ஓசூர் விமான நிலையம் அமைப்பதில், தமிழ்நாடு முதலமைச்சர், அதற்கு துணையாக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், முனைப்பு காட்டி வருகின்றனர். ஓசூர் விமான நிலையம் எந்த இடத்தில் அமையப்போகிறது? பெங்களூரு விமான நிலையம், ஓசூர் விமான நிலையம் அமைப்பதில் தடையாக இருக்கிறதா? இந்த காணொளியில், ஓசூர் ஆன்லைன் மேற்கொண்ட கள ஆய்வு குறித்து தெரிந்து கொள்ளலாம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஓசூரில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும், ஆண்டொன்றிற்கு மூன்று கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயணத்திற்கு பயன்படுத்துவார்கள் என்றும், சரக்குகள் கையாளவும் தனியாக முனையம் இருக்கும் என்றும் திட்டம் வகுத்து அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியிட்டது முதல், கர்நாடக மாநிலம் தரப்பில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா குறிப்பிடுவது போல், ஏற்கனவே உற்பத்தி தொழிற்சாலைகளை, ஓசூருக்கு கர்நாடகம் இழந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் பெங்களூரு விமான நிலையம் அருகில், ஓசூரில் விமான நிலையம் அமைந்தால், கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கிய பெங்களூர் விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் கடுமையாக பாதிக்கப்படும் என கருநாடக அரசு கருதுகிறது.
மேலும், உலகளாவிய அளவில், டொம்டோம் ட்ராபிக் இன்டெக்ஸ் குறியீட்டின்படி, பெங்களூரு நகர் கடும் போக்குவரத்து நெரிசலால் மெதுவாக பயணிக்கும் நகரங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அதாவது பெங்களூருவில் 10 கிலோமீட்டர் பயணிப்பதற்கு, 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் ஓசூர் விமான நிலையம் அமைந்தால், அதை பயன்படுத்துவதற்கே விரும்புவார்கள்.
தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக, ஓசூர் அடுத்த பெலகொண்டபள்ளி, பாகலூர் சுற்றுவட்டார பகுதி மற்றும் சூளகிரி - உத்தனபள்ளிக்கு இடையே அமைந்துள்ள உலகம், ஆகிய மூன்று இடங்களை தேர்வு செய்து, ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடங்களாக ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் விமான போக்குவரத்து ஆணையத்திடம் முன்மொழிந்தது.
விமான போக்குவரத்து ஆணையம், பெலகொண்டபள்ளி மற்றும் உலகம் ஆகிய பகுதிகள், சிறந்தவையாக இருப்பதாகவும், மேற்கொண்டு அவ்விரு இடங்களிலும், Obstacle Limitation Surface Survey மேற்கொள்ள அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் இவ்விரு இடங்களிலும், வான் தடை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு இடங்களிலும், வெவ்வேறு விதமான வான் தடை ஏற்படுத்தக்கூடிய இயற்கை அமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கையும் கடந்த மாதம் தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசை பொறுத்தவரை, ஓசூரில் விமான நிலையம் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைப்பது மற்றும் 5000 ஏக்கர் பரப்பளவில் பாரந்தூரில் விமான நிலையம் அமைப்பது ஆகியவை அரசின் சாதனை பட்டியலில் இடம் பெற வேண்டும் என்கிற முனைப்பு உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், பெலகொண்டபள்ளி அல்லது உலகம், ஆகியவற்றில் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்பது குறித்து அறிவிப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரும் என்கிற செய்திகள் பல ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஓசூர் ஆன்லைன் சார்பில் இவ் இரண்டு இடங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டோம்.
பெலகொண்டபள்ளியை பொருத்தவரை, இது ஓசூர் மிக அருகில் அமைந்துள்ளது. சாலை வசதிகளை பொருத்தவரை, தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை, தேசிய நெடுஞ்சாலை 844, எஸ் டி ஆர் ஆர் சாலை, பூனப்பள்ளி - தேன்கனிக்கோட்டை இணைப்புச் சாலை, என ஏராளமான சாலை வசதிகளை கொண்டுள்ளது. ஏற்கனவே இங்கு சுமார் 250 ஏக்கர் பரப்பளவில், தனுஜா ஏரோஸ்பேஸ் என்கிற விமான பணிமனை செயல்பட்டு வருகிறது. ஓசூர் அருகே இந்த பகுதி இருப்பதால், நிலங்களின் விலை, மிக உயர்வாக உள்ளது. மேலும் இப்பகுதிகளில் பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டுமானால், பெரிய அளவிலான முதலீட்டை இதற்கு மட்டுமே செலவிட வேண்டிய சூழல் ஏற்படும்.
உலகம் பொருத்தவரை, சூளகிரி உத்தனபள்ளி சாலையில், இரண்டு ஊர்களுக்கும் நடுவில், 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சூளகிரியை பொறுத்தவரை, இது வேகமாக வளர்ந்து வரும் ஓசூருக்கான துணைநகரம். தேசிய நெடுஞ்சாலை 44 சூளகிரியை கடந்து செல்கிறது. தேசிய நெடுன்சாலை 844 உத்தனப்பள்ளி அருகே செல்கிறது. விரைவில், சூளகிரியை, பெங்களூரு சென்னை விரைவு சாலையுடன் இணைப்பதற்கான திட்டம் வெளியிடப்பட உள்ளது. சூளகிரி ராயக்கோட்டை நான்கு வழி இணைப்பு சாலை பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, சாலை வசதிகளை பொறுத்தவரை, உலகம் சென்றடைவதும் விரைவானதாக இருக்கும்.
ஆனால், உலகம், தென்பெண்ணை ஆற்று நீர் பாசனம் கொண்ட பகுதி. நீர்ப்பாசனம் கொண்ட விளை பொருள் உற்பத்தி இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இத்தகைய நன்செய் நிலங்களை கையகப்படுத்தி, விமான நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டால், பகுதி பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு ஏற்படுவதை காட்டிலும், சுற்றுச்சூழல் பாதிப்பு கடுமையாக ஏற்படும். விளைபொருள் உற்பத்தி பாதிப்பால், உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், மாநிலம் முழுவதும் மக்களை பாதிக்கும்.
களச் சூழல்கள் குறித்து, நன்கறிந்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மேலாண்மை ஆகியோர், ஓசூர் விமான நிலையத்தை, போச்சம்பள்ளியில் அமைக்கலாம் என முன்மொழிந்து உள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.
போச்சம்பள்ளியில் விமான நிலையம் அமைந்தால், பெங்களூரு விமான நிலையத்திடமிருந்து பெறப்படும் எதிர்ப்பு குறைவாக இருக்கும். ஓசூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து, இந்த விமான நிலையத்தை விரைவாகவும் எளிதாகவும் சென்றடையலாம்.
அடுத்த சில மாதங்களில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என முழு நம்பிக்கையுடன் காத்திருப்போம்.