டிவிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுந்தரம் ஆட்டோ கிளேட்டோன் என்னும் தொழிற்சாலையில், ஓசூரை அடுத்த செக்கிலிபாளையம் ஊரைச் சேர்ந்த 26 வயதுடைய நவீன், கழிவுநீர் தூய்மைப்படுத்தும் பிரிவில், இயக்குபவராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த நாள், தண்ணீர் தொட்டியில் விழுந்த அவர், உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடலை மீட்ட தொழிற்சாலையினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
தொழிற்சாலை முன் குவிந்த நவீனின் உறவினர்கள், நவீன் மரணத்தில் ஐயம் இருப்பதாகவும், இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும், நவீனின் உறவினர் ஒருவருக்கு, தொழிற்சாலையில் நிரந்தர பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து தொழிற்சாலை முன்பாக போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மத்திகிரி காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, 50க்கும் மேற்பட்ட காவல் துறை காவலர்களை பாதுகாப்பிற்கு பணியமர்த்தினர்.
சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டம், தொழிற்சாலை மேலாண்மை வழங்கிய சில உறுதி மொழிகளை ஏற்று, முடிவிற்கு வந்தது.








