Tamil Nadu 2025 - Achievements and Developments made by MK Stalin, CM of Tamil Nadu | Hosur News Update - Video
Tamil Nadu 2025 - Achievements and Developments made by MK Stalin, CM of Tamil Nadu
📅 வெளியீடு நாள்: 20-05-2025
📄 விளக்கம்
வணக்கம் தமிழ் உறவுகளே!
ஓசூர் ஆன்லைன் டாட் காம் இன் இன்றைய " முன்னேறும் தமிழ்நாடு" Podcast-இன் சிறப்புப் பகுதியில், தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பட்ட நிலையைப் பற்றி விரிவாகப் பேசப்போகிறோம். இந்த உரையாடல் இரண்டாயிரத்தி இருபத்தி ஐந்தாம் ஆண்டில், தமிழ்நாடு எப்படி இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்பதையும், அதன் பல்துறை வளர்ச்சி எப்படி நடைபெற்றது என்பதையும் தகவல்களால் நிரப்பி, அதே வேளையில் எளிமையான உரையின் மூலம் விளக்கி கூறுகிறோம்.
முதலில், தமிழ்நாடு மாநிலம், இந்திய நாட்டின் அளவில், எத்தகைய வளர்ச்சியை கண்டுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் நாடு என்றாலே, நம் மனதில், ஒரு பொருளாதார திறன், தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வி மற்றும் பண்பாட்டு வளம் என்ற படிமம் தோன்றுகிறது. இந்த இரண்டாயிரத்தி இருபத்தி ஐந்தாம் ஆண்டு, தமிழ்நாடு. இந்தியாவில் பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக திகழ்கிறது என்பது பெருமைக்குரியது.
நம்ம தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி GSDP ரூபாய் பதினேழு புள்ளி இரண்டு மூன்று லட்சம் கோடி என்ற அளவைத் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் பதினைந்து புள்ளி ஏழு ஒன்று லட்சம் கோடி ரூபாயை ஒப்பிட்டால் சுமார் ஒன்பது புள்ளி ஏழு விழுக்காடு வளர்ச்சி. இது இந்திய அளவில், தமிழ்நாடு மாநிலம் வளர்ச்சி விகிதத்தில் முதலிடம் வகிக்கிறது என்பதை எடுத்துக் கூறுகிறது. இந்த வளர்ச்சி இலக்கை, பல துறைகளின் ஒத்துழைப்பு மற்றும் அரசு திட்டங்களால் எட்ட முயன்றது.
அடுத்ததாக, தமிழ்நாடு மாநிலம், தொழில்துறை வளர்ச்சியில் எத்தகைய இலக்கை எட்டியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்!
தமிழ்நாடு, குறிப்பாக, ஆட்டோமொபைல், கனரக தொழிற்சாலைகள், மின்னணு உற்பத்தி, ஆடைகள், பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. ஓர் எடுத்துக்காட்டாக, ஓசூர் மற்றும் திருபெரும்புதூர் பகுதிகளில் ஓலா, ஏத்தர், டெல்டா, ஃபாக்ஸ்கான், பெகட்ரான் போன்ற முன்னணி நிறுவனங்கள் மின்சார வண்டிகள் மற்றும் ஐபோன் பாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
இந்தியா முழுவதும் ஐ ஃபோன் உற்பத்தி நடைபெறும் மிகப்பெரிய பகுதியாக தமிழ்நாடு திகழ்கிறது. திருச்சி அருகே, அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட ஜபில் நிறுவனம், இரண்டாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது. ஜபில் நிறுவனம், உலக அளவில் மிகப்பெரிய, உற்பத்தி சார்ந்த சேவை நிறுவனம் ஆகும். இந்த தொழிற்சாலை அமைவதால், கற்றறிந்த, உயர்கல்வி பயின்ற, திறன் வாய்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மாற்றுத்திறன்கள் வாய்ந்த தொழில் வாய்ப்புகள், எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கான ஊக்கத்திட்டங்கள், மற்றும் புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் என, இவை அனைத்தும் ஒரே நேரத்தில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்றன.
தமிழ்நாடு மாநிலம், இந்தியாவின் பசுமை பொருளாதாரம் சார்ந்த தொழிற்சாலை உற்பத்தியில் முன்னணி வகுப்பு வருகிறது. தமிழ்நாடு அரசின் கொள்கைகள் எவ்வாறு பசுமை பொருளாதார வளர்ச்சி சார்ந்த தொழிற்சாலை உற்பத்தியில் தனது பங்களிப்பை வழங்குகிறது? தெரிந்து கொள்ளலாம், வாங்க!
தமிழ்நாடு, மின்சார வண்டிகள், அதாவது எலக்ட்ரானிக் வெகிகிள்ஸ், சூரிய மற்றும் காற்று திறன் உற்பத்தியில் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அளவில் மின்சார உற்பத்தியில், தமிழகத்தின் பங்களிப்பு சுமார் பதினைந்து விழுக்காடாக இருக்கிறது.
ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்கள், ஓசூரில் மின்சார வண்டி உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளனர். மேலும், பணியாளர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் மின்சார வண்டி வாடகை, தமிழ்நாடு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்களுக்காக மின் இருசக்கர வண்டிகளை வாங்க ஊக்கத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி உரிமைக்காக அரசியல் கட்சி துவங்கப்பட்டது, தமிழ்நாட்டில் மட்டும்தான் என கூறலாம். மருத்துவ கல்வியில், சாதிய அடிப்படையிலான அடக்குமுறை இருப்பதை கண்டறிந்து, அதை நீக்கி அனைவருக்கும் சரிசமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, குப்பம் பகுதியைச் சேர்ந்த பனகல் அரசரால் துவங்கப்பட்டது தான் நீதிக்கட்சி.
கல்வி வளர்ச்சியில், அடுத்தடுத்து வந்த அரசியல் தலைவர்கள், முழு முனைப்பு காட்டியதன் பயனாக, இந்தியாவில், கல்வியில் சிறந்து விளங்கும் மாநில பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
காமராஜர் ஐயா அவர்களின், பள்ளி சிறார்களுக்கான உணவுத் திட்டம். எம்ஜிஆர் அவர்கள், அதை விரிவுபடுத்தி, மேற்கொண்ட முயற்சிகள். ஜெயலலிதா அம்மையார் சத்துணவு திட்டத்தை மேலும் விரிவு படுத்தினார். இன்றைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஐயா அவர்கள், பிற்பகல் உணவு உடன், காலை உணவையும் திட்டமாக வழங்கி, பள்ளி செல்லும் குழந்தைகள், இடைநிறுத்தம் இல்லாமல் பயில வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு கல்வியில் எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது. "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் வாழ்க்கைத் திறன்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம், இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
பள்ளி கல்வியில் மட்டுமல்லாமல், தொழில்துறை பயிற்சி நிறுவனம், பல்தொழில்நுட்பக் கல்லூரி, திறன் மேம்பாட்டு நடுவங்கள் போன்றவற்றின் மூலம், தொழில் வாய்ப்புகளுக்குத் தேவையான நுண்ணறிவுகள் வழங்கப்படுகின்றன. இது வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப, மனிதவளத்தை ஏற்பாடு செய்யும் ஒரு சமூக முனைப்பாகும்.
தொழில்துறை மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு மாநிலம், உணவு உற்பத்தி மற்றும் உழவுத் தொழிலுக்கு எத்தகைய முதன்மையை வழங்குகிறது?
தமிழ்நாடு மாநிலத்தைப் பொருத்தவரை, உழவுத் தொழிலை, தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முயற்சிகள் பல இடங்களில் நடைப்பெற்று வருகின்றன. மயிலாடுதுறையில், முதன்மையாக DCAP, அதாவது, மாவட்ட ஊழிநிலை மாற்ற இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஊழிநிலை மாற்றத்தால், உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் முயற்சியாகும்.
அதே நேரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை போன்ற பகுதிகளில், இயற்கை வேளாண் பொருள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. இலக்கமுறை வேளாண்மை திட்டப்பணி, Digital Agriculture Mission மூலம், வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்களுக்கு நிகழ்நேர பசுமை பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.
ஆன்மீக அடிப்படையிலான கருத்து மோதல்கள் இருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, கருத்து அடிப்படையிலான கலந்துரையாடல்களைக் கொண்டது தமிழர் பண்பாடு. ஆசிவகர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சைவர்கள், வைணவர்கள் என பல்வேறு ஆன்மீக கருத்துக்களை, கலந்துரையாடல்கள் மூலம் உள்வாங்கிக் கொண்டு, தனது பண்பாட்டை மெருகேற்றிக் கொண்டது தமிழ் சமூகம். வேத பிராமணர்களையும், கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் அரவணைத்து வாழ்வதும், இதன் அடிப்படையிலான பண்பாட்டு வளர்ச்சியினால் தான்.
ஆயிரக்கணக்கான வரலாற்று சிறப்புமிக்க, கலை வேலைப்பாடுகளுடன் கூடிய, திருக்கோயில்களை கட்டி எழுப்பியுள்ளது தமிழ் சமூகம். இந்த திருக்கோவில்கள், லட்சக்கணக்கான பார்வையாளர்களையும், ஆன்மீகப் பயணிகளையும் ஆண்டுதோறும் ஈர்த்து வருகிறது.
குற்றாலம், ஏற்காடு, பிச்சாவரம் சதுப்புநிலக் காடு, ஒகேனக்கல் போன்ற சுற்றுலா இடங்கள், உள்ளூர் சுற்றுலா பயணிகளையும், ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்றவை வெளிமாநில சுற்றுலா பயணிகளையும், மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, போன்றவை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கிறது.
தமிழ்நாடு சுற்றுலா துறை, இந்திய அளவில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் பயனால், தங்கும் விடுதிகள், கைத்தறி, கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற துறைகள், நேரடியாக வருமானம் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்து தருகிறது.
