Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் பாதாள சாக்கடை திட்டம்... அதல பாதாளத்திற்கு ஓசூர் மாநகராட்சியின் Reputation இழுத்துச் செல்கிறதா?

ஓசூர் பாதாள சாக்கடை திட்டம்... அதல பாதாளத்திற்கு ஓசூர் மாநகராட்சியின் ரெப்புடேஷனை இழுத்துச் செல்கிறதா? 

ஓசூர் பாதாள சாக்கடை திட்டத்தின் நிலை குறித்து, காணொளி காட்சியையும், பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட தொகுப்புகளையும் உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். பெரும்பாலும் இது மக்கள் கருத்தாகவே புரிந்து கொள்ள வேண்டும்.  வேலை நடக்கும் பெரும்பாலான பகுதிகளில், குண்டும் குழியும், சேரும் சகதியும் ஆக, முழுமையாக வேலையை முடிக்காமல் விட்டு விட்டு சென்றுள்ளனர்.  சாக்கடை திட்டத்தின் அவல நிலை குறித்து உங்கள் பார்வைக்காக..

ஊடகவியலாளர்கள் காணொளி பதிவதற்காக மாநகராட்சியின் கூட்ட அரங்கில் நடமாடுவது அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக மேயர் அவர்கள் கருத்து கூறியிருந்தார்.  இதுகுறித்து தன்னார்வலர் ஒருவர், தமது கருத்தை ஓசூர் ஆன்லைனிடம் பதிவு செய்த போது, அவை நடவடிக்கையின் போது ஊடகவியலாளர்கள் வருவது இடையூறாக இருக்கிறது என உணரும் மேயர் அவர்கள், ஓரளவிற்கு பயன்படுத்தும் அளவில் இருந்த சாலைகளை, குண்டும் குழியுமாக பல மாதங்களாக விட்டு வைத்திருப்பது, அவரது ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள், வேலைக்கு செல்வதை எந்த அளவிற்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்பதை அவர் தனது நிலையில் இருந்து ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

2016-ம் ஆண்டு, ஒன்றிய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓசூர் குடிநீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இந்தத் திட்டத்திற்கான செலவினங்களில் 50% ஒன்றிய அரசும், 30 விழுக்காடு மாநில அரசும், 20 விழுக்காடு ஓசூர் உள்ளாட்சி அமைப்பும் ஏற்றுக்கொண்டன.  மேல்நிலைத் தொட்டிகள் கட்டுவதாகச் சொல்லி, பல மேல்நிலை தொட்டிகள் உடைக்கப்பட்டு, வேலைகள் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், புதையுண்ட குழாய்கள், கேட்பாரற்று கிடக்கின்றன. 

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2017 ஆம் ஆண்டு, முன்னாள் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அமைச்சராக இருந்த திரு பாலகிருஷ்ணா அவர்கள், ஓசூருக்கு ஒன்றிய அரசின் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில், கடந்த 2024 டிசம்பர் 21 ஆம் நாள், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களால், சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓசூர் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட்டது. 

மேல் சொன்ன இரண்டுக்குமான ஒற்றுமை என்னவெனில், இரண்டு ஒப்பந்தங்களையும் எடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவது  குஜராத்தைச் சேர்ந்த நிறுவனங்கள்.   இதற்கு மேல் கருத்து சொல்ல விருப்பமில்லை.  புரிந்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருந்தால், முதன்மையானவற்றை முதலில் முடித்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக அடுத்த பணிகளை மேற்கொள்வார்கள்.  எடுத்துக்காட்டாக, வீடு கட்டுவதாக இருப்பின், நிலை கால் வைத்து விட்டு, அதன் தொடர்ச்சியாக வீட்டின் பிற பகுதிகளை கட்டத் துவங்குவர்.  பாலம் கட்டுவதாக இருப்பின், பாலத்தின் முதன்மையான பகுதிகளை முடித்துவிட்டு, இரு மருங்கிலும் மண் நிரப்பும் வேலையை, கடைசியாக செய்வார்கள். 

ஆனால் பாதாள சாக்கடை திட்டத்தை பொறுத்தவரை, முதன்மையான பணிகளை முதலில் செய்யாமல், முட்டுச் சந்துகளில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் Deccan Plateau அமைந்துள்ள குறிஞ்சி நிலம் சார்ந்த பகுதி என்பது உலகு அறிந்தது.  மேடு பள்ளங்களை கொண்ட ஓசூரில், மேடு பள்ளங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பாதாள சாக்கடை திட்டத்தின் கட்டுமான பணிகளை நடைமுறைப்படுத்தி வருவதாக, பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மாநகராட்சியிடம் இது குறித்து வினவினால், அவர்கள் சொல்லும் ஒரே பதில், மோட்டார் வைத்து கழிவு நீரை இறைப்போம்.  அப்படி பார்த்தால் இவர்கள், சுமார் 25000 நீர் இரைப்பான்களை நிறுவ வேண்டும்.  மழை பொழியும் பொழுது மின்தடை ஏற்பட்டால், கழிவுநீர் தாழ்வான குடியிருப்பினுள் நுழையும்.  தெரிந்தே செய்கிறார்களா?  அல்லது கணக்கிற்காக  மட்டும் செய்கிறார்களா என்பது புரியவில்லை ! என வல்லுனர்கள் வருந்துகின்றனர்.

பாறை மிகுந்த பகுதிகளில், குழி தோண்டி சேம்பர் மட்டும் பதிக்கின்றனர்.  குழாய்கள் எதுவும் பதிப்பதில்லை.  இது எந்த வகையிலான அறிவியல் தொழில்நுட்பம் என பொதுமக்கள் நகைப்பாக கேட்கின்றனர்.

அந்திவாடி விளையாட்டு திடலுக்குப் பின்புறம், ஓசூர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தேவையான, சேம்பர் உற்பத்தி செய்கிறார்கள்.  அதன் தரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம். 

இந்த காணொளியில், ஓசூர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சேம்பர் உற்பத்தி செய்வதை காணலாம்.  ரெடி மிக்ஸ் கான்கிரீட் மற்றும் வளைக்கப்பட்ட இரும்பு Mesh இவற்றை ஒரு மோல்டில் வைத்து, அதில் இந்த ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஊற்றி, காய வைத்து எடுத்து, ஊர் ஊராக அனுப்புகிறார்கள். அழுத்துவதற்கு என்று எவ்வித இயந்திரமும் இல்லை.  கான்கிரீட் கலவை மோல்டிங் முழுவதுமாக சென்றடையும் விதமாக, அடிப்படையாக பயன்படுத்தும் வைப்ரேட்டர் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை.  பொதுவாக க்யூரிங் என்கிற பெயரில், தண்ணீரில் இத்தகைய தொட்டிகளை ஊற வைப்பார்கள். 

ஆனால் இங்கே அத்தகைய செயல்பாடுகள் எதுவும் இல்லை. இந்த இரும்பு Mesh பயன்படுத்தும் தொழில்நுட்பம், சாலைகளில் பயணிக்கும் சரக்கு வண்டிகளின் எடைகளை தாங்கிக் கொள்ளுமா? க்யூரிங் என்கிற நடைமுறை இப்பொழுது தேவை அற்று போய்விட்டதா?

இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து, வல்லுநர்கள் கமெண்ட் செக்ஷனில் கருத்து கூறினால் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.  வல்லுனர்களின் கருத்தை வரவேற்கிறோம்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: