Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் 2000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு? மோசடியில் ஈடுபடுபவர்கள் தடயங்கள் இன்றி தப்பிப்பது எப்படி?

தொழில்தொடர்பு துறையும், தொழில்நுட்பத்துறையும் மின்னல் வேகத்தில், நொடிக்கொரு மாற்றத்தை கொண்டு, வளர்ந்து வரும் நிலையில், அதை சார்ந்த மோசடிகள், கற்பனைக்கு எட்டாத வகையில் மேற்கொள்ளப்படுகிறது. 

"மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்ற திரைப்பட வசனத்திற்கு ஒப்பாக, மனிதர்களின் அறிவிற்கு இந்த மோசடி உணர்ந்து கொள்வதற்கு முன்பே, மோசடிகளை செய்தவர்கள், தடயங்கள் இன்றி தப்பித்து விடுகின்றனர். 

ஒன்றிய அரசை பொருத்தவரை, GST, ஒவ்வொரு மாதமும், இவ்வளவு ஜிஎஸ்டி வசூலித்தோம் என்கிற அறிக்கையில், சாதனை பட்டியல் வெளியிடப்படுகிறது.  ஆனால் நாளொரு பொழுதும், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான ஜிஎஸ்டி ஏய்ப்புகள் குறித்த தகவல்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கின்றன.

GST மோசடியில் ஈடுபடுவது, இலக்கமுறை, அதாவது Digital வழியில் GST விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படுவதில் துவங்குகிறது. 

GST பதிவு எண் பெறுவதற்கு, நிகழ்நிலை, அதாவது Online இல் ஆவணங்களை பதிவேற்றினால் போதும்.  அவை, சரிபார்க்கப்பட்டு, GST பதிவு எண் வழங்கப்படுகிறது. ஆவணங்களாக, வாடகை ஒப்பந்தம், ஆதார் எண் நிகழ்நிலையில் OTP மூலமாக ஒப்புதல் இருந்தால் போதும்.  இதை மோசடிக்காரர்கள் தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். 

தனிமனித தரவுகளை, எவ்வாறு அரசுகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி, பொது வழியில் வெளியிடுகின்றன, என்பது குறித்து பார்க்கலாம்! 

மின் இணைப்பு எண், வீட்டின் வெளிப்புற கதவுகளில், மின்வாரியத் துறையினர் குறித்து வைத்துச் செல்கின்றனர்.  இந்த எண் பயன்படுத்தி, எளிதாக உரிமையாளரின் பெயர்,  மற்றும் முழு முகவரி என எல்லாம் மின்வாரியத்தின், மின் கட்டணம் செலுத்தும் இணையதளத்தில் கிடைத்து விடுகிறது.  அதாவது தனிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய தரவுகள், எவ்வித பாதுகாப்பும் இன்றி, பொதுவெளியில் அரசின் இணையதளமே வெளியிட்டு விடுகிறது. 

இந்த தரவுகளை பயன்படுத்தி, வாடகை ஒப்பந்தத்தை, கட்டிட உரிமையாளர் அறியாமலேயே, 20 ரூபாய் முத்திரை தாளில் மோசடிக்காரர்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

ஆதார் எண் சரிபார்ப்பிற்கு, இ சேவை நடுவங்கள் மோசடி கும்பல்களுக்கு உறுதுணையாகி விடுகின்றன.  அரசின் சேவையை, தனியாரிடம் ஒப்படைக்கும் பொழுது, அந்த நபரின் பின்னணி குறித்து ஆய்வு செய்வதற்கு, முறையான வழிமுறையை, இ சேவை நடுவங்களுக்கு உரிமம் வழங்கும் போத, அரசு மேற்கொள்வதில்லை என தெரிவிக்கின்றனர், இது தொடர்பில் நன்கறிந்தவர்கள்..  உரிமம் அளித்த பின்னும், இ சேவை நடுவங்களை நடத்துபவரின் பின்னணி மற்றும் அவர் செயல்பாடுகள் குறித்து எவ்விதத்திலும் கண்காணிப்பதில்லையாம். 

GST மோசடியை பொறுத்தவரை, அரசே மோசடிகளுக்கு வழிவகை செய்கிறது என்று சொன்னால் மிகையாகாது என்று, தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

GST பதிவு எண் பெற்றவர்கள், இந்த மோசடிகள் மூலம், எந்த வகையில் பணம் ஈட்டுகிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்!

