Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் பேருந்து நிலையம் எதிரே, மற்றுமொரு மலர் வணிக வளாகம்! மலர் விற்பனையாளர்கள் வரவேற்பு!

ஓசூர் பேருந்து நிலையம் எதிரே, இரண்டு மலர் வணிக வளாகங்கள் உள்ளன. அவை இரண்டும், தனிநபர்களுக்கு உரிமையானது.  இந்த இரு மலர் வணிக வளாகங்களில் இடம் கிடைக்காத ஏராளமானவர்கள், ஓசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில், கடை அமைத்து பூக்களை விற்று வருகின்றனர். 

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருவதால், பயணிகளும், பொதுமக்களும் அல்லல் பட்டு வந்தனர். 

இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு சார்பில் ஓசூரில் புதிய மலர் வணிக வளாகம் கட்ட வேண்டும் என, ஒசூர் பகுதி மலர் விற்பனையாளர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து சட்டமன்றத்தில், தமிழக முதலமைச்சர்,ஓசூரில் புதிய மலர் வணிக வளாகம் கட்டப்படும், என அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் ஓசூரில் பேருந்து நிலையம் அருகே, அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் காமாட்டீசுவரர் கோவிலின் இடத்தில், கோயில் பணம் சுமார் 76 லட்சம் மதிப்பில், 98 கடைகளுடன் மலர் வணிக வளாகம் கட்டப்பட்டது. 

இந்த புதிய மலர் வணிக வளாகத்தை, தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று, புதன்கிழமை காலை, திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஓசூரில் வணிக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி, இனிப்புகள் வழங்கி, மலர் வணிக வளாக கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: