தொப்பூர் கணவாய் பேய், தனது நடமாட்டத்தை, கிருஷ்ணகிரி ஓசூர் இடையே இடம்பெயர்த்து கொண்டதா?
தேசிய நெடுஞ்சாலை 44!. பல ஆண்டுகளாக தொப்பூர் கணவாயில் பல்வேறு சாலை விபத்துக்கள் நடைபெற்று வந்தன. இதில் ஏராளமான உயிர்பலிகள் ஏற்படுவதை தொடர்ந்து, சாலை விபத்துக்களை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், அப்பகுதியின் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு மனிதர்களால் இயலவில்லை. அதனால் அப்பகுதியில், தொப்பூர் கணவாய் பேய் நடமாடுவதாக, அச்சாலையில் பயணிப்பவர்கள் இடையே அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில், நாளொரு பொழுதும், உயிர் பலி எடுக்கும் சாலையாக கிருஷ்ணகிரி ஓசூர் இடைப்பட்ட ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை, மாற்றமடைந்துவிட்டது. அதனால், தொப்பூர் கணவாய் பேய், அங்கிருந்து இடம் பெயர்ந்து, ஓசூர் கிருஷ்ணகிரி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குடி புகுந்து விட்டதாக பயணிப்பவர்கள் அச்சம் கொள்கின்றனர்.
ஓசூர் கிருஷ்ணகிரி இடையே செல்லும், தேசிய நெடுஞ்சாலை 44, பயணிப்பவர்களுக்கு கொடுங்கனவாக, ஏராளமான சாலை விபத்துக்களை ஏற்படுத்தி, உயிர் பலி வாங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும், இந்த இடைப்பட்ட சாலையில், போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதை ஆகிவிட்டது. அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டி, இச்சாலையில் பயணிப்பவர்களின் துன்பங்களை காட்டிலும், உரிய நேரத்தில் சரக்குகளை கொண்டு செல்ல, சரக்குந்துகளை, 3000 - 4000 கிலோ மீட்டர் தொலைவிற்கு இயக்கும் ஓட்டுநர்களின் துன்பம் எண்ணில் அடங்காது.
இத்தகைய சூழ்நிலைகளுக்கு எல்லாம் பொறுப்பேற்க வேண்டியவர்கள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை என்று மட்டுமே கூற முடியும். ஓசூர் கிருஷ்ணகிரி இடைப்பட்ட 54 கிலோ மீட்டர் கொண்ட இந்த ஆறு வழிசாலையில், முன் திட்டமிடல் எதுவும் இன்றி, சுமார் ஏழு பாலங்களுக்கான கட்டுமான பணிகளை ஒரே நேரத்தில் துவக்கி உள்ளனர். முறையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்காமல், நாட்களை கடத்திச் செல்வது, ஓட்டுனர்கள் இடையே மன அழுத்தத்தை மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தி விடுகிறது.
வட இந்தியாவையும், தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் இந்த முதன்மையான இந்தியாவின் முதுகெலும்பு சாலையில், முறையான பராமரிப்பை, ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை துறை மேற்கொள்ளாததால், அவ்வப்பொழுது பாலங்கள் உடைந்து விழும் அவல நிலையும் ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை துறையின் அலட்சியமான போக்கால், தொப்பூர் கணவாய்க்கு இணையான சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் இப்பகுதி சாலையில் ஏற்படுகிறது.
உயிர் இழப்புகள் ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டின் தொழில் முனைவோரும், பொருளாதார வளர்ச்சியும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பயணிகளும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி, இதனால் மனித வள மேம்பாடும் பாதிப்படைகிறது.
குறைகளை மட்டும் சொல்லும் நாம், தீர்வு காண வழிகளையும் பொதுமக்களிடம் கேட்டு சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இது தொழில் நுட்பம் அல்லது அறிவியல் சார்ந்த கருத்து இல்லை. நாள்தோறும் இச்சாலையில் பயணிக்கும் மக்கள், ஓசூர் ஆன்லைனிடம் தெரிவித்த கருத்துக்களை உங்களிடம் பகிர்கிறோம்.
மேற்கொள்ளப்பட்டுவரும் பாலக்கட்டுமான பணிகள், இந்த ஆறு வழிச்சாலையில், விரைவான மற்றும் இடையூறற்ற பயணத்திற்கு அடிப்படை தேவையானது. ஆனால், மாற்றுப்பாதை முறையாக அமைக்காமல், ஒப்பந்ததாரர்கள், குறுகலான மற்றும் கரடு முரடான பாதையை அமைத்துக் கொடுத்திருப்பதால், ஓட்டுநர்கள் கடும் மன உளைச்சல் மற்றும் உடல் சோர்வு அடைய வழிவகை செய்கிறது.
தேசிய நெடுஞ்சாலை சார்பில், போக்குவரத்து பாட்டில் நெக் என்று சொல்லப்படும் இடங்களில், போக்குவரத்தை சீர் செய்வதற்கு எவ்வித ஏற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை. அவர்களின் முதன்மையான குறிக்கோள், சுங்கச்சாவடிகளில் சுங்கம் வசூலிப்பதாக மட்டுமே திகழ்கிறது என பெரும்பாலான, இச்சாலையை பயன்படுத்துபவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
ஓசூர் நகர் போக்குவரத்தை பொருத்தவரை, சீதாராம் மேடு அருகில், சரக்குந்துகளையும், பிற வண்டிகளையும், தரம் பிரித்து பாதையை மாற்றி விடுவதை காட்டிலும், தொரப்பள்ளி பகுதியிலேயே இத்தகைய பணிகளை மேற்கொண்டு, அணுகு சாலையை போக்குவரத்து நெரிசலின்றி கவனித்துக் கொண்டால், பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஓசூர் நகரில் உள் வட்டச் சாலை வழியாக பயணிக்கும் வண்டிகளுக்கு இடையூறாக அமைவது, தளி சாலையில் அமைந்துள்ள இருப்புப் பாதை கதவு. காவல் துறையினர், டிராபிக் வார்டனங்களுடன் இணைந்து தங்களால் இயன்ற அனைத்து விதமான போக்குவரத்து முறைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டாலும், உள்ளுருக்குள் பயணிக்கும் வண்டி ஓட்டுநர்களின் ஒத்துழைப்பு இல்லாமையால், இப்பகுதி சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலால் பல ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகிறது.
முறையான, கள ஆய்வு மற்றும் திட்டமிடுதல் இன்றி, இந்த இருப்புப் பாதை பகுதியில் பாலம் கட்டுவதற்கு தென்மேற்கு ரயில்வே மேலாண்மை முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், நமது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், இந்த பாலம், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக கட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தியதன் பயனாக, முறையான திட்டமிடுதலுக்கு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதற்கு இடையே, அடுத்ததாக, பத்தலப்பள்ளி அருகே கட்டப்பட்டு வரும் ஓசூர் புதிய பேருந்து நிலையம் கடந்து செல்லும் சாலை பகுதியில், சுமார் ஒன்றேகால் கிலோ மீட்டர் நீளத்திற்கு, புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. மேலும், S.T.R.R. எனப்படும், நகரங்களை இணைக்கும் வட்டச் சாலை பணிகளுக்காக, பேரண்டபள்ளி அருகே, மேற்கொண்டு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் கிடைக்கின்றன.
இவ்விரண்டு கட்டுமான பணிகளும், தேவையானவையாக இருப்பினும், முறையான திட்டம் வகுத்து, ஓட்டுனர்களுக்கு இடையூறு இன்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இச்சாலையை பயன்படுத்தும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஓசூர் உள் வட்டச் சாலையை பொருத்தவரை, ராமநாயகன் ஏரிக்கரை பகுதியில் இருந்து, பவானி பேலஸ் மண்டபம் வரை, பறக்கும் மேம்பாலம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு சுமார் 150 கோடி ரூபாய் திட்டம் வகுத்து ஒதுக்கிய பின்னரும், ஒன்றிய அரசின் சட்ட நடைமுறைகள் வழி ஏற்படுத்தி தராததால், உள் வட்டச் சாலையின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட முடியாத நிலையில் முடங்கிக் கிடக்கின்றன.
தொப்பூர் கணவாய் பேய், கிருஷ்ணகிரி ஓசூர் இடையேயான சாலையில் குடி பெயர்ந்ததாக கூறப்படும் கருத்துக்கள் குறித்து தன்னார்வலர் ஒருவரை வினவிய போது, அவர் ஓசூர் ஆன்லைனிடம், இப்பகுதிகளில் நடைபெறும் அனைத்து விபத்துகளும், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் மெத்தன போக்கினால் மட்டுமே நடைபெறுகிறதே தவிர, இச்சாலை விபத்துகளுக்கும், மனித கற்பனை பயங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தார்.
ஒன்றிய அரசு, ஓசூர் கிருஷ்ணகிரி இடைப்பட்ட இச்சாலை தொடர்பிலாவது முழுமையான கவனம் செலுத்தி, பயணிக்கும் இந்திய குடிமக்களின் உயிர் காக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.








