Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் மூகண்டபள்ளியில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தாய் மற்றும் மகன் சாலை விபத்தில் பலி

ஓசூர் கிட்டப்பா குட்டை பகுதியைச் சேர்ந்தவர் 38 வயது அஸ்லாம். இவரது மனைவி 32 வயது நஸ்ரின். இவர்களுக்கு ஏழு மற்றும் ஒரு வயதில் என 2 மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் இன்று அஸ்லாம் தனது மனைவி மற்றும் மகன்களோடு கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஓசூருக்கு பேருந்தில் வந்த அவர்கள் மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர்.  

சாலையின் எதிர்ப்புறம் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்வதற்காக நெடுஞ்சாலையை சாலையை கடந்துள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற ஒரு லாரி இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் நஸ்ரினும் அவரது ஏழு வயது மகன் அயானுவும் பலத்த காயமடைந்தனர். 

இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் அஸ்லாமுக்கு தலை, கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நஸ்ரின் கையில் வைத்திருந்த ஒரு வயது குழந்தை அப்துல்லா கீழே விழுந்ததால் தலையில் லேசான காயத்துடன் உயிர் தப்பியது. ஓசூர் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுனரிடம் வினவி வருகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: