Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் உழவர்களின் S T R R அணுகு சாலை கோரிக்கை நிறைவேறுமா? இது வெற்று அரசியலா?

S T R R வட்டச்சாலை, ஓசூர் பகுதியில் சுமார் 54 கிலோ மீட்டர் பயணிக்கிறது.  சாலையின் அருகே நிலம் வைத்திருக்கும் உழவர்கள், தங்களுக்கு சாலையை ஒட்டி அணுகு சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.  இதற்காக, அரசியல் கட்சிகளின் பெரும்புள்ளிகள், தாங்களே உழவர்களுக்கு பாதுகாவலன் என்கிற வகையில், உழவர்களின் கோரிக்கையை கையில் எடுத்து, நாளும் பொழுதும் அறிக்கைகள் பல வெளியிடுகின்றனர்!

உண்மையில் STRR என்ன? அணுகு சாலை அமைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவா?  திட்டம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.

STRR என்பதன் விரிவாக்கம் Satellite Town Ring Road, அதன் தமிழாக்கம், துணை நகர வட்டச் சாலை.  இந்த சாலையானது, சுமார் பதினைந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், இருநூற்றி எண்பது கிலோ மீட்டர் நீளத்திற்கு, நான்கு மற்றும் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.

இந்தத் திட்டம், இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டில், அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது.

இரண்டாயிரத்து பதினேளில், இப்போதைய மோடி அரசு, திட்டத்திற்கு பாரத் மாலா திட்டத்தின் கீழ் பணம் ஒதுக்கி, இரண்டாயிரத்து இருபத்து ஆறில் சாலை பணிகளை முடிக்க, சாலை கட்டுமான பணிகளை விரைவு படுத்தியுள்ளது. இந்த சாலை கட்டுமான பணிகளை, தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்கிறது.

இந்தச் சாலை, அளவிடப்பட்ட அணுகல் தன்மை கொண்ட, access controlled highway, அதாவது சாலையின் உள் நுழைதலும், சாலையை விட்டு வெளியேறுதலும், கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.  எடுத்துக்காட்டாக, பெங்களூரு Nice சாலை போன்ற கட்டுப்பாடுகள் கொண்டது.  இந்த சாலையில், பனிரெண்டு இடங்களில் மட்டுமே உள் நுழைதல், வெளியேறுதலும் அனுமதிக்கப்படும்.

முழுக்க முழுக்க, சாலை பயன்படுத்துவதற்கான சுங்கம் வசூலிக்கப்படும்.

S T R R திட்டம் போன்று, இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட எந்த திட்டத்திலும், கட்டணம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளத்தக்க அணுகு சாலை என்பதற்கான வாய்ப்புகள் எள்ளளவும் இல்லை.

திட்டத்தின் உட்பொருள் இப்படி இருக்க, அணுகு சாலை கேட்டு போராடுவதும், அதற்கு அரசியல் சாயம் பூசிக்கொண்டு, நாளது பொழுதும் செய்திகளில் தோன்றுவதும், பொழுதுபோக்காக அமையலாமே ஒழிய, எவ்விதத்திலும் இது பயன் தராது என்று இந்தத் திட்டம் குறித்து நன்கறிந்த வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அரசியல் தலைவர்கள், உண்மையிலேயே உள்ளூர் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என கருதினால், பேரண்டபள்ளி அருகே தமிழ்நாடு அரசின், மலர் ஏல நடுவம் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது.  இதை அரசியல் தலைவர்கள் தலையிட்டு, போராட்டங்கள் என முன்னெடுத்தால், மலர் உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதனால் மலர் உற்பத்தியாளர்கள் இடையே, அரசியல் தலைவர்களின் செல்வாக்கு உயரும் எனவும்,

ஓசூர் உழவர் சந்தையில், முழுக்க முழுக்க வணிகர்கள், அடியாட்களை கொண்டு மிரட்டுபவர்கள், மற்றும் பொறுப்பற்ற அரசு அலுவலர்களின் கையில் சிக்கி, சீரழிந்து வருகிறது.  அதை சீர் செய்து, உண்மையான உழவர்கள் பயனடையும் விதமாக, அமைத்துக் கொடுத்தால், அத்தகைய அரசியல் தலைவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும், தன்னார்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: