ஓசூரைச் சுற்றி சுற்றி, குறுக்கும் நெடுக்குமாக, மலைத்து வாய் பிளந்து நிற்க வைக்கும், சாலை கட்டுமானங்கள்! இத்தகைய சாலைகளால், ஓசூர் நகரம், பெங்களூர் நகர் போன்று சாலை போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல், பரந்து விரிந்த நகரமாக, தொழில் முனைவோருக்கும், வாழும் பொது மக்களுக்கும் சிறந்த வாழ்விடமாக அமையும். இந்த காணொளியில், ஓசூரில் சுற்றி நடைபெற்று வரும் சாலை கட்டுமான பணிகள் குறித்து, தெரிந்து கொள்ளலாம் வாங்க!
ஓசூரில் கட்டப்பட்டு வரும் சாலைகள், ஓசூரின் இதுவரை வெளிக்கொண்டு வரப்படாத வளர்ச்சி வாய்ப்புகளை தட்டி எழுப்பி, மிகப் பெரும் வளர்ச்சியை ஓசூருக்கு வழங்க போகிறது! இந்தச் சாலைகள் வெறும் தார் மற்றும் கான்கிரீட் கட்டுமானங்கள் என்பது அல்ல... இவை ஓசூர் நகர் வளர்ச்சியின் நாளங்கள். இந்த சாலை கட்டுமானங்கள், புதிய கட்டத்திற்கு, ஓசூரை உயர்த்திச் செல்ல போகிறது.
ஓசூரில் முதன்மையான சாலைகளாக, தேசிய நெடுஞ்சாலை 44 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 648 ஆகியவை முதன்மையாக விளங்கி வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் முன்னோக்கு திட்டத்தால், ஓசூர் தளி சாலை, ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலை, ஓசூர் உள் வட்டச் சாலை, அத்திப்பள்ளி ராயக்கோட்டை சாலை போன்றவை ஓசூரை புதிய வளர்ச்சி நிலைக்கு கொண்டு சென்றது.
ஓசூரில் ஏற்கனவே குருபரப்பள்ளி சிப்காட்டை சேர்த்து நான்கு சிப்காட் தொழிற்பேட்டைகள் இயங்கி வரும் நிலையில், நேரடியாகவும், மறைமுகமாகவும், மேற்கொண்டு ஏழு சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பெரும் முதலீடுகளைக் கொண்ட, தொழிற்சாலைகள் ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய பெரு வளர்ச்சி, ஓசூரை அகண்டு விரிந்த வளரும் நகரமாக உயர்த்தி வருவதால், இணைப்பு சாலை வசதிகளை மேம்படுத்துவது சூழ்நிலை கட்டாயமாக மாறி வருகிறது.
முதலில், மாநில அரசு சார்பில் கட்டப்பட்டு வரும், அத்திப்பள்ளி ராயக்கோட்டை சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதால், எத்தகைய பயன்கள் ஓசூரின் வளர்ச்சிக்கு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த சாலையில், ஏற்கனவே டாடா நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவி உள்ளது. இந்த சாலை பணி முடிக்கப்பட்டால், அந்திவாடி, மத்திகிரி, கெலமங்கலம், பைரமங்கலம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள், ஒன்றுடன் ஒன்று சிறந்த சாலை வசதியுடன் இணைக்கப்படும். இதனால், பிற சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, இப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு பயணிப்பதை எளிதாக்கும். குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிகளிலேயே ஏற்படுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
அடுத்ததாக, நாம் தேசிய நெடுஞ்சாலை 844 மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் குறித்தும், அது எத்தகைய தாக்கத்தை ஓசூர் போக்குவரத்தில் ஏற்படுத்தும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்! இந்த சாலையால், பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். பயண நேரமும் சுமார் 30 நிமிடங்கள் வரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த சாலை கட்டப்படுவதால், பல்வேறு சாலை சந்திப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. இதனால், தொழில் முனைவோர்களுக்கு, ஏராளமான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அடுத்ததாக, எஸ் டி ஆர் ஆர் எனப்படும், நகரங்களை ஒன்றிணைக்கும் வட்டச் சாலை. இந்த சாலை அமைவதால், ஓசூர் நகரின் நடுப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்படும். பேரண்டபள்ளி பகுதியிலிருந்து, வடக்கு நோக்கி பயணிக்கும் சரக்குந்துகள் மட்டுமல்லாது, அனைத்து போக்குவரத்தும் அவ்வழியாக திருப்பி விடப்படும் பொழுது, பயண நேரம் மற்றும் எரிபொருள் சிக்கனம், பயணிப்பவர்களுக்கு ஏற்படும்.
குறிப்பாக, ஒன்னல்வாடி அருகே, ஓசூர் ராயக்கோட்டை சாலை, எஸ் டி ஆர் ஆர் சாலை, தேசிய நெடுஞ்சாலை 844 என மூன்று சாலைகள் சந்திக்கின்றன. மேலும் இப்பகுதியின் அருகில் தொடர்வண்டி இருப்பு பாதையும் அமைந்துள்ளது. இதனால் இந்த சாலை சந்திப்பு பகுதியை, இப்போதே, சென்னை கத்திப்பாரா சந்திப்புக்கு ஒப்பாக, இப்பகுதி மக்கள் கற்பனை செய்து கொண்டுள்ளனர்.
ஓசூரின் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட வளர்ச்சி. தொழிற்சாலைகளின் நகரமான ஓசூர், விரைவில் தன் அருகாமையில் இருக்கும் பெங்களூர் போன்ற நகரங்களை காட்டிலும் சிறந்த வாழ்விடமாக அமையும்.