தித்திக்கும் மாம்பழம்.. திகட்டாத மாம்பழம்.. சேலத்து மாம்பழம் என்று பலரும் பாடல்கள் பாடி கேட்டிருப்போம்.
உண்மையில், அந்த மாம்பழங்களின் இருப்பிடம் கிருக்கிணகிரி மாவட்டம்.
கடந்த ஆண்டுகளில், கிருட்டிணகிரி சேலத்துடன் இணைந்து இருந்ததால், கிருட்டிணகிரியின் மாம்பழங்கள் சேலத்தின் அடையாளமாக கூறப்பட்டது.
கிருட்டிணகிரியில் 27-ஆவது அணைத்திந்திய மாங்கனி கண்காட்சி ஞாயிற்றுக் கிழமை (16.06.2019) தொடங்கியது.
கிருட்டிணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி திடலில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.சாந்தி தலைமை வகித்தார்.
தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
கிருட்டிணகிரி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராசேந்திரன் கண்காட்சியைத் தொடக்கிவைத்தார்.
தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் கண்ணன், விவசாயிகள் ராமன், கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் கிருட்டிணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கருநாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உழவர்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த மாங்கனிகளை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தினர்.
அதன்படி மல்கோவா, மல்லிகா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், பெங்களூரா, காதர், இமாம்சந்த் என பல ரக மாங்கனிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
தோட்டக்கலைத் துறை சார்பில், ரோசா, செண்டுமல்லி போன்ற 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்களைக் கொண்டு மாம்பழம், பென்குயின்கள், கிரிக்கெட் உலக கோப்பை ஆகியவைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதேபோல், 14 வகை நறுமண பொருள்களான கிராம்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, பட்டை, சீரகம், ஏலக்காய் என 600 கிலோ எடையில் நாடாளுமன்ற மாதிரியில் கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
விழாவில் அரசுத் துறைகளின் சார்பில் 86 பயனாளிகளுக்கு ரூ.31,75,705 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.








