Hosur News, ஓசூர் செய்திகள் - Achievements of Hosur MLA Y Prakash. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், ஓசூருக்கு எத்தகைய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார்?

இன்று ஜூன் மூன்று, ஓசூர் முழுவதும், பல்வேறு இடங்களில் திமுக அரசின் சாதனை கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  சிலர் எம்மிடம், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், ஓசூருக்கு எத்தகைய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார்? கடந்த நான்கு ஆண்டுகளில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினராக அவர் செய்த சாதனைகள் தான் என்ன? இது குறித்து ஒரு காணொளி வெளியிட்டால், பொதுமக்களுக்கு ஒரு தெளிவு ஏற்படும், என குறிப்பிட்டதை தொடர்ந்து, ஓசூர் ஆன்லைன் சார்பில் இந்த காணொளியை வழங்குகிறோம்.  

தமிழ்நாடு என்றாலே கல்விக்கு தான் முதன்மை.  நமது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், இது தொடர்பில் ஓசூருக்கு என்ன செய்து விட்டார் என்பது குறித்து தெரிந்து கொள்ள சிலரிடம் கலந்து பேசிய பொழுது, வியப்பான மற்றும் மகிழ்ச்சியான ஒரு தகவல் கிடைத்தது.  கடந்த 14 ஆண்டுகளாக ஓசூரில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்தது.  ஒவ்வொரு ஆண்டும், தன்னார்வலர்கள், தங்களின் பணம் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்பை கொண்டு, ஓசூர் புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்தி வந்தனர்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த ஆண்டையும் குறிப்பிட்டால் மூன்று ஆண்டுகளாக, ஓசூர் புத்தகத் திருவிழாவின் பெரும்பகுதி பங்களிப்பு, அரசின் பங்களிப்பாக உள்ளது.  அனைவரும் கற்க வேண்டும் என்ற இந்த நோக்கத்தை, ஓசூர் சட்டமன்ற உறுப்பினரின் முதல் சாதனையாக குறிப்பிடலாம்.

ஓசூர் மக்களை பொருத்தவரை மிகப்பெரிய சாதனை, ஓசூர் பாகலூர் நெடுஞ்சாலையில், ஓசூர் பேருந்து நிலையம் முதல், கே சி சி நகர் வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலையை, சரி செய்வதற்காக மேற்கொண்ட நடவடிக்கை.  கடந்த ஏழு ஆண்டுகளாக, பலரின் கை கால்களை முறித்து, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக இருந்த இந்த சாலையை, தடங்கல்களை எல்லாம் தகர்த்து, சரி செய்வதற்கான பணி மேற்கொள்ளப்படுவதால், ஓசூரில் பெரும்பாலான பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

பாதாள சாக்கடை திட்டம்.  சுமார் 580 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டத்திற்கான கட்டுமான பணிகள், விரைவாக நடந்து வருகிறது.  விரைவாக வளர்ச்சியடையும் நகரம் என்பது மட்டுமல்லாமல், அடிப்படைக் கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கும் நகரம் என்ற நிலையை, பாதாள சாக்கடைக்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் ஓசூர் எட்டுகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, ஓசூர் நகர்ப்புற வளர்ச்சிக்கு என்று முறையான திட்டங்கள் எதுவும் இல்லாமல் கிடப்பில் கிடந்த நிலையில், 2046ஆம் ஆண்டு வரையிலான, நகர்புற வளர்ச்சி திட்ட வரைவு, வெளியிடப்பட்டுள்ளது.  இதனால், என்னென்ன தேவைக்கு எந்தெந்த சர்வே எண்ணின் கீழ் உள்ள நிலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன, என்பது குறித்தான தெளிவு வெளியாகி உள்ளது. மேலும், 20-ற்கும் மேற்பட்ட Scheme சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன.  இதனால் ஓசூர் விரைவான, சிறந்த வகையில் திட்டமிடப்பட்ட, பெரு நகரமாக வளர்ச்சி அடையும்.

ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொண்ட சாலை பணிகள் என்னென்ன என்ற பட்டியல். 

ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்கா துவங்கி, பூனப்பள்ளி வரையிலான தளி சாலை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால், ஓசூரின் வளர்ச்சி, தளி பகுதியையும் சென்றடையும் வகையில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஓசூர் ராமநாயக்கன் ஏரியின் உள் வட்டச் சாலை பகுதி துவங்கி, இ எஸ் ஐ மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை, உள் வட்டச் சாலை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

T V S தொழிற்சாலை துவங்கி, குருபட்டி மற்றும் கெலமங்கலம் வழி, ராயக்கோட்டை இணைக்கும் சாலை, நான்கு வழி சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 

ராயக்கோட்டை சாலையை பொருத்தவரை, அலசனத்தம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் துவங்கி,  பீர்ஜேபள்ளி வரை, தேசிய நெடுஞ்சாலை 844 ஐ இணைக்கும் விதமாக, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தியது.

என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

நீண்ட நாள், பயன்பாடு இன்றி கிடப்பில் கிடந்த, ஓசூர் மின்னணு மற்றும் மென்பொருள் பூங்காவை, ஏற்றுமதி மற்றும் உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கும் விதமாக, பணிகள் மேற்கொண்டது.  மேலும் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பூங்கா அமைப்பதற்கான திட்டம் வெளியிட்டது.

ஓசூர் பேருந்து நிலையத்தில் நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டும், ஓசூர் நகரின் வளர்ச்சியை மேலும் சிறப்புற செய்யும் விதமாக, இரண்டாவது சிப்காட் அருகே, பத்தலபள்ளி காய்கறி சந்தை ஒட்டிய பகுதியில், சுமார் 50 கோடி ரூபாய் திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூர் மாணாக்கர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் பயனடையும் வகையில், அறிவியல் பூங்கா அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, வேலைகள் நடந்து வருகின்றன. 

பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே, பொதுப்பணித்துறை சார்பில், புதிய பயணியர் விடுதி கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஓசூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, ராயக்கோட்டை சாலையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 

சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதி அதாவது தோழி விடுதி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் அருகே, விஸ்வநாதபுரத்தில் கட்டப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 24 மணி நேர பாதுகாப்பு, வண்டிகள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி, பயோமெட்ரிக் அடிப்படையிலான வருகை பதிவு, விலையில்லாமல் இணைய இணைப்பு,  துணிகளை தேய்த்துக் கொள்ளும் வசதி, தூய்மையான குடிநீர், 24 மணி நேரம் சுடுதண்ணீர் என்பன போன்ற ஏராளமான வசதிகள் உள்ளடங்கியுள்ளன.


கெலவரப்பள்ளி அணை அருகே கட்டப்பட்டு வரும் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, தண்ணீர் தூய்மைப்படுத்தும் நிலையம். 

பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  . ஓசூர் விமான நிலையம், அமைப்பதற்கான பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.  இதற்கான முயற்சியில், நமது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் முழு கவனம் செலுத்தி வருவது, ஓசூரில் தொழில் முனைவோர், பொதுமக்கள் மற்றும் பெங்களூர் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் என அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இந்நாள் வரை மட்டுமல்ல, என்றென்றும் ஓசூர் ஆன்லைன் பணம் பெற்றுக் கொண்டு செய்திகள் வெளியிடாது.  அதை மனதில் வைத்து, இந்த காணொளியில் கூரப்பட்டுள்ள கருத்துக்களில் நிறை, குறைகள் இருந்தால், தவறாமல் கமெண்ட் பாக்ஸில் ஆக்கபூர்வமான உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: