இருபத்தொன்பது வயதான நீலகண்டன், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் காவலராக பணியாற்றுகிறார். ஒற்றை யானையால் ஏற்பட்ட ஆபத்தில், தனது உயிரை பணயம் வைத்து பொதுமக்களை காப்பாற்றிய இந்த வீரத்தின் கதை... கடந்த நாள் உண்மையில் நடந்த நிகழ்வின் கிராபிக் காட்சிகள் உங்கள் பார்வைக்காக!
ஓசூர், டெக்கான் மேட்டுநிலத்தில் (deccan plateau) அமைந்துள்ளது. ஓசூர் மலைகளும் மலை சார்ந்த இடங்களையும் கொண்ட குறிஞ்சி நிலம் சார்ந்த பகுதி.
ஓசூர் வனக்கோட்டம் இரண்டு காப்புக் காடுகளை உள்ளடக்கியது. தேன்கனிக்கோட்டை, உரிகம், அஞ்செட்டி, ஜவளகிரி, ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி என ஏழு வனச்சரகங்கள் உள்ளன. ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவுள்ள காடுகளை உள்ளடக்கியது.
முப்பத்தி மூன்று வகை பாலூட்டிகள், இருநூற்று எழுபத்தி இரண்டு பறவை இனங்கள், இருபத்தி நான்கு வகை ஊர்வன, ஒன்பது நீர்வாழ் உயிரினங்கள், நாற்பத்தி எட்டு மீன் வகைகள், நூற்றி அறுபத்தி மூன்று வண்ணத்துப்பூச்சி வகைகள், மற்றும் நானூற்றி அறுபத்தி எட்டு தாவர வகைகளை உள்ளடக்கியது ஒசூர் காடுகள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சுமார் முப்பது விழுக்காடு நிலப்பரப்பு காடுகளை உள்ளடக்கியது. அதாவது சுமார் ஆயிரத்து ஐந்நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓசூர் காடுகள் அமைந்துள்ளன.
ஓசூர் காடுகளை பொருத்தவரை, இங்கு வாழும் முதன்மையான உயிரினம் யானைகள்.
மனிதர்கள் காடுகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாலும், யானைகளின் ஆயிரம் ஆயிரம் ஆண்டு வழித்தடங்களை தடுத்து வருவதாலும், யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் தொடர்கதை ஆகி வருகிறது. ஓசூர் வனக்கோட்டம், வனக்காப்பாளரின் கட்டுப்பாடு மற்றும் ஆட்சியின் கீழ் வருகிறது.
இருபத்தி ஒன்பது வயதுடைய நீலகண்டன், தேன்கனிக்கோட்டை வனச்சாரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார்.
ராயக்கோட்டை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, தடிக்கல் என்கிற ஊரின் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த ஒற்றை யானையை காட்டுப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனக்காவலர் ராம்குமார் என்பவர் அது தலைமையில் பதினைந்திற்க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கடந்த பதிமூன்றாம் நாள் காலை வேளையில் ஈடுபட்டனர்.
பகுதியில் அமைந்துள்ள பாறை மீது நின்று, யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்ட வந்த நிலையில், பொதுமக்கள் சிலர் இதை வேடிக்கை பார்ப்பதற்காக கூடியிருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையில், வேட்டை தடுப்பு காவலர் நீலகண்டன், பட்டாசுகள் வெடித்து, யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பட்டாசு வெடித்ததை கண்டு எரிச்சல் அடைந்த யானை, கடும் கோபமடைந்தது. பொதுமக்களை தாக்கும் விதமாக சீறி கொண்டு வந்தது. யானையை விரட்டும் பணியில் இருந்த நீலகண்டன், பொது மக்களை யானை தாக்க வேகமாக வருவதை கண்டு குறுக்கே சென்று தடுக்க முயற்சித்தார்.
இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்ததில், கோபம் கொண்ட யானை தனது முன்னங்காலை கொண்டு, அவரது முதுகுப் பகுதியில் மிதித்தது.
படுகாயம் அடைந்த நிலையிலும், நீலகண்டன், தனது எச்சரிக்கை உணர்வால், யானையின் பின்னங்காலை இறுகக் கட்டிக் கொண்டார். யானை மற்றொரு பின்னங்காலை வைத்து, அவரை கீழே தள்ளி விட முயன்றது.
அவர் யானையின் காலை இறுக கட்டிக் கொண்டதால், அச்சத்தில், யானை காட்டுப்பகுதியை நோக்கி ஓடியது. சூழ்நிலையை தனது வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட நீலகண்டன், யானையின் காலில் இருந்து தன்னை விடுவித்து உயிர் தப்பினார்.
யானை தாக்கியதால், இடுப்பு மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்தார். வனத்துறையினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் மருத்துவம் பெற்று வருகிறார்.
வனத்துறையினர் பொதுமக்களின் உயிர்களுக்கும் மற்றும் உடமைகளுக்கும் வன விலங்குகளால் அச்சுறுத்தல் ஏற்படும்பொழுது, தங்களது உயிரை பணயம் வைத்து, மக்கள் பணியாற்றுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு.
வேட்டை தடுப்பு காவலர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினரின் பணிகளை கமெண்ட் செக்ஷனில் உங்களது வாழ்த்துச் செய்தியை பதிவிட்டு பாராட்டுங்களேன்.








