ஓசூர் பேருந்து நிலையம் எதிரே பாலத்தின் பியரின் உடைந்து விட்டதால், பாலத்தின் பலகை சரிந்த நிலையில், முழுமையான போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாத சூழல் திகழ்ந்து வருகிறது. பாலம் ஏன் உடைந்தது? பாலத்திற்கான பியரிங் தொழில்நுட்பம் பின்னணி என்ன? பியரிங் மாற்றுவதற்கு 30 நாட்கள் ஆகுமா? நிரந்தர தீர்வு தான் என்ன? என்பன குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்!
A திவ்: பிரகாஷ், ஓசூர் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள பாலத்தின் பியரிங் உடைந்து விட்டதாகவும், அதனால் முழுமையான போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாத சூழல் நிலவுகிறது. Bridge Bearing என்றால் என்ன? அது எந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்?
பிரகாஷ்: புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு வரும் பாலங்கள், பெருமளவு எடையை தாங்கி செல்லும் வண்டிகளுக்கு ஏற்றவையாக வடிவமைக்கப்படுகிறது. இத்தகைய பாலங்கள், போக்குவரத்தினால் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுகின்றன. பாலங்கள் மூன்று பகுதியை உள்ளடக்கியதாக இருக்கிறது. பாலத்தின் தூண், இரண்டு தூண்களை இணைத்து சாலை அமைக்கும் ஸ்லாப், தூணையும் இந்த ஸ்லாபையும், இணைக்கும் விதமாக பொருத்தப்பட்டிருக்கும் ரோலர் மாதிரியான அலகுதான் இந்த பிரிட்ஜ் பேரிங்.
B திவ்: இந்த பிரிட்ஜ் பியரிங் அடிப்படை பயன்பாடு தான் என்ன?
பிரகாஷ்: இந்த பிரிட்ஜ் பேரிங் தான் பாலத்தின் ஸ்ட்ரக்சரை பாதுகாப்பாக வைத்து லோடை சமமாக பரப்பி, பாலத்தின் கட்டமைப்பை நிலை நாட்டுகிறது. கடுமையான அதிர்வுகளில் இருந்தும் பாலத்தை பாதுகாக்கிறது. பாலங்கள் இரும்பு மற்றும் கான்கிரீட் கொண்டு கட்டப்படுகின்றன என்பது யாவரும் அறிந்தது.
C திவ்: நம்ம நாட்டுல கோடை, மழை, குளிர் எல்லாமே அதிகம் இருக்கே. அதனால்தான் பிரிட்ஜ் பியரிங் வைக்குறாங்களா?
பிரகாஷ்: அருமை, படிச்சு கேக்குறீங்க போல! ஆமாம். கோடையில் concrete slab expansion அதாவது விரிந்து கொடுக்கும். குளிரில் contraction அதாவது சுருங்கும். இது தேவையற்ற பளுவை பாலத்தின் தூண்களுக்கு தரும். Bridge Bearing இல்லாம இருந்தா, slab shift, வெடிப்பு, சில வேளைகளில் slab முழுமையாக சரியும் நிலை கூட ஏற்படலாம்!
D திவ்: அது எல்லாம் சரி, பிரிட்ஜ் பியரிங் இருந்தும், ஓசூர் பாலம் slab ஏன் shift ஆனது?
பிரகாஷ்: 23 ஆண்டுகளுக்கு முன்னாடி இந்த பாலத்தை கட்டியிருக்காங்க. அன்றைய சூழலில், வண்டிகளின் எடை கூடுதல் அளவா 40 டன் வரை தான் இருந்திருக்கு. ஆனால் இன்றைய சூழல் மொத்தத்துக்கும் வேற. இப்போ சராசரியா பேரண்ட பள்ளியில் இருந்து பெங்களூரு நோக்கி மணல் ஏற்றி செல்லும் வண்டிகள் ஒவ்வொன்றும் சுமார் 50 டன் இருக்கு. மணல் ஈரப்பதமா இருந்தால் இது இன்னும் கூடுதலாக இருக்கும். இப்ப வர்ற வண்டிங்க, 100 டன் அளவுக்கு எடை கொண்டது கூட நம்ம சாலைகளில் பயணிக்குது. முன்பு மல்டி ஆக்செல் அப்படினா, ரெண்டு அல்லது மூன்று ஆக்செல் கொண்ட வண்டிகள். தொழில்நுட்ப வளர்ச்சியினால் இப்போ ஆறு ஆக்செல் வண்டிகள் கூட பயணிக்குது. பழைய கட்டுமானம் என்பதால், இத்தகைய எடைகளை தாங்க முடியாமல் பிரிட்ஜ் பியரிங் உடைந்திருக்கிறது.
E திவ்: இது infrastructure maintenance-ல ஒரு பெரிய அம்சம்னு இப்ப புரிகிறது! அப்படின்னா தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், வண்டிகளின் எடை சுமந்து செல்லும் திறனுக்கும் ஏற்ப, பழைய பாலங்களை முறையா மெயின்டைன் செய்து இருக்கணும். அப்படித்தானே?
பிரகாஷ்: ஆமாம். பிரிட்ஜ் Bearing-ஐ install பண்ணுறது மட்டும் போதாது. Periodical Inspection & Replacement அடிப்படையானது.
அது இல்லனா, இப்போ பாலம் நல்லா இருக்கு, ஆனா உடைஞ்சிருக்கு போன்ற சூழல் ஏற்படத்தான் செய்யும்!
F திவ்: இப்போ பிரிட்ஜ் பேரிங் உடைஞ்சிருச்சு. அதை உடனடியா மாத்துவதற்கு புது பியரிங் கொண்டு வந்து மாற்ற வேண்டியது தானே?
பிரகாஷ்: அப்படியெல்லாம் செய்ய முடியாது. பாலத்தின் கட்டமைப்பின் நிலை, சாலையை பயன்படுத்தும் வண்டிகளின் சராசரி எடை போன்றவற்றை சில நாட்களுக்கு தரவுகள் மூலம் கணித்து, அதற்கு ஏற்ப இனி பிரிட்ஜ் பியரிங் வடிவமைத்து உற்பத்தி செய்து பொருத்துவார்கள். பொருத்துவதற்கு சில மணி நேரங்கள் தான் எடுக்கும். அதனால் தான் 30 நாட்கள் நேரம் கேட்டுள்ளார்கள்.
G திவ்: இப்போது இந்த ஒரு பாலத்துல வந்த சிக்கல சரி செஞ்சுருவாங்க. தமிழ்நாட்டுல இதே மாதிரி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சொந்தமான 20 ஆண்டுகள் கடந்த பாலங்கள் பல உள்ளது. மற்ற பாலங்களின் நிலை என்ன?
பிரகாஷ்: நாம ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி, தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கு ஏற்ற மாதிரி பாலத்தின் கட்டமைப்புகளை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும். ஏற்கனவே புதுச்சேரியில் இதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்ததா சொல்றாங்க. இப்போ ஓசூர்ல நடந்திருக்கிறது. இது மாதிரி நிகழ்வுகள் தொடர்கதை ஆகாதபடி, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், போர்க்கால அடிப்படையில, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா பாலங்களையும் ஆய்விற்கு உட்படுத்தி, தேவையான மாற்றங்களை செஞ்சாதான், இது போன்ற நிகழ்வுகளும், விபத்துகளும், உயிர்களுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்படாது.
H திவ்: பிரிட்ஜ் பியரிங் என்பது ஒரு வகையா அல்லது பல வகைகளை உள்ளடக்கியதா?
பிரகாஷ்: பிரிட்ஜ் பியரிங்ல பல வகைகள் இருக்கு. இந்தியாவுல பொதுவா மூன்று வகைகளை பயன்படுத்துறாங்க. Rocker & Roller Bearing என்று ஒரு வகை பியரிங் உள்ளது. இது பழைய தொழில்நுட்பம் சார்ந்தது. இதை சாலைகளில் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் பயன்படுத்தறது Elastomeric Bearing. ஏன்னா இந்தியாவுல, சாலைகளை பொருத்தவரை சாலைகளை கட்டிட்டா ஐந்து ஆண்டுகளுக்கு மெயின்டனன்ஸ் செய்யக்கூடாது என்று ஒரு வரையறை வகுத்து வைத்துள்ளனர். இந்த பியரிங் வகைகள் maintenance-free வகையைச் சார்ந்தது. பெரிய அளவில் எடையை சுமந்து செல்லக்கூடிய வண்டிகள் பயணிக்கும் ஓசூர் பாலம் போன்ற பாலங்களில், Pot Bearing பயன்படுத்த வேண்டும் என சில வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவற்றால் பெரிய அளவிலான எடைகளையும் அதிர்வுகளையும் தாங்கிக் கொள்ள முடியும்.
நாம கடந்த நாள் பாலத்தில் பேரிங் மாற்றுவதற்கான பணிகள் எந்த அளவுக்கு முடிந்து இருக்கு அப்படின்னு பார்த்தோம்னா, பாலத்துக்கு கீழ்ப்பகுதியில் மரக்கட்டைகளை அடுக்குனதுல எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பாலத்துக்கு மேல, பாதிப்படைந்த பாலத்தை சரி செய்வதற்காக, பாதிப்படையாக பாலத்தின் பகுதியில், போக்குவரத்தை மாற்றி விடுவதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆயத்தமாக உள்ளது. பாலம் பழுதடைந்து, இன்று ஜூலை 13 ஆம் நாளுடன் சேர்த்து, 22 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் பேரிங் வடிவமைக்கப்பட்டு உற்பத்தியாகி நிறுவப்படும் நம்பிக்கையான வட்டாரங்கள் உறுதியற்ற செய்தியாக நமக்குத் தருது. அத்திப்பள்ளி கிருஷ்ணகிரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கோரிக்கை என்னன்னா, இந்த பாலம் சரி செய்வது வரை மட்டுமல்லாமல், பத்தலபள்ளியில் கட்டப்பட இருக்கிற பாலம் மற்றும் சாலை பணிகள் முடிவடைகிற வரைக்கும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி தவறினால், தன்னார்வலர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்படும். ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இதற்கு செவிசாய்க்குமா?








