அடர்ந்த தென்னை தோப்புகளின் நிழலில் தென்பெண்ணை பாடும்...
செங்குத்துப் பாறையின் மீது கிளிகள் ஆடும்...
மூதறிவின் கற்சிலை மொழிகள் சொல்லும் பன்மை...
நெடுங்கல் — ஊழி தாங்கி நிற்கும் தமிழன் பெருமை!
ஓசூர் அருகே, காவேரிபட்டினம் அடுத்து அமைந்துள்ள ஊர், நெடுங்கல். இந்த ஊரின் பெயருக்கான அடிப்படையாகவும், அடையாளமாகவும் திகழ்வது, தனித்தோங்கி நிற்கும், சுமார் 200 அடி உயர பாறை. இந்த ஊரின் மற்றொரு அடையாளம், ஊரைச் சுற்றி அமைந்துள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்களை உள்ளடக்கிய தென்னந்தோப்புக்கள்.
அமைதியான இந்த சிற்றூரில் ஏராளமான வரலாறு, அதனுள்ளும், அதனைச் சுற்றியும் அடங்கியுள்ளது. இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண் பாட்டன், தங்கி சென்ற, பொதுப்பணித்துறைக்கு உரித்தான, பயணிகள் மாளிகை, தென்பண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை அருகே அமைந்துள்ளது. லார்ட் மவுண் பாட்டன், தான் தங்கி இருந்த நாட்களில், ஏராளமான இளைஞர்களுக்கு, ராணுவத்தில் பணி வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றுக்குக் குறுக்கே இங்கு அமைந்துள்ள தடுப்பணை, பிரிட்டிஷார் தமிழ்நாட்டில் முதல் முதலில் அமைத்த தடுப்பணை எனக் கூறப்படுகிறது. இங்கே தென்பண்ணை ஆற்றை தடுத்து நிறுத்தி, பாரூர் வரை, வாய்க்கால் அமைத்து, பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்படும் வகையில், தடுப்பணை அமைத்துள்ளனர்.
இந்த ஊரின் தலையான அடையாளமாக திகழும் நெடு உயர்ந்த பாறை அருகே உள்ள மலை குன்றின் மீது புதிதாக பெருமாள் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மலை குன்றின் மீது ஏறிச் செல்வதற்கு, படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.
நெடுங்கல் பாறையின் மீது, நீர் குட்டை ஒன்று உள்ளது. இது வற்றாத நீர் குட்டை என கூறப்படுகிறது. பொதுமக்கள், இந்த பாறையின் மீது ஏறி சென்று, நீர் குட்டையை பார்க்க இயலாது. மழை, இப்பகுதியில் அடிக்கடி பொழிவதால், குட்டை வற்றாமல் காட்சி அளிக்கிறது என்றும், நீண்ட வறண்ட ஊழியில், குட்டை, கண்டிப்பாக வற்றிவிடும் என அறிவியல் கற்ற தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டிஷார் ஆட்சியில், உள்ளூர்காரர்கள் திருமணம் முடிப்பதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. உள்ளூர் மக்கள் திருமணம் செய்து கொள்வதற்கு, தடை விதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பிரிட்டிஷார் கண்காணிப்பில் இருந்து தப்பி, குன்றின் மீதுள்ள குகையில் வைத்து, திருமண சடங்குகளை முடிப்பது, அந்நாட்களில் வழக்கமாக இருந்துள்ளது. அதனால், உள்ளூர் மக்கள், இந்த பாறை இடுக்கிற்கு இடையே அமைந்துள்ள இந்தப் பகுதியை, கல்யாண குகை, என்று அழைக்கின்றனர்.
பசுமையான இந்த ஊரின் அருகே, நீர் வற்றாத, பெரிய ஏரி ஒன்று உள்ளது. அதில் உள்ளூர் மக்கள் தங்களது பங்களிப்புடன், சிறிதளவு அழகு படுத்தி தூய்மையாக வைத்துள்ளனர். இந்த ஏரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால், மாவட்டத்தின், மிகச் சிறந்த சுற்றுலா இடமாக இது விளங்கும்.
இந்த ஊரின் அருகே, பென்னேஸ்வர (பென்ன ஈஸ்வர) மடம், என்ற சோழர் வரலாற்று சிறப்புமிக்க ஊர் உள்ளது. ஒரு நாள் சுற்றுலாவாக திட்டமிட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், முதலில் பென்னேஸ்வர மடம் சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்ததாக, நெடுங்கல் வந்து சுற்றி பார்த்தால், ஒரு நாள் பொழுது எளிதாக கரைந்து விடும்!








