Hosur News, ஓசூர் செய்திகள் - Hidden Gems of Hosur! 4 Stunning Dams You Must Visit - Little Ooty of Hosur

ஓசூர் என்றாலே தொழிற்சாலைகள் மட்டும் தானா?  பொழுதுபோக்கிற்கு என்று எதுவும் இல்லையா?  வார இறுதி நாட்களில், குடும்பத்துடன் சென்று வருவதற்கு ஏற்ற இடங்கள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கான விடையாக, இந்த காணொளியில், ஓசூரை சுற்றி அமைந்துள்ள நான்கு அணைகள் குறித்தும், அவற்றை சென்றடைவது எப்படி?, அவற்றின் சிறப்புகள் என்ன போன்ற தகவல்களை பார்க்கலாம்.

முதலில் நாம் சுற்றிப் பார்க்க இருப்பது கெலவரப்பள்ளி அணை. ஓசூருக்கு மிக அருகே உள்ள அற்புதமான வார இறுதி பிக்னிக் ஸ்பாட்!  1976 இல் கட்டப்பட்ட இந்த அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் 13 மீட்டர் உயரமும் 460 மீட்டர் நீளமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. 

ஓசூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. அரசு பேருந்துகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.  கார் மற்றும் இரு சக்கர வண்டிகளில் எளிதாக செல்லலாம். 

காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு அழகான பூங்காக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  மாசடைந்த தண்ணீர் என்பதால், தண்ணீரைத் தொட்டு விளையாடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கலாம்.  

வார இறுதி நாட்களில் குடும்பத்துடன், நண்பர்களுடன், மனதிற்கு இளைப்பாறும் சூழலை தேடினால் – கெலவரப்பள்ளி அணையை கண்டிப்பாக பாருங்க!

அடுத்ததாக, ஓசூரில் இருந்து எளிதாக சென்று வர தக்க அணை என்றால், அது ஓசூர் கிருஷ்ணகிரி இடையே அமைந்துள்ள சூளகிரிக்கு அருகே அமைந்துள்ள அணை. 

சூளகிரியில் இருந்து சுமார், மூன்று கிலோ மீட்டர் பயணித்தால், அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த அணையை சென்றடையலாம். 

1995-ல் கட்டப்பட்ட இந்த அணை, சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விளை நிலங்களுக்கான நீர் ஆதாரமாக திகழ்கிறது. 

சுமார் 18 மீட்டர் உயரம், 600 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணை, வறண்ட நாட்களில் கூட, இந்த அணையை சுற்றி பார்ப்பது என்பது மிக அற்புதமான கண்கொள்ளாக் காட்சி. இந்த அணை, சின்னார் தோன்றுமிடத்தில் அதன் குறுக்கே அமைந்துள்ளது.  

அணை மீது இருந்து சூழ்ந்திருக்கும் மலைகளை பார்க்கும் அனுபவம், சொற்களில் அடக்கி விட முடியாது.  உயரமான மரங்கள், பறவைகள் ஒலி தவிர்த்து வேறு எந்த ஒலியும் இல்லாத சூழல். அமைதியான இடம். கூட்ட நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை.  அமைதியை விரும்புபவர்களுக்கு  சூளகிரி அணை, அருமையான பிக்னிக் ஸ்பாட்!

தேன்கனிக்கோட்டை அருகே, அற்புதமான இயற்கை சூழலில் அமைந்திருக்கும் அழகிய இடம் – பஞ்சப்பள்ளி அணை! இதற்கு மற்றொரு பெயர் ஓசூரின் லிட்டில் ஊட்டி.  மலைகளும் மலை சார்ந்த பசுமையும் உங்களை மெய் மறந்து போக வைக்கும்.

1969-ல் கட்டப்பட்ட இந்த அணை, சின்னாறு தோன்றுமிடத்தில் அமைந்துள்ளது.  அணையின் நீர்த்தேக்க பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அணையின் மதகுகள் தர்மபுரி மாவட்டத்திலும் அமைந்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு.

ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக இந்த அணையை 44 கிலோ மீட்டர் பயணித்து சென்றடையலாம்.  மாற்றுப்பாதைகள் இருப்பினும், தேன்கனிக்கோட்டை வழியாக செல்வது பாதுகாப்பானது.  பாதை முழுவதும் காடுகளும், கிராமப்புற சாலைகளும்.  உண்மையிலேயே, பயணம் முழுவதும் சாலையின் இரு மருங்கிலும் கொட்டிக்கிடக்கும் அழகு நம்மை முழுமையாக வேறொரு உலகத்திற்கு எடுத்துச் சென்று ரசிக்க வைக்கும்.  

அணை சுற்றிலும் பசுமையான மலைகள், பறவைகளின் குரல்கள், நீர் நிலையின் அமைதியான காட்சி. மனதை குளிர வைக்கும் அனுபவம் தரும்.  

ஒரு நாள் பிக்னிக் ஸ்பாட்டாக, பஞ்சப்பள்ளி அணை உங்களை என்றென்றும் வரவேற்கும்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகப்பெரிய அணை என்று சொன்னால் அது கிருஷ்ணகிரி அணை! 

1958-ல் கட்டப்பட்ட இந்த அணை, தென்பெண்ணை ஆற்றின் நீரைத் தடுத்து, கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் சற்று மாசடைந்த நிலையில் காணப்படும்.  

சுமார் 30 மீட்டர் உயரமும், 990 மீட்டர் நீளமும் கொண்ட மிகப் பெரிய அணை இது. அணை மீது உள்ள பார்க், பூந்தோட்டம், குழந்தைகள் விளையாடுவதற்கு சிறந்த இடம்.  குடும்பமாக செல்ல செல்ல ஏற்ற இடம்.  

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரியை கடந்த உடன் வலது புறத்தில் சற்று தொலைவில் இந்த அணை அமைந்துள்ளது. 

ஒரு நாள் பிக்னிக் சென்றுவர சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று.

இந்த அணைகளில் ஏதாவது ஒன்றிற்கு சென்று வந்தீர்கள் என்றால், உங்கள் அனுபவத்தை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுவதற்கு மறக்காதீர்கள்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: