Hosur News, ஓசூர் செய்திகள் - தொழில் & பொருளாதார வளர்ச்சி வேண்டுமா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!

ஓசூர் அருகே, தன் தலையைத் தானே வெட்டி காணிக்கையாக்கிய மல்லன். ஊருக்கு பெயர் சூட்டி, கொண்டாடும் மக்கள்! அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என, தன்னார்வலர்களும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்ப்பு! 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இரு கைகளிலும் வாள்களை சுமந்து, தன் தலையைத் தானே கொய்து படைத்த மாவீரன் ஒருவனின் சிலை, காண்போரை வியப்பிலும், மெய் சிலிர்த்த அதிர்ச்சியிலும் உறைய வைக்கிறது!  இத்தகைய பழக்கவழக்கங்கள், பல்லவர் மற்றும் சோழர் ஆட்சியில் இருந்ததற்கான சிலைகளும் கல்வெட்டுகளும் அவர்களின் ஆட்சி பகுதியில் ஆங்காங்கே உள்ளன.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அத்திமுகத்தை தவிர்த்து இதேபோன்ற கல்வெட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஆலந்துறை எனும் புள்ளமங்கை கோயிலில் உள்ளது. ஆந்திராவில், இந்த இரு அரசாட்சிகளுக்கு உட்பட்டிருந்த மல்லம் என்கிற ஊரிலும், நெல்லூரிலும் இத்தகைய கல்வெட்டுகள் உள்ளன.  வரலாற்று ஆசிரியர்கள், இத்தகைய பழக்கவழக்கம், கிபி 9 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை சைவ சமயத்தினர் இடையே இருந்ததாக கூறுகின்றனர்.

இது பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாறு! ஓசூரில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர் அத்திமுகம்.  இந்த ஊரை பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், ஒய்சாளர்கள், பூர்வதராயர்கள், விஜயநகர மன்னர்கள் அதன் பின் வந்த முகமதியர்கள் என பல அரசாட்சிகள் ஆட்சி செய்துள்ளனர். 

அத்திமல்லன் என்ற குறிப்பு, பாண்டியர்களை பொருத்தவரை, வீரத்தின் அடையாளம்.  தமிழ் இலக்கியங்களிலும், பாண்டியர் மற்றும் பல்லவர் ஊழி கல்வெட்டுகளிலும், அத்திமல்லன், என்றால், நல்லூழ் கொண்ட மல்லர் மற்றும் வீர தீர செயல்கள் புரிந்த மல்லர் என்ற பொருளில் குறிப்புகள் உள்ளது. 

தமிழில் மருதம் என்பது, ஐந்து நிலங்களின் ஒன்றான, வயலும், வயல் சார்ந்த நிலங்களை குறிக்கும் சொல். மருத நிலத்தை ஆட்சி புரிபவன், மல்லன் என்று அழைக்கப்பட்டான்.  மல்லன் என்பதற்கு ஒப்பான பிற தமிழ் சொற்கள், வேந்தன், மகிழ்னன், ஊரன், கிழவன், வேளாளர் என்று விளங்குகிறது.  மருத நிலத்தின் கடவுள் இந்திரன். 

அத்தி என்றால், பெருமை மற்றும் மரியாதை என்று பொருள்.  மல்லன் என்றால் வீரன்.  அத்திமல்லன் என்றால், போற்றுதலுக்குரிய, மரியாதைக்குரிய, பெருமைக்குரிய வீரன் என்கிற பொருள் வருகிறது.   மாமல்லன், முதலாம் நரசிம்மவர்மனுக்கு, அத்திமல்லன் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டதாக, கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. 

பாண்டியர்களின் கல்வெட்டுகளில், அத்திமல்லன் சேந்தன், அத்திமல்லன் வீரன் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. 

பல்லவர் அரசாட்சியில் இப்பகுதி இருந்தபோது, இத்தகைய பெருமைக்குரிய அடையாளங்களை கொண்ட அத்திமல்லன் ஒருவர், இன்றைய அத்திமுகம் பகுதியை ஆண்டதாகவும், அத்திமுகை என்கிற பெயரைக் கொண்டு விளங்கிய இந்த ஊர், மறுவி, இன்று அத்திமுகம் என்று விளங்குவதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஒரே வளாகத்தில், பல்வேறு ஊழியில், பல்வேறு அரசாட்சியாளர்கள், பல்வேறு ஆலயங்களை அமைத்துள்ளனர் என்பது இவ் ஊரின் மற்றொரு சிறப்பு.  

நிலத்தின் மட்டத்திலிருந்து சுமார் 10 அடிக்கு கீழ்தான் இந்த கோவில் வளாகம் அமைந்துள்ளது.  சுற்றிலும் மதில் இருந்ததற்கான அடையாளம் உள்ளது.  கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை, ஏதோ ஒரு தேவைக்காக, பூமிக்குள் பாதி அளவுக்கு கோவிலின் அமைப்பை புதைத்து வைத்துள்ளனர்.  பொதுமக்களின் கருத்துப்படி, முகமதியர்களின் தாக்குதல்களில் இருந்து கோவிலைக் காப்பதற்காக, இவ்வாறு மண்ணுக்குள் புதைத்து வைத்ததாக கூறுகின்றனர்.  இதற்கான வரலாற்று ஆவணங்கள் எதுவும் இல்லை. 

இக்கோவிலின் சிறப்பு, பல்லவர் ஊழியில், கட்டப்பட்ட ஐராவதிஸ்வரர் கோவில் மற்றும் முருகன் கோவில்,  என இரண்டு பழமையான கோவில்கள் உள்ளன.  

அழகான வேலைப்பாடுகளுடன், முருகன், ஆறுமுகத்துடன், பன்னிரு கைகளைக் கொண்டு, வடிவமைக்கப்பட்டுள்ளது.  முருகனின் மயில், வலது புறம் தலை வைத்தார் போன்று உள்ளது.

யானை முகத்தோடு எங்கும் கிடைக்காத காட்சியாக, சுயம்புலிங்கமாக ஐராவதிஸ்வரர் வடிவம் அமைந்துள்ளது.  அத்தி என்றால் வடமொழிச் சொல்லில், யானை என்று பொருள்.  யானை முகத்துடன் கடவுளின் சிலை வடிவம் இருப்பதால் அத்திமுகம் என்று ஊரின் பெயர் அழைக்கப்படுகிறது, என்று சிலர் கூறுகிறார்கள்.  இவ்வூரை அத்திமல்லன் என்ற மாவீரன் ஆண்டதற்கான கல்வெட்டுகளும், அத்திமுகை என்கிற பெயரில் இவ்வூர் விளங்கியது என்பதற்கான கல்வெட்டுகளும் உள்ளன.  பழந்தமிழ் சொல்லான முகை என்பதற்கு மலரின் மொட்டு என இன்றைய தமிழில் பொருள்படுகிறது.

சிறிய அளவிலான கருவறைகளைக் கொண்டு,  இந்த இரண்டு கோவில்களும் விளங்கினாலும், தங்களது பழமையால் ஓங்கி மிளிர்ந்து நிற்கிறது. 

அழகிய சோழிஸ்வரர் என்ற கல்வெட்டை ஒய்சாள அரசன் வீர வல்லாளன் செதுக்கியுள்ளான்.  கல்வெட்டு கிபி 1465 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்டுள்ளது.  

பழமையான பல்லவர் ஆட்சி ஊழி கோவில்களுக்கு முன் புறமாக, அழகிய சோழிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கருவறை, முன்பக்க மண்டபம், பெரிய மண்டபம், என மூன்று பிரிவுகளாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.  கருவறைக்குள்ளாகவே கருவறையை சுற்றி வரும் விதமாக, சந்தாநாழி, கட்டப்பட்டுள்ளது. இது சோழர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  

இந்த சிறப்புக்குரிய சந்தாநாழி, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்களில் மட்டுமே உள்ளது. 

சோழர்களின் பிரம்மாண்டத்தை உணர்த்தும் விதமாக, இரண்டு பெரிய அளவிலான துவார பாலகர் சிலைகள் உள்ளன. தூண்களில் ஏராளமான சோழர்கள், கல்வெட்டு சிலை வடிவங்கள் காணக் கிடைக்கின்றன.  நடனம் ஆடுவதற்கான அரங்கமும் இந்த கோவில் வளாகத்தில் இருந்திருக்க வேண்டும் என தொல்லியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றன.  அதற்குச் சான்றாக, ஏராளமான கல் தூண்கள் உள்ளன.

சோழர்கள், கங்கர்கள், ஒய்சாளர்கள், விஜய நகர மன்னர்கள் என அனைவரும் இக்கோவிலை மேம்படுத்தியதற்கான கல்வெட்டுகளும் இங்கே ஏராளமானவை காணக் கிடைக்கின்றன. சோழர் ஊழி கல்வெட்டுகளும், ஒய்சாளர் அரசன் 55 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டுகளும், அத்திமல்லன், வல்லாளன் குறித்த கல்வெட்டுகளும், விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகளும் ஏராளமானவை உள்ளன.  

1340 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டில், ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனமல்ல பொய்சள தேவற்கு யாண்டு அறுபதாவது, நிகரிலி சோழமண்டலத்து, மாசந்தி நாட்டு, அத்திமுகை, அழகிய சோளீஸ்வர முடையார்க்கு குரு வேந்த வங்சத்து முரசு நாடாழ்வார் மகந் தாமத்தாழ்வார் பூர்வாத ராய நேன் இ தேவற்கு இறை இலி தேவதானமாக விட்ட செக்கூர் நாற்பாலெல்லை... நம்பிராட்டி ஐரி இரண்டும் அத்திமுகை... 

...க்கி தேவதானமாக இட்ட நிலம் தெங்கேரி கிழக்கடைய குறிக்கி கே செல் நாற்பால் எல்லை... புஞ்சை திறை அங்கி செட்டி ஏரியும்... நீர் வார்த்து குடுத்தோம்... என்று எழுதியுள்ளது.

இதற்கான விளக்கம் சொன்ன தொல்லியலாளர், ராஜ ராஜ சோழன் ஆட்சி ஊழியில், சிறப்பாக மேலாண்மை புரிவதற்காக, நிகரிலி, பகுதிகளாக பிரிக்கப்பட்டது.  இதில் மாசந்தின் நாடு என்பது, ஓசூரை உள்ளடக்கிய பகுதிகளாக இருந்திருக்க வேண்டும்.  இப்பகுதியில் அத்திமுகை ஒரு சிற்றூராக இருந்திருக்க வேண்டும்.  முரசு நாடு என்பது ஓசூரை குறிக்கும் பழமையான பெயர் என்பது யாவரும் அறிவர்.  கல்வெட்டில் குறிப்பிடப்பட்டது போல், கொடை வழங்கியவர், முரசு நாட்டின் ஆட்சியாளரின் மகன் தாமத்தாழ்வாரான பூர்வாதராயர்.  கொடை அளிக்கப்பட்ட ஊர், செக்கூர் நம்பிராட்டி ஏரி. அதனுடன் சேர்த்து, அத்திமுகை என்கிற இந்த ஊரும், இக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில், சோழர் ஊழி கல்வெட்டு துண்டும் ஒன்று உள்ளது. இதிலும், சோழர் ஊழி துவார பாலகர்கள் உள்கட்டுமானம், பெரியமண்டபம், சோழர் ஊழி கருவறையை சுற்றிய கல்சுவர், ஒய்சாள அரசன் வீரவல்லாளன் தான் எடுத்த கல்வெட்டிலும், நிகரிலி சோழமண்டலம் என இப்பகுதியை குறிப்பிட்டுள்ளனர்.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த கோவிலை, ஊர் கூடி, ஊர் மக்கள் மீட்டு, தங்களது பணத்தில் கோவிலை தொடர்ந்து புனரமைத்து வருகின்றனர். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலை சென்றடைவதற்கு, ஊருக்கு நடுவே சரியான பாதை இல்லை.  ஆக்கிரமிப்பாளர்களால், சாலை குறுகி, நெரிசலாக உள்ளது. 

அரசு இதில் தலையிட்டு, இத்தகைய சிறப்பு மிக்க வரலாற்றுச் சின்னங்களை கணக்கெடுத்து முறையாக பேணி காக்க வேண்டும் என தன்னார்வலர்களும், ஊர் மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: