10-கும் மேற்பட்ட சிப்காட் தொழிற்பேட்டைகள் மற்றும் ஏராளமான சிறு குறு தொழிற்சாலைகளையும் தன்னகத்தே கொண்டு, வேகமாக வளர்ந்து வரும் சிறந்த தொழில் நகரமாக விளங்கி வருகிறது ஓசூர்.
விரைவில் பெங்களூருவை, வளர்ச்சி பாதையில் முந்தி செல்ல இருக்கிறது ஓசூர்! பத்துக்கும் மேற்பட்ட சிப்காட் தொழிற்பேட்டைகள் மற்றும் ஏராளமான சிறு குறு தொழிற்சாலைகளையும் தன்னகத்தே கொண்டு, வேகமாக வளர்ந்து வரும் சிறந்த தொழில் நகரமாக விளங்கி வருகிறது ஓசூர். நமது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y பிரகாஷ் அவர்களின் தொடர் முயற்சியால், ஏராளமான சாலை வசதிகள், மற்றும் இருக்கும் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், முதன் முதலில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைப்பதற்கான தொழிற்பேட்டை, ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டது. இதுவே தமிழகத்தின் முதல் சிப்காட். இரண்டாவதாக 1974 ஆம் ஆண்டு, ஓசூரில் சிப்காட் அமைந்தது. ஓசூரில், லால் தொழிற்சாலை, எல். கே. எம். தொழிற்சாலை, டி.வி.எஸ். மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை முதலாவதாக நிறுவினர்.
இதனால் தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த ஓசூர், 1992-ல் நகராட்சியாக மாறியது. இப்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள ஓசூர், இன்று பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வாழ்வாதாரம் வழங்கி வருகிறது.
கொய்மலர்கள், பலவண்ண காப்ஸிகாம்கள், காய்கறி கனிகள் என பண பயிர்களையும், குண்டூசி முதல் விமானம் வரை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்ட தொழிற்சாலைகளையும் உள்ளடக்கியது ஒசூர்.
ஏற்கனவே ஏராளமான தொழிற்சாலைகளை உள்ளடக்கிய ஓசூர், பெங்களூரு நகரை எல்லையாக கொண்டிருப்பதால், அதன் மேற்கொண்டு வளர்ச்சி, சூளகிரி பகுதியை நோக்கி செல்கிறது. ஓசூரில் மூன்றாவது சிப்காட், சூளகிரி அருகே சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு சுமார் 882 ஏக்கர் பரப்பளவு, ஓசூரின் நான்காவது சிப்காட் அமைக்கும் பணி, தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, இதற்காக சுமார் 1003 கோடி ரூபாய் முதலீடு செய்து, நிலங்கள் கையகப்படுத்தி, தொழிற்சாலைகள் அமைவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.
சூளகிரி சிப்காட்டை பொறுத்தவரை, இது முழுக்க முழுக்க, மின்சார வண்டிகள் உற்பத்திக்கு முதன்மை கொடுக்கும் நிறுவனங்களுக்கும், அது சார்ந்த தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களுக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான இடமாக, மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ஹைக்யூ எலக்ட்ரானிக்ஸ் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பிலும், டொயோட்டாவின் கூட்டு நிறுவனமான C.M.R. Toyatsu சுமார் நான்கரை ஏக்கர் நிலப்பரப்பிலும், சூளகிரி சிப்காட் வளாகத்தில் தங்களது தொழிற்சாலையை அமைத்து வருகின்றன.
தமிழக அரசின் இந்த முயற்சியால், மின்சார வண்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்கள், ஏராளமானவை ஓசூரில் முதலீடு செய்து வருகின்றனர். ஏற்கனவே ஓலா நிறுவனம், 2 சக்கர வண்டி உற்பத்தியில் முதன்மை வகித்து வரும் நிலையில், நான்கு சக்கர வண்டி உற்பத்திக்கு, சுமார் 7614 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தகைய சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது. ஓலா நிறுவனம், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில், தனது தொழிற்சாலைகளை, தனியே ஒரு சிப்காட்டில் அமைத்து வருகிறது.
டாடா குழுமத்தின் ஐபோன் கேசிங் அலகில், ஏற்கனவே பதினைந்தாயிரம் நபர்கள் பணியாற்றி வரும் நிலையில், மேற்கொண்டு சுமார் 40,000 பணி வாய்ப்பு ஏற்படுத்தும்படி, சுமார் 12,000 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டில், மிகப்பெரிய தொழிற்சாலை வளாகம் ஒன்றை ஓசூர் அருகே, கெலமங்கலத்தை அடுத்து அமைத்து வருகிறது. இது, டாடா குழுமத்தின் சுமார் 20,000 கோடி ரூபாய் முதலீடு கொண்டதாக இந்த வளாகம் அமையும்.
சூளகிரி அருகே குருபரப்பள்ளியில் அமைந்துள்ள சிப்காட், மேற்கொண்டு விரிவாக்கப்பட்டு, இன்னும் பல தொழிற்சாலைகள் வர இருக்கின்றன. சூளகிரியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உத்தனபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், டாடா நிறுவனம் உள்ளிட்ட தொழிற்சாலைகள் ஏற்கனவே இயங்கி வரும் நிலையில், சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில், ஓசூரின் ஐந்தாவது சிப்காட் அமைக்கும் பணி, அப்பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.
இத்தகைய முதலீடுகளை ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஈர்த்து வரும் நிலையில், ஓசூருக்கான துணை நகரமாக, வேகமாக சூளகிரி வளர்ந்து வருகிறது. சூளகிரியில் மேற்கொள்ளப்படும் ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு, குறிப்பாக வீட்டுமனை மற்றும் வணிக வளாகம் கட்டுவதற்கு ஏற்புடைய மனை முதலீடுகள், குறுகிய நாட்களிலேயே பெரிய அளவிலான வருவாயை ஈட்டி தரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
STRR சாலை, தேசிய நெடுஞ்சாலை 844, சூசுவாடி மற்றும் பேரண்டபள்ளியை இணைக்கும் வட்டச் சாலை, ஓசூர் உள்வட்ட சாலையில் பறக்கும் மேம்பாலம், மெட்ரோ ரயில் திட்டம், ஓசூர் இரட்டை வழி இருப்புப் பாதை தடம், ட்ரம்பெட் மேம்பாலம், ஓன்னல்வாடி அருகே வர இருக்கும் பட்டர்பிளை மேம்பாலம், ஓசூர் விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஓசூருக்கு கிடைக்கப்பெறும் பொழுது, ஓசூர் கண்டிப்பாக, வளர்ச்சி பாதையில் பெங்களூருவை முந்திச் செல்லும்.








