ஓசூருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஏதாயினும் தொடர்பு உள்ளதா? திப்பு சுல்தான் படையெடுப்பு, வெள்ளையர்களின் படையெடுப்பு, ஓசூரில் நிகழ்ந்ததை நாம் அனைவரும் அறிவோம். அதையும் தாண்டி, தகர்க்கப்பட்ட வெள்ளைக்காரர்களின் கோட்டை, இப்போதைய ராம் நகர் பகுதியில் இருந்தது குறித்து அகழாய்வும் மேற்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்கிறோம். விடுதலைப் போராட்டத்தின் போது, ஓசூரில் மகாத்மா காந்தி தங்கிச் சென்ற வரலாறு ஓசூரில் வாழும் நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரிந்து விடப் போகிறது? ஓசூரை சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர், தனது 1600 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வரலாறு தெரியுமா?
ஓசூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறார்களை, இந்த தியாகியின் நினைவிடத்தை சென்று பார்க்க, ஓசூர் பகுதி பள்ளிகள் அழைத்துச் செல்ல வேண்டும். ஓசூரின் விடுதலைப் போராட்ட தியாகியின் வரலாற்றை, வருங்கால சந்ததியினர் என்றென்றும் நினைவில் வைத்திருக்க, வழி வகைகளை ஏற்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகள் இதில் கவனம் செலுத்துமா?
சிதிலமடைந்து கிடக்கும் காந்தியடிகள் தங்கிச்சென்ற குடிலையும், விடுதலைப் போராட்ட வீரர் பி கே தேவ்வையா அவர்களின் வீட்டையும் புனரமைத்து, நினைவுச்சின்னமாகவும், வரலாற்று தடயமாகவும் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசிற்கு தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
1600 ஏக்கர் நிலம் கொடுத்த விடுதலைப் போராட்ட தியாகி பி கே தேவ்வையா வீடு, காந்தியடிகளார் தங்கிச்சென்ற குடிலை போன்றே, கேட்பாரற்று இன்று சிதைந்து கிடைக்கிறது. அன்றைய நாளில் அது ஒரு மாட மாளிகையாக திகழ்ந்ததற்கான அடையாளம், சிதைந்து கிடக்கும் பகுதியிலும், சுவடாக காட்சியளிக்கிறது.
காந்தியடிகள் தங்கி இருந்த போது, அவருக்கென்று ஊஞ்சல் ஒன்று அமைத்து கொடுத்துள்ளனர். ஆட்டு பாலும், கடலை காயும் உணவாக காந்தியடிகளார் உட்கொண்டதாக வாய் வழி செய்தியாக இன்றும் பாரந்தூரில் பேசப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரர் பி கே தேவ்வையா அவர்கள், அன்றைய நாட்களில், ஓசூரில் முதன்மையான நிலக்கிழார் மற்றும் பண்ணையாளராக வாழ்ந்து வந்துள்ளார். காந்தியடிகளாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சுமார் 1,600 ஏக்கர் நிலத்தை தம்மிடம் பணிபுரிந்த ஊழியர்களுக்கும், ஊர் மக்களுக்கும் தானமாக வழங்கி உள்ளார்.
1942 ஆம் ஆண்டு, காந்தியடிகளார், விடுதலைப் போராட்டப் பயணத்தின் ஒரு பகுதியாக, இவ் ஊரில் அமைந்துள்ள இந்தக் குடிலில், மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார். அவரது வாரிசுகளில் ஒருவரான, நரசிம்ம மூர்த்தி என்பவரை பாரந்தூரில் சந்திக்கும் வாய்ப்பு ஓசூர் ஆன்லைனுக்கு கிடைத்தது.
காந்தியடிகளார் தங்குவதற்கு என்றே, 6 அடி அகலமும் 20 அடி நீளமும் கொண்ட செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு குடிலை அமைத்துக் கொடுத்திருக்கிறார், எம் பாரந்தூரில் வாழ்ந்த, விடுதலைப் போராட்ட வீரர் நிலக்கிழார் பி கே தேவ்வையா. காந்தியடிகளார் தங்கி சென்ற அந்த குடில், இன்றோ நாளையோ சரிந்து விழும் நிலையில், வரலாற்றைச் சுமந்து, ஓசூர் பகுதி மக்கள் கூட அறிந்திடாத வகையில் அமைதியாக, தம்மை அடையாளப்படுத்த காத்துக் கொண்டு நிற்கிறது.
ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில், மத்திகிரியை தொடர்ந்து பயணித்தால், ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர் M. பாரந்தூர். தான் மேற்கொண்ட விடுதலைப் போராட்டம் மற்றும் அள்ளிக் கொடுத்த நிலம் தொடர்பாக எவ்வித பீற்றலோ அல்லது சலசலப்போ இன்றி அமைதியாக, நிறைகுடம் தழும்பாது என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது இந்த M. பாரந்தூர்.