Hosur News, ஓசூர் செய்திகள் - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை Facebook மூலம் அழைத்ததால் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் நேரில் ஆய்வு

ஓசூர் அருகே தளி சட்டமன்ற தொகுதி ஆனேகொள்ளு ஊராட்சி டி புதூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை வளர்மதி பள்ளி கல்வித் துறை அமைச்சரின் பேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் "எங்கள் பள்ளியில் 33 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைவரும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை நன்றாக எழுதப் படிக்க தெரிந்தவர்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என அழைப்பு விடுத்தார். 

தலைமை ஆசிரியையின் பதிவிற்கு தனது பதிலாக "அழைப்பிற்கு நன்றி. விரைவில் வருகிறேன்" என அமைச்சர் பதிவிட்டார்.  

இந்த நிலையில் இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஓசூர் அருகே உள்ள டி புதூர் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த பள்ளியில் மொத்தம் 33 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். அப்போது அமைச்சர் மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களை படித்துக் காட்ட செய்தார். மேலும் கரும்பலகையில் மாணவர்களை எழுத சொல்லிய அமைச்சர் வாய்ப்பாடுகளையும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தன்னை துணிச்சலுடன் அழைத்த பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் கல்வித் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: