருமான வரி அலுவலகம் வரை, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கழிவு நீர் தேங்கி, மக்கள் மீது தெளித்து வரும் அருவருப்பான நிலையை அனுபவிக்கலாம்.

கழிவுநீர் நட்ட நடு ரோட்டில் ஓடுகிறது என ஓசூர் மாநகராட்சியை கேட்டால், பேரண்டபள்ளி ஊராட்சி மீது பழி சொல்கிறார்கள். பேரண்டபள்ளி ஊராட்சியின் உதவியை நாடினால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை குறை சொல்கிறார்கள்.  தேசிய நெடுஞ்சாலை துறையினரை தொடர்பு கொண்டால், ஓசூர் மாநகராட்சி மற்றும் பேரண்டபள்ளி ஊராட்சி மீது பழி போடுகிறார்கள்!   மக்களை அலைக்கழிக்கும், இவர்கள் மூவரிடமிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்வது எப்படி? 

மக்கள் மீது பன்னீர் தெளித்து கேள்விப்பட்டிருக்கிறோம், புனித நீர் தெளித்து பார்த்திருக்கிறோம், சாக்கடையை சாலையை பயன்படுத்துபவர்கள் மீதெல்லாம், இந்த மூவரும் கூட்டுச்சதி செய்து Sprey செய்து விளையாடுவது, ஓசூரில் மட்டுமே நிகழ முடியும்!

புதிய பேருந்து நிலையம், பத்தலபள்ளி காய்கறி சந்தை, புதிய பேருந்து நிலையத்திற்காக பட்டர்பிளை மேம்பாலம், என பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், ஓசூர் மாநகராட்சியின் மூலம் இப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால், முதல் பணியாக, இப்பகுதி குடியிருப்புகளுக்கு விரைவாக, பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பகுதியில் குடியிருக்கும் மக்களும், வணிக கட்டிட உரிமையாளர்களும், சாலையை பயன்படுத்துவோரும் கோரிக்கை வைக்கின்றனர்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: