ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு, நடத்துனர் இல்லாமல், அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. பயண கட்டணம் இல்லாமல் பயணிக்க முடிந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நடத்துனர் சரியான நேரத்திற்கு பேருந்துக்கு வராததால், நூறு பயணிகளுடன் நடத்துனர் இல்லாமல் ஓட்டுனர் பேருந்து இயக்கியதாக, பயணிகள் தெரிவித்தனர்.
கணக்கீடு பணி குளறுபடியால், திடீரென மின் கட்டணம் வந்திருப்பதாக கூறி, தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில், அனுமந்தபுரம், குந்துக்கோட்டை, இருதுக்கோட்டை, உனி செட்டி ஊர் பகுதிகளை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் புகார் அளித்தனர். இப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் வீடுகளுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் முதல் பதினெட்டாயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டாயிரத்து இருபத்தி ஓராம் ஆண்டு முதல், இப்பகுதிகளின் வீடுகளில் மின் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கணக்கீடு மேற்கொள்ளப்பட்டதால் இத்தகைய குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புலம்பினர்.
சூளகிரி அருகே, கடந்த நாள், மாங்காய் ஏற்றி வந்த சரக்குந்து கவிழ்ந்த விபத்தில், மருத்துவம் பெற்று வந்த மேலும் ஒருவர் பலி. இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பலமுறை அறிவுறுத்தியும், அஞ்செட்டி பகுதியில், சரக்குந்துகளில், தொழிலாளர்களை ஏற்றி செல்லும் முறைகேடு தொடர்கிறது. கடந்த நாள், தாம்சன பள்ளி பகுதியைச் சேர்ந்த சுமார் பதிமூன்று பெண் தொழிலாளர்களை ஏற்றி சென்ற சரக்குந்து திரு முடக்கு என்ற பகுதியில், எஸ் வளைவில் சென்ற போது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயனித்த அனைவரும் காயமடைந்தனர். அஞ்செட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வினவி வருகின்றனர்.
சூளகிரி வட்டம் கோனேரி பள்ளி ஊராட்சி, சப்படி அருகில், நல்லகாண கொத்த பள்ளி போகும் வழியில், மாரியம்மன் கோவில் அருகே, ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை அடுத்த நாட்றம்பள்ளியில், அரசு மது கடை திறப்பதற்கு ஆதரவாக இருநூறு பேரும், எதிராக பத்து குடும்பத்தினரும், மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கடந்த நாள் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அமைதி பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல்கள் வருகின்றன.