செட்டி நாட்டு தொன்மையான மாளிகைகள், பண்பாட்டு விழாக்கள் ஆகியவை Heritage tourism வளர்க்கும் முயற்சியாக மாறியுள்ளன. இவை, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகத்திற்கு காட்டும் ஒரு சிறந்த வழியாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமாக சுமார் ஒன்று புள்ளி மூன்று லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளன. இதில் நாட்டின் அதிகளவு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
கன்னியாகுமரியில் துவங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பெரும்பாலான சாலைகள், ஆறு மற்றும் நான்கு வழிச்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில் பல, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. பல சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை மூலமாக, மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்த்து, மாநில நெடுஞ்சாலைகள் பல்வேறு சிறு மற்றும் குரு நகரங்களை இணைக்கின்றன. உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, உள்வட்ட மற்றும் வெளிவட்டச் சாலைகளும், மாநில அரசின் விரைவு சாலைகளும், தமிழ்நாட்டை, சாலை கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக விளங்க வழி வகை செய்கிறது.
நான்கு பன்னாட்டு விமான நிலையங்கள், மூன்று உள்நாட்டு விமான நிலையங்கள், தனியார் விமான நிலையம் என மொத்தம் ஒன்பது விமான நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில், சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் என மூன்று பெரிய துறைமுகங்களும், 17 சிறிய அளவிலான துறைமுகங்களும் உள்ளன. நாகபட்டினம் துறைமுகம், இலங்கைக்கு படகு போக்குவரத்தை மேற்கொண்டு வருகிறது.
கல்வி, தொழிற்சாலை, சாலை மற்றும் பிற போக்குவரத்துக் கட்டுமானம், போன்றவற்றில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு, மருத்துவம் மற்றும் மக்கள் நலனிலும் முதன்மையாக விளங்குகிறது.
அரசு மருத்துவம், தனியார் மருத்துவம், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மருத்துவ கல்வி என பல தளங்களில் தமிழ்நாடு முன்னேற்றமான நிலையை நோக்கிச் செல்கிறது.
தமிழ்நாட்டின் மருத்துவத் துறை, அரசின் திட்டமிடல், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் வாயிலாக இந்திய அளவில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சுமார் ஒன்றரை லட்சம் ஆங்கில மருத்துவம் பயின்று பதிவு செய்த மருத்துவர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில், இது, ஆயிரம் மக்களுக்கு இருநூற்று ஐம்பத்தி மூன்று மருத்துவர்கள் என்கிற விகிதாச்சாரத்தில் உள்ளது. இது, நார்வே மற்றும் ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஒப்பானதாகும். மேலும், பிற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், இரண்டு மடங்காக உள்ளது.
தமிழ்நாட்டில் முப்பத்தியாறுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள், எட்டாயிரத்திற்கும் கூடுதலான முதன்மை மக்கள் நல நடுவங்கள், என பெரு நகரம் முதல் சிற்றூர் வரை, முழுமையான மருத்துவ வசதிகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாடு, கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் மாநிலம் ஆகும். இந்தியாவின் விண்வெளி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கும், தனது முதன்மை பங்களிப்பை வழங்கி வருகிறது. சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நடுவங்கள், ISRO மற்றும் DRDO போன்ற நாட்டின் ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மையான தொழில்நுட்ப நடுவம், திருநெல்வேலி மாவட்டத்தின் பனங்குடி அருகே உள்ள Propulsion Complex - IPRC, இயந்திரம் ஆய்வு மற்றும் திருத்த வேலைகளில் முதன்மை பங்கு வகிக்கிறது.
அதே நேரத்தில், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை IIT தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி, போன்ற கல்வி நிறுவனங்களின் மாணாக்கர்கள் உருவாக்கிய சிறிய செயற்கைக்கோள்கள், விண்வெளியில் வெற்றிகரமாக ஏவி செயல் பட்டு வருகின்றன. இதனால் மாணாக்கர்கள், ஆராய்ச்சி ஊக்கம் பெற்று, தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழ்நாடு, இந்தியாவின் விண்வெளி கனவுகளில் தொழில்நுட்பமும் திறமையும் கலந்த ஒரு அறிவுக் கோட்டையாக திகழ்கிறது!
இந்த அனைத்து வளர்ச்சியும் ஒரே நேரத்தில் பல துறைகளைத் தொட்டுச் செல்லும் ஒரு திட்டமிட்ட வளர்ச்சி. தமிழ்நாடு, தொழில்நுட்பம், விவசாயம், கல்வி, சுற்றுலா, பசுமை சக்தி, மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் ஒரு சிறந்த மாதிரியாக இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது.
இது தான் நண்பர்களே, நம்ம தமிழ்நாடு – வளர்ச்சி பாதையில் திகழும் ஒரு ஒளி முதல் விளக்கு போல. வரும் நாட்களில் இந்த நிலை இன்னும் மேம்பட எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்.
Podcast கேட்டு கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி! மீண்டும் சந்திக்கலாம் – வணக்கம்!