D Pharm மட்டுமே பயின்ற, 34 வயதுடைய கௌரி என்பவர், ஓசூர் அரசநட்டி பகுதியில், ஆங்கிலம் மருத்துவம் பார்க்கும் மருத்துவமனை, ஆய்வுக்கூடம் மற்றும் மருந்தகம் ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். இவரது மருத்துவமனையில், பணியாற்றி மருத்துவம் பயின்ற, ஒசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த சிலம்பரசி, 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த நிலையில், அவரும் நோயாளிகளுக்கு தனியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, மற்றும் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் ஓசூர் சிப்காட் காவல்துறையினர், ஆய்வு மேற்கொண்டு, இருவரையும் கைது செய்து, அவர்கள் நடத்தி வந்த மருத்துவமனை, ஆய்வுக்கூடம், மற்றும் மருந்தகம் ஆகியவற்றிற்கு மூடி முத்திரை இட்டுச் சென்றனர்.








