கழிவு நீர் கால்வாய் அடைப்பு குறித்து ஏற்பட்ட வாய் தகராறு, 2 குடும்பத்தினருக்கு இடையே கடிக்க பாயும் அளவிற்கு தகராறாக முற்றியுள்ளது.
ஓசூர் முதல் சிப்காட் பேகேபள்ளி பகுதியில் வெஸ்ட் வியூ என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வரும் கல்யாண் குமார் என்பவரது வீட்டின் அருகே, தனியார் பெரிய மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் கார்த்திக், என இருவரும் குடும்பத்துடன் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இதில், கல்யாண் குமார் குடியிருக்கும் வீட்டின் கழிவு நீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால், அவர்களது வீட்டின் கழிவு நீர், கார்த்திக் வீடு முன் கடந்து சென்றுள்ளது.
கார்த்திக், கல்யாண் குமாரிடம், கழிவுநீர் ஓடையை சரி செய்யும் படி கோரிக்கை விடுத்துள்ளார். சரி செய்வதற்கு நாட்கள் கடந்ததால், இரு குடும்பத்தார் இடையே, வாய் தகராறு ஏற்பட்டதாக காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தீபாவளியை முன்னிட்டு கார்த்திக் வீட்டிற்கு ஏராளமான உறவினர்கள் வந்ததாகவும், சாக்கடை தகராறை அவர்கள் கும்பலாக கையில் எடுத்து, கல்யாண் குமார் வீட்டினுள், அவரது குடும்பத்தாரை தாக்கும் விதமாக புகுந்ததாக கூறப்படுகிறது.
தாங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், மனிதர்களால் கடிக்கப்பட்டதாகவும், கல்யாண் குமார், அவரது மகன் ராகுல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக, இரு குடும்பத்தாரையும் அழைத்து, காவல் துறையினர் வினவி வருகின்றனர்.