முறைகேடாக GST யை பெறுபவர்கள், கும்பலாக செயல்படுகின்றனர்.  அவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இத்தகைய முறைகேடாக பதிவு செய்யப்பட்ட GST பதிவு எண் கொண்ட நிறுவனங்களை, Network போல அமைத்துக் கொள்கின்றனர். எந்த பொருளும் இந்த நிறுவனங்களால் உண்மையில் விற்கப்படுவதும் இல்லை, வாங்கப்படுவதும் இல்லை.  ஆனால், இந்த மோசடி நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை மேற்கொண்டு கொள்வதாக  கணக்கில் மட்டும் அரசுக்கு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது.  இத்தகைய போலி Turnover கணக்கு காட்டி, வங்கிகளிடம், இந்த மோசடி கும்பல், ஒன்றிய அரசின் கடன் திட்டங்களை பயன்படுத்தி, கடன் பெற்றுக் கொள்கின்றனர். 

இந்த மோசடிகளை, GST ஏய்ப்பு என்று சொல்வதைக் காட்டிலும், கடன் பெற்று மோசடி என்று சொல்வதே சரியாக இருக்கும். 

இந்த மோசடிகளுக்கு தண்டனை பெற்றவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?

குறிப்பாக, GST ஏய்ப்புகளில் ஈடுபட்டதாக அடையாளம் காட்டப்படுபவர்கள், சிற்றூர் பகுதியில், ஏழ்மை நிலையில், அடித்தட்டு நிலை வாழ்வாதாரத்தை கொண்ட மக்களே!

GST கட்டவில்லை என GST அமைப்பு, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட ஆதார் எண் கொண்ட நபருக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வரியைச் செலுத்த ஆணையிடும்பொழுது தான், இந்த மோசடி வெளிச்சத்திற்கு வருகிறது. 

பெரும்பாலும் இதில், குற்றவியல் நடவடிக்கைகள் தீவிரம் காட்டப்படுவது இல்லை எனவும், அதனால்தான், மோசடி நபர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. 

ஓசூரை பொருத்தவரை, சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல் இத்தகைய GST மோசடி நடைபெற்று இருப்பதாக, தகவல்கள் கிடைக்கின்றன. 

மோசடியை தவிர்ப்பதற்கு, அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் என்ன?

இந்த மோசடியை தவிர்ப்பதற்கு, இப்பொழுது, முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து, GST விண்ணப்பதாரர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர், GPS குறியீடு கொண்ட புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.  அதாவது, GPS குறியீடுகளும், புகைப்படத்தில், போலியாக நிகழ்நிலை தளங்கள் மூலம் விலை இல்லாமல் அமைத்துக் கொள்ளலாம் என்கிற தொழில்நுட்ப தகவல் இந்த வழிமுறையை முன்மொழிந்தவர்களுக்கு  தெரியவில்லை. 

மின்கட்டணம் செலுத்தியதற்கான சான்றின் நகல் மற்றும் சொத்து வரி செலுத்தியதற்கான சான்றின் நகல் என சில சான்றுகளையும் GST அமைப்பு கேட்கிறது.  போலியாக NEET தேர்வு சான்றிதழ்களை ஏற்படுத்திக் கொண்டு, வடநாட்டில் இருந்து, 2000 கிலோ மீட்டர் பயணித்து, தமிழகத்தின் கல்வித் துறையை ஏமாற்ற முயலும் நபர்களால், சொத்துவரி சான்று போன்றவற்றை போலியாக ஏற்படுத்திக் கொள்வதற்கு, நொடிப்பொழுதுகள் போதுமே! 

மோசடிகள் மூலம், பொதுமக்களின் வரிப்பணத்தை, ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடனாக வழங்கி ஏமாற்றப்படுவதை தவிர்ப்பதற்கு தீர்வுதான் என்ன?

ஒன்றிய அரசு, குறிப்பாக நிதித்துறை அமைச்சகம், இது தொடர்பில் தீவிரமாக கண்காணித்து, தேவையான சட்ட வழிமுறைகளை ஏற்படுத்தி,  மோசடிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதவரை, ஜிஎஸ்டி ஏய்ப்புகள் மூலம் கடன் மோசடிகள் நடைபெறுவது,  தொடர்கதையாகத் தான் இருக்கும்.  இந்த மோசடிகள் தொடர்வதால், அரசு ஈட்டிய வரி, மோசடியாளர்கள் சுருட்டி செல்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கத் தான் செய்யும், என்று தன்னார்வலர்களும் நிதி துறையை அறிந்தவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: