இந்தி தான் எமது தாய் மொழி, தமிழ் மொழி பள்ளியில் என்னை மனிதர்களுள் ஒருவராக கருதி, என்னையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால், முதல் ஆளாக பள்ளியில் சேர தயாராக உள்ளேன். என்னுடன், சுமார் 50 குழந்தைகள் பள்ளி செல்லும் வயதில் உள்ளனர். ஓசூர் மக்களே எங்களுக்கு உதவுங்கள், என்றென்றும் நன்றியுடன் இருப்போம் என அழுகுரலுடன் நிற்கும் இவர்கள் யார்?
அருகில் செல்வதற்கு கூட, அருவருத்து ஒதுங்கும் மக்கள்! கல்வி, உணவு, குடிநீர், உடுத்த ஆடை, இருக்க ஒரு இருப்பிடம், மருத்துவம், இவற்றில் ஏதாவது ஒன்று, மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம், இவற்றில் ஏதாவது ஒன்று இந்த மக்களுக்கு கிடைக்குமா? யார் இந்த மக்கள்? நெஞ்சை உலுக்கும் வாழ்க்கை முறை!
இந்த மக்கள், Jogi என்ற ஜாதியப் பிரிவை சார்ந்தவர்கள். விக்கிபீடியாவில், இவர்களை பிராமணர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிபீடியா போன்றவற்றில், அடிப்படை உணவிற்கு கூட வழியில்லாத இந்த நாடோடி பழங்குடியினரை, உள்நோக்கத்துடன் பிராமணர்கள் என்று அடையாளப்படுத்தி, அடிப்படை சலுகைகளை தடுக்கும் முயற்சி மட்டுமே நடந்தேறி வருகிறது, என்று வருத்தம் தெரிவிக்கின்றனர், தன்னார்வலர்கள்.
மதமாற்றத்தைக் கொள்கையாகக் கொண்ட வெளிநாட்டு அமைப்பின் இணையதளம், இந்த ஜோகி இன மக்கள் தான், யோகா பயிற்சி முறையை உலகம் முழுவதற்கும் வழங்கியவர்கள், என தெரிவிக்கிறது. நாடு முழுவதும், அடிப்படை வசதிகள் இன்றி வாழும் இந்த நாடோடி இனத்தின் மொத்த எண்ணிக்கை 37 லட்சம் என்று அவர்களின் தரவு தெரிவிக்கிறது. இந்த இன மக்கள், சிவனை கடவுளாக வணங்குபவர்கள் எனவும் தெரிவிக்கிறது.
ஓசூர் தின்னூர் அருகே, ஓசூர் ரயில் நிலைய தண்டவாளத்திற்கு அடுத்து, 40 க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைத்து, அதில் சுமார் 50 குழந்தைகள் உட்பட, 250 பேர், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி உயிர் வாழ்கிறார்கள்.
இவர்களைக் கண்டாலே, பகுதி மக்கள், அருவருத்து ஒதுங்கிச் செல்கின்றனர். எம்மிடம் பலர், இந்த மக்களை உடனடியாக இங்கிருந்து அப்புறப்படுத்த உதவுங்கள், என்கிற கோரிக்கையையும் வைத்தனர்.
இவர்கள், உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ பகுதியைச் சேர்ந்தவர்களாக, தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆங்கிலம் கலந்த இந்தி பேசும் இவர்கள், எந்த மொழியையும் எழுத படிக்க தெரியாதவர்கள். மக்களிடம் கையேந்தி பிச்சை கேட்கும் இவர்கள், அரசுகள் வழங்கும் சலுகைகளை பெற்றுக் கொள்ள, ரேஷன் அட்டை முதற்கொண்டு எந்த அடிப்படை அரசு சார்ந்த அடையாள அட்டைகளையும் இவர்கள் வைத்திருக்கவில்லை. இவர்களுக்கு எந்த அரசும், ஒரு துளி தண்ணீரோ, ஒரு பருக்கை அரிசியோ, விலை இல்லாமல் வழங்குவது இல்லை. பிச்சை எடுத்து மட்டுமே பிழைக்கின்றனர். இவர்களுக்கு மொழி தெரியாததாலும், நாடோடி வாழ்க்கை வாழ்வதாலும், யாரும் இவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது இல்லை. இவர்கள் வாழும் பகுதிக்கு நாம் சென்றபோது, கழிவறை, சமையலறை, படுக்கையறை, நடமாடும் பகுதி, குப்பை கொட்டும் பகுதி என எல்லாம் ஒரே இடத்தில் இருந்தது.
இந்தி தெரிந்த நபருடன், அங்கிருந்த சிறார்களுடன் உரையாடிய போது, சிறுமி ஒருவர், தனக்கு பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்க ஆசை என்று எம்மிடம் கெஞ்சி நின்றார். அவருடன் சேர்ந்து, பல சிறுவர்களும், தாங்களும் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நாடோடிகள், சுமார் 15 ஆண்டுகளாக, ஓசூரில் தங்கி, பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, தகவல்கள் திரட்டப்பட்டு, அத்தகைய குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று திட்டம் கூறுகிறது. அரசின் பாராமுகத்தால், இந்த குழந்தைகளின் வாழ்க்கையும் பிச்சை எடுத்து சீரழியும் நிலையில் உள்ளது.
அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி, பள்ளி செல்லாமல், பிச்சை எடுப்பதை தங்களது வாழ்க்கை முறையாக வைத்திருக்கும் இவர்களை, மீட்டெடுத்து, பயனுள்ள இந்திய குடிமக்களாக மாற்ற வேண்டும், என தன்னார்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
ஓசூரில், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலை கொண்ட நல்லுள்ளங்கள் உடனடியாக, தின்னூர் சைதன்யா பள்ளி அருகே அமைந்துள்ள இந்த கூடாரத்தில் வாழும் மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். அங்கு வாழும் இளம் வயதினர், வேலைக்குச் சென்று முறையாக வாழ்க்கை அமைத்துக் கொள்வதில் ஆர்வமுடன் உள்ளனர். தங்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை என்பதே அவர்களின் வருத்தமாக உள்ளது.








